பிரசாந்தை இயக்கும் கெளதம் மேனன்

தேசிய விருது பெற்ற பிரபல இந்தி திரைப்படமான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை கெளதம் மேனன் இயக்க, பிரசாந்த் நடிக்கவுள்ளார்.
ஆயுஷ்மன் குரானா, தபு நடித்த இந்திப் படமான அந்தாதுன் திரைப்படம் சென்ற ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படம் 32 கோடி பட்ஜெட்டில் உருவாகி 450 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளது. இந்தப் படம் தி பியானோ டியூனர் என்ற பிரெஞ்சு படத்தின் தழுவலாகும். விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம் சென்ற ஆண்டுக்கான சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளையும் வென்றது.
இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் விரும்பியதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வலம்வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளார் என தற்போது வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் குறித்த அறிவுப்பு வெளியான சமயத்தில் தியாகராஜன், அனுபவமுள்ள முன்னணி இயக்குநர் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கெளதம் மேனன் தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க வருண் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது.
நீண்ட கால காத்திருப்புக்குப் பின், கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான எனை நோக்கிப் பாயும் தோட்டா வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க
லண்டனில் திருமாவளவனுக்கு நடந்தது என்ன?
கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!
வெளிநாடு புறப்படுகிறார் எடப்பாடி: இரு வார அரசியலில் என்ன நடக்கும்?
எடப்பாடி பயண மர்மத்தை உடைக்கும் ஸ்டாலின்