மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 31 மே 2020

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: ஸ்டாலின் எழுப்பும் சந்தேகம்!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: ஸ்டாலின் எழுப்பும் சந்தேகம்!

முதல்வரின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை திறப்பு விழா நேற்று (ஆகஸ்ட் 27) மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு கலைஞர் சிலையைத் திறந்து வைத்தார்.

அதன்பின்பு உரையாற்றிய ஸ்டாலின், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். “தமிழக மக்களின் துன்பங்கள் குறித்துச் சிந்திக்க முடியாத அளவில்தான் தமிழகத்தில் ஆட்சி நடந்துவருகிறது. திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பெரிய பட்டியலே உள்ளது. ஆனால், கடந்த எட்டு வருடங்களாக ஆட்சியில் இருக்கும் அதிமுக என்ன திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. கலைஞர் கொண்டுவந்த திட்டத்தைப் பயன்படுத்தி பாலங்கள் கட்டியிருக்கலாம். வேறு ஏதாவது திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம் என்று சொல்லக் கூடிய ஆற்றல் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின்,

“தற்போது கேட்டால் மாவட்டங்களைப் பிரிக்கிறோம் என்று சொல்வார்கள். பிரிப்பதைத் தவிர வேறு ஏதாவது செய்கிறார்களா? ஆனால், எங்களைப் பார்த்து பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார்கள். மத்தியில் மாநிலங்களைப் பிரிக்கிறார்கள். தமிழகத்தில் மாவட்டங்களைப் பிரிக்கிறார்கள். மாவட்டங்கள் பிரிப்பை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதனால் மக்களுக்குப் பலன் கிடைக்கிறதா? மக்களுக்குப் பயன் ஏற்படக் கூடிய வகையில் அவர்கள் விருப்பத்தின் பேரில் மாவட்டங்களைப் பிரியுங்கள்” என்றும் வலியுறுத்தினார்.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்துப் பேசிய ஸ்டாலின், “முதல்வர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செல்கிறார். பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழகத்துக்கு முதலீடு கொண்டுவருவதற்காக அவர் வெளிநாடுகளுக்குச் செல்கிறார். முதலீட்டோடு வந்தால் வாழ்த்தி வரவேற்கிறோம்.

ஆனால், ஜெயலலிதா முதல்வராக இருந்த 2015ஆம் ஆண்டு, முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் 2.42 லட்சம் கோடி முதலீடு வந்ததாக ஒரு கணக்கைக் கொடுத்தார்கள். என்ன முதலீடுகள் வந்துள்ளது, எந்த இடத்திலிருந்து வந்துள்ளது, எவ்வளவு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வந்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று சட்டமன்றத்தில் திரும்பத் திரும்ப வலியுறுத்தினோம். பதில் வரவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. ரூ.5 லட்சம் கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அறிவித்தனர். அவை குறித்தும் கேள்வி எழுப்பினோம். அதையும் கூறவில்லை. 110 விதியின் கீழ் பல திட்டங்களையும் அறிவித்துள்ளனர். அதையெல்லாம் நிறைவேற்றியுள்ளார்களா? எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் ஏதாவது ஒன்று நடைபெற்றுள்ளதா?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியவர்,

இந்த லட்சணத்தில்தான் முதல்வர் இப்போது வெளிநாடு செல்கிறார். தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்லது முதல்வரின் முதலீட்டை அதிகப்படுத்த வெளிநாடு செல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் தெரிவித்தார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டியில் உதயநிதி- திமுக, அதிமுக வியூகம்!


பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!


கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?


புதன், 28 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon