மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

எடப்பாடி பயண மர்மத்தை உடைக்கும் ஸ்டாலின்

எடப்பாடி பயண மர்மத்தை உடைக்கும் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கான மர்மம் என்ன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் தற்போது ஸ்டாலின், ”முதல்வர் வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்துள்ள மர்மங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்து புறப்பட்டார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதற்கான மர்மம் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் முதல்வர் பயணத்தில் இருக்கும் மர்மம் என்ன என்று ஸ்டாலின் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வெளிநாடு செல்வதற்கு முன்பு முதல்வர் பேட்டி அளித்திருப்பது ‘கேழ்வரகில் நெய் வடிகிறது கேளுங்கள்’ என்ற முதுமொழியைப் போல் இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது 'முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு' 2015ல் நடத்தப்பட்டது. 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு 'இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு' 2019ல் நடைபெற்றது. 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்டி விட்டதாக, ஜெயலலிதாவை விட ஒருபடி மேலே போய், ஆடம்பரமாக விளம்பரம் செய்யப்பட்டது.

இந்த இரு மாநாடுகளிலும் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரப் போவதாகச் சொன்ன 5.42 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா?. புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட தொழிலதிபர்களிடம் இந்த முதலீடுகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டதா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

”முதலீடுகள் பெறுவதற்காக செல்லும் என் வெளிநாட்டுப் பயணத்தைக் கொச்சைப்படுத்துவதா? என்று முதல்வர் கேட்டிருக்கிறார். நான் கேட்பது ஒரேயொரு கேள்விதான்.

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறைச் செயலாளர்களுடன் வெளிநாடுகளுக்கு அரசு செலவில் சென்றார்கள். உலக முதலீட்டாளர்களைக் கவருவதற்காக நாங்கள் செல்கிறோம் என்று அறிவித்தார்கள். அப்போதே முதல்வரும் போயிருந்தால் - அது வேறு விஷயம். ஆனால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்து ஏழு மாதங்கள் கழித்து முதலமைச்சர் வெளிநாடு போவது ஏன்? .

“மு.க.ஸ்டாலின் மட்டும் ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறார்” என்று இன்னொரு கேள்வி எழுப்பியிருக்கிறார் துணை முதலமைச்சராக இருந்த நேரத்தில் நான் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றிருக்கிறேன். ஆனால், அப்போது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் நிதியுதவி பெற்று வந்திருக்கிறேன்.

என்னுடைய தனிப்பட்ட பயணங்கள் எல்லாம் வெளிப்படையானவை. குடும்பத்தினருடன் செல்லும் சொந்தப் பயணங்களுடன், அரசுமுறை பயணமாகப் போவதை எடப்பாடி பழனிசாமி ஒப்பிடுவது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல” என்று விமர்சித்துள்ளார் ஸ்டாலின்.

முதல்வர் பயணம் குறித்து பேசிய அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், “எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்று இல்லாமல் முதலீடுகளை ஈர்த்து வந்தால் சந்தோஷம். தமிழகத்துக்கு முதலீடுகளைப் பெற்று வருவதற்காகச் செல்வதில் எந்த தவறும் இல்லை. முதலீடுகள் வருகிறதா என்று பார்ப்போம். வெயிட் அண்ட் சி… முதல்வர்கள் எல்லாம் வெளிநாடுகள் சென்றால் பொறுப்பை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு செல்வார்கள். ஆனால் இப்போது டெக்னாலஜி வளர்ந்து விட்டது. அதனால் தானே பார்த்துக் கொள்கிறேன் என்ற நிலை இருக்கிறதென்றால் நம்பிக்கையின்மையும் பயமும் தான் காரணம். இந்த ஆட்சியையே கவிழ்க்க எதிர்த்து வாக்களித்தவர்தான் பன்னீர் செல்வம். அப்போது காப்பாற்றிய எம்.எல்.ஏ.க்களை தற்போது பதவி இல்லாமல் செய்துவிட்டார்கள். அதிமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி. ஆட்சி, அதிகாரம் கையில் இருப்பதால் ஒன்றாக இருக்கிறது. ஆட்சி முடியட்டும், நெல்லிக்காய்கள் சிதறிவிடும்” என்று விமர்சித்தார்.

ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், எதற்கெடுத்தாலும் குதர்க்கமாக பேசினால் அதற்குப் பதில் சொல்ல முடியாது. இவர்கள், ’தான் திருடி பிறரை நம்பார்’ என்ற பழமொழிக்கு சொந்தகாரர்கள். இவர்களின் வெளிநாடு பயணம் என்பதெல்லாம் சம்பாதித்த சொத்துக்களை அங்கே போய் முதலீடு செய்வதற்காகத்தான். அங்குப் போய் காம்ப்ளக்ஸ், ரெஸ்ட்ராண்ட் கட்டுவார்கள். இதெல்லாம் இவர்களுக்கு கை வந்த கலை” என்றார்.


மேலும் படிக்க


லண்டனில் திருமாவளவனுக்கு நடந்தது என்ன?


கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!


வெளிநாடு புறப்படுகிறார் எடப்பாடி: இரு வார அரசியலில் என்ன நடக்கும்?


டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டியில் உதயநிதி- திமுக, அதிமுக வியூகம்!


ஸ்டாலின் வெளிநாடு செல்லும் மர்மம் : எடப்பாடி


புதன், 28 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon