மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

வெளிநாடு புறப்படுகிறார் எடப்பாடி: இரு வார அரசியலில் என்ன நடக்கும்?

வெளிநாடு புறப்படுகிறார் எடப்பாடி: இரு வார அரசியலில் என்ன நடக்கும்?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது 14 நாள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை இன்று (ஆகஸ்ட் 28) தொடங்குகிறார். தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 9.50 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமி துபாய் புறப்படுகிறார். இன்று மதியம் துபாய் செல்லும் அவர் அங்கிருந்து லண்டன் செல்கிறார். செப்டம்பர் 1 ஆம் தேதி வரை லண்டனில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அங்கிருந்து அன்று மாலை அமெரிக்காவுக்குப் புறப்படுகிறார். இந்த பயணத்தில் முக்கியமான தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் ஆகியோரை சந்திக்க இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஒரு மாநில முதல்வர் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தலைமைச் செயலகத்தில் அல்லது தனது மாநிலத்தில் இல்லாத நிலையில் முதல்வர் பொறுப்பை தனது அமைச்சரவையில் உள்ள நம்பகமான வேறு ஒருவருக்கு ஒப்படைக்கலாம் என்ற மரபின்படி முதல்வர் பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமி யாரிடம் ஒப்படைப்பார் என்ற ஒரு எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டது. துணை முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வத்திடமே தானாக பொறுப்பு சென்றடையும் என்றும் அவரது தரப்பினர் கூறி வந்தனர்.

ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த வெளிநாட்டுப் பயணத்தின் போது தனது முதல்வர் பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்க தயாராக இல்லை. லேப்டாப் மூலமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரிகளை தினமும் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர்களோடு தினமும் பேச முடியும் என்பதாலும் முதலமைச்சர் பொறுப்பை அவர் யாரிடமும் ஒப்படைக்க வில்லை என்று கூறுகிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள். மேலும் பிரதமர் மோடி, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் வெளிநாட்டுப் பயணங்களின் போது யாரிடமும் தங்கள் பொறுப்பை ஒப்படைக்கவில்லை என்றும் முதல்வர் தரப்பில் கூறுகிறார்கள்.

இந்நிலையில் முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை ஒட்டி நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரைச் சந்தித்து பயணம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். துணை முதல்வர் மட்டுமல்லாது பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட பிரமுகர்களும் நேற்று முதல்வரை சந்தித்து அவரது வெளிநாட்டு பயணம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தொலைபேசி மூலம் முதலமைச்சரை தொடர்பு கொண்டு வெளிநாட்டு பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் முதல்வரை சந்தித்து விஜயகாந்த் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இனிவரும் 14 நாட்கள் தமிழ்நாட்டு அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக பங்கு பெறாவிட்டாலும் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து அரசையும் அரசியலையும் கவனித்துக் கொண்டுதான் இருப்பார் என்கிறார்கள் முதல்வரின் வட்டாரத்தினர். முதல்வர் நேரடியாக பங்குபெறாத தமிழக அரசும், அரசியலும் எப்படி இருக்கும், என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டிருக்கிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டியில் உதயநிதி- திமுக, அதிமுக வியூகம்!


பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!


கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?


புதன், 28 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon