மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

வெளிநாட்டு சுற்றுலா எட்டாக் கனியல்ல!

வெளிநாட்டு சுற்றுலா எட்டாக் கனியல்ல!

ஒரு கப் காபி!

நண்பர் ஒருவர் வருடத்துக்கு ஒருமுறை ஃபேஸ்புக்கில் தனது வெளிநாட்டு பயணங்கள் பற்றிய புகைப் படங்களை தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாடு என்று குறிவைத்துச் சென்று ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தங்கி விதம்விதமாக அனுபவித்து அவற்றை புகைப்படங்களோடு பகிர்ந்து கொள்வார்.

அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் அவரது நண்பர்கள் நான் உட்பட அனைவருக்கும் தோன்றும் ஒரே எண்ணம், “இந்த மனுஷன் எப்படி கரெக்டா ஒவ்வொரு வருஷமும் வெளிநாடு போயி என்ஜாய் பண்றாரு? எவ்வளவு திட்டம் போட்டாலும் இந்தா இருக்கிற ஊட்டி, கொடைக்கானல் கூட நம்மால போக முடியலையே?” என்ற ஒரு அங்கலாய்ப்பு இயல்பாகவே மனதில் எழும்.

இந்த வருட வெளிநாட்டு டூர் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் போது எங்களது அங்கலாய்ப்புக்கு பதிலும் அளித்து வழியும் காட்டியிருக்கிறார் அந்த நண்பர். ஆமாம்... அவரது யோசனை இதுதான்.

“கடந்த 10 ஆண்டுகளாக ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளேன். இது எப்படி சாத்தியம் என்று உங்களில் பலருக்கும் தோன்றலாம். இலங்கையிலிருந்து எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய ஒருவர் அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார். அவர்தான் இந்தியாவில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வெளிநாட்டு சுற்றுலா என்பது எட்டாக்கனி அல்ல, பயிற்சியோடு முயற்சி எடுத்தால் பதமாக பறிக்கக்கூடிய கனிதான் என்று சுட்டிக்காட்டினார்.

அவரது அறிவுரைப்படி ஒவ்வொரு மாதமும் ஐந்தாயிரம் ரூபாய் வெளிநாட்டு பயணத்துக்கு என்று எடுத்து வைத்து விட வேண்டும். முதல் ஆறு மாத சேமிப்பின் முடிவில், விமான டிக்கெட்டை ஆறு மாதங்களுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்திட வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் பாதி விலையில் விமான டிக்கெட் கிடைத்துவிடும்.

அதேபோல எந்த நாட்டுக்கு போகிறோமோ அந்த நாட்டின் காலநிலை என்ன என்பது பற்றியும் அடிப்படை தகவல்களை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பயணத்தை தவிர்த்தால் செலவுகள் குறையும். காரணம் மேற்கத்திய நாட்டினர் இந்த மாதங்களில் கிடைக்கும் கிறிஸ்துமஸ் விடுமுறையில்தான் அதிகமான வெளிநாட்டுப் பயணங்களைத் திட்டமிட்டு அமைக்கிறார்கள். அதனால் அவர்களைக் குறிவைத்து விலைவாசி உயர்ந்துவிடும். மேலைநாட்டினரைப் போல் சுற்றுலாவுக்கு நம்மால் செலவு செய்ய முடியாது.

முதல் ஆறு மாத சேமிப்பு விமான டிக்கெட்டுக்கு. அடுத்த ஆறு மாத சேமிப்பு இதர பயண செலவுகளுக்கு என்று திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றிப் பாருங்கள்; நீங்களும் இந்தியாவைச் சுற்ற்றியுள்ள சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட நாடுகளுக்கு ஜாலியாக போய் வரலாம்” என்று சொல்லியிருக்கிறார் அந்த நண்பர்.

வாய்ப்புள்ளவர்கள் இதை பின்பற்றலாம். ஊட்டி, கொடைக்கானலுக்கு பதில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என்று வலம் வரலாம்!

வியாழன், 29 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon