மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

காஷ்மீர்: இரவில் ரெய்டு, பகலில் துண்டுப் பிரசுரங்கள்!

காஷ்மீர்: இரவில் ரெய்டு, பகலில் துண்டுப் பிரசுரங்கள்!

காஷ்மீரில் ‘ஆர்டிகள் 370, ஆர்டிகள் 35A மாற்றத்தால் ஏற்படும் நன்மைகள்’ என்ற துண்டுப் பிரசுரங்களை ராணுவம் விநியோகித்து வருகின்றது.

நாம் வசிக்கும் தெரு, மக்களின் அன்றாட செய்கைகளால் விழிப்புற்று, தெருவாசிகளின் வாழ்வியலுக்குள் இயங்கி அவர்களாலேயே இரவு கண்ணுறங்குகிறது. எப்போதும் மக்களின் மூச்சுக்காற்றையே சுவாசித்துக் கொண்டிருக்கும் தெரு, திடீரென சீருடை அணிந்த வீரர்கள், ராணுவ வாகனங்கள், துப்பாக்கிகள், வேலிகள், சோதனை இடுகைகள் என நிரம்பி வழியத் தொடங்கினால் என்னவாகும்? காஷ்மீரின் தெருக்கள் ராணுவத்தினரால் விழிப்படைந்து, அவர்களாலேயே கண்ணுறங்காமல் ஒவ்வொரு இரவும் விழித்துக் கிடக்கின்றது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தான ஆர்டிகள் 370, ஆர்டிகள் 35A விதிகளை நீக்கியது. இந்த இரண்டு அரசியலமைப்பு விதிகளும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் சுயாட்சிக்கு உத்தரவாதம் அளித்தன. மேலும், காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு நிலத்தின் மீது சொந்த உரிமையை இச்சட்டம் காஷ்மீர் மக்களுக்கு வழங்கியது. ஆனால், இச்சட்டத்தை விலக்கியவுடன் காஷ்மீர் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.

இந்த அறிவிப்பை அமித் ஷா பாராளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன.

அதன் ஒரு கட்ட நடவடிக்கையாக தொலைபேசி, லேண்ட்லைன், இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இணைய சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்படன. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பின.

அமித் ஷாவின் அறிவிப்பு வெளியான மூன்று வாரங்களுக்குப் பிறகும், ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் இன்னும் முழுமையாக தொடங்கப்படவில்லை. இருப்பினும், உள்ளூர் நிர்வாகம் லேண்ட்லைன் சேவைகள் படிப்படியாக மீட்டமைக்கப்படுவதாக தெரிவித்திருக்கின்றது.

கடந்த நான்கு வருடங்களாக தெற்கு காஷ்மீர் மாவட்டங்களான புல்வாமா, ஷோபியன், குல்காம், அனந்த்நாக் பகுதியில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் கூடும் மையப்பகுதியாக மாறிவருகின்றது. அதனால் இந்திய ராணுவம் அப்பகுதியை தற்போது முற்றிலுமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஒரு காலத்தில் கலகத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களை குறிப்பிட்டு இந்திய ராணுவம் வன்முறைகளை கட்டவிழ்த்து வருகிறது.

இந்த கிராமப்புற மாவட்டங்களில், பொதுமக்களும் இராணுவமும் கடந்த சில ஆண்டுகளாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தேடல் நடவடிக்கைகள், இராணுவ ஒடுக்குமுறைகளினால் உள்ளூர் மக்கள் நிலை குலைந்துள்ளனர். கடந்த மூன்று வாரங்களாக புல்வாமா மாவட்டத்தில் எந்த துப்பாக்கிச் சண்டையும் நடந்ததாக அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. ஆனால், புல்வாமா மாவட்டத்தில் உள்ள உள்ளூர் கணக்குகளின் படி, இராணுவத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாக தெரிகின்றது.

காஷ்மீர் காவல் நிலையங்களில் மத்திய ரிசர்வ் படையினரே காவலுக்கு வைக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 5ஆம் தேதியிலிருந்து தற்போது வரை, 4000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது அங்குள்ள மக்கள், நிம்மதியின்றி தவித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் படையினர், குறிப்பாக இராணுவம், இரவு சோதனைகளை நடத்துவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் என எவ்வித பாரபட்சமுமுன்றி ராணூவத்தினர் அடித்துள்ளதாக மக்கள் தரப்பில் கூறப்படுகின்றனர்.

தற்போது, ராணுவம் துண்டுப் பிரசுரங்களை வீதியெங்கும் வீசி வருகின்றது. உருது மொழியில் உள்ள அந்தப் பிரசுரத்தில் ‘ஆர்டிகள் 370, ஆர்டிகள் 35A மாற்றத்தால் ஏற்படும் நன்மைகள்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அந்த பிரசுரத்தில்: பெண்களுக்கான கட்டாயக் கல்வி, அரசுப் பள்ளிகளில் மதிய வேளை உணவு, ஆயுஷ்மான் யோஜனா மற்றும் புதிய மருத்துவமனைகளை செயல்படுத்துதல், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை, புதிய ஹோட்டல்கள், சுற்றுலா மையங்களை நிறுவுதல், புதிய தொழிற்சாலை மற்றும் தொழில்கள், சட்டம் ஒழுங்கு மற்றும் வளர்ச்சியில் மத்திய மேற்பார்வை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!


அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon