மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 28 மே 2020

ஸ்டாலின் வெளிநாடு செல்லும் மர்மம் : எடப்பாடி

ஸ்டாலின் வெளிநாடு செல்லும் மர்மம் : எடப்பாடி

முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதற்கான மர்மம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

14 நாட்கள் அரசு முறை பயணமாக லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை தனது சென்னை இல்லத்திலிருந்து புறப்பட்டு விமான நிலையம் சென்றார். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேனி எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகள், முதல்வரை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர். அதில் சிலர் முதலமைச்சரின் காலில் விழுந்து வணங்கினர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை முதல்வர் பழனிசாமி சந்தித்தார். “வெளிநாட்டுக்குச் சென்று தொழிலதிபர்களைச் சந்தித்து, தொழில் தொடங்க தமிழகத்துக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தால், அதிகளவில் தமிழகத்துக்கு தொழில் முதலீட்டாளர்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்த பயணம் அமையும். வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் முடிந்து திரும்பிய பிறகு எவ்வளவு முதலீடு தமிழகத்துக்கு வரும் என்பதை ஊடகத்திடம் தெரிவிக்கிறேன்” என்றார்.

முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து ஸ்டாலின் விமர்சனம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், தன்னை விமர்சிக்கும் ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதன் மர்மம் என்ன?. அவர் சொந்த காரணங்களுக்காக வெளிநாடு செல்கிறார். நான் தொழில் அதிபர் அல்ல. சாதாரண விவசாயிதான் என்று பதில் அளித்தார். தமிழகத்தில் பொருளாதாரம், வேலைவாய்ப்புகள் மேம்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உடனேயே தொழிற்சாலைகள் இங்கு வந்துவிடாது என்றும் குறிப்பிட்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பைத் தொடர்ந்து 9.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். முதலில் லண்டனில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழிமுறைகளை அறிந்துகொள்ள ஐ.பி.ஸ்விட்ச் - ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தையும் அவர் பார்வையிடுகிறார். இறுதியாக இங்கிலாந்து எம்.பி.களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இங்கிலாந்து பயணத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 1ஆம் தேதி இரவு புறப்பட்டு செப்டம்பர் 2ஆம் தேதி நியூயார்க் செல்லும் அவர், அமெரிக்கத் தமிழ் முனைவோர் கூட்டமைப்பின் நிர்வாகிகளைச் சந்திக்க இருக்கிறார். மேலும் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.

அமெரிக்கா பயணத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 7ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்படும் முதல்வர், துபாய் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். பின்னர் செப்டம்பர் 10ஆம் தேதி துபாய் விமான நிலையத்திலிருந்து சென்னை வருகிறார்.

முதல்வரின் இந்த சுற்றுப்பயணத்தில் அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முதல்வரின் செயலாளர்கள் விஜயகுமார், சாய்குமார் உள்ளிட்டோர் செல்கின்றனர். மருத்துவர்கள் போராட்டத்தால் முதலில் முதல்வருடன் விஜயபாஸ்கர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் விஜயபாஸ்கரும் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் குறித்துப் பேசிய விஜயபாஸ்கர், நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான ஒப்பந்தம், கிங்ஸ் மருத்துவமனையைச் சென்னையில் நிறுவுவதற்கான ஒப்பந்தம், பயிற்சி மற்றும் பணிக்காக இங்கிருந்து செவிலியர்களை அங்கு அழைப்பதற்காகவும் லண்டனில் ஒப்பந்தம் போடப்படும் என்று தெரிவித்துள்ளார்

கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


மேலும் படிக்க


கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!


வெளிநாடு புறப்படுகிறார் எடப்பாடி: இரு வார அரசியலில் என்ன நடக்கும்?


டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டியில் உதயநிதி- திமுக, அதிமுக வியூகம்!


முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: ஸ்டாலின் எழுப்பும் சந்தேகம்!


விஜய்க்கு வில்லன் விஜய் சேதுபதியா?


புதன், 28 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon