மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

எடப்பாடி கடிதத்தின் அடிப்படையிலேயே மத்திய அரசு நடவடிக்கை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி!

எடப்பாடி கடிதத்தின் அடிப்படையிலேயே  மத்திய அரசு நடவடிக்கை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி!

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டிருக்கும் வேலையிழப்பு குறித்து தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்ட கருத்து பற்றியும் அதன் அரசியல் ரீதியான தாக்கம் பற்றியும் மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த செய்தியை அடுத்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மின்னம்பலத்தைத் தொடர்புகொண்டார். அவர் இந்த விவகாரம் தொடர்பாக சில விளக்கங்களை அளித்துள்ளார்.

“ஆட்டோமொபைல் துறை பற்றி கடந்த ஆகஸ்டு 17 ஆம் தேதி நான் ட்விட்டரில் பதிவு செய்த கருத்துகள் பற்றியும், பின் ஆகஸ்டு 19 ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துகள் பற்றியும் முதல்வர் என்னைத் தொடர்புகொண்டு பேசியதாக மின்னம்பலத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால், நான் அந்த ட்விட்டர் பதிவு வெளியிடும் முன்பாகவே இந்த விவகாரம் பற்றி முதல்வருக்கு நோட் அனுப்பியிருந்தேன். அவரது கவனத்துக்குக் கொண்டு சென்ற பிறகுதான் நான் ட்விட்டரில், ’இது எச்சரிக்கை சமிக்ஞை. குறிப்பாக இந்தியாவிலேயே ஆட்டோ மொபைல் துறையில் அதிக கவனம் செலுத்திடும் தமிழகத்துக்கும் இது எச்சரிக்கை. மத்திய அரசு ஆட்டோமொபைல் துறையின் வேலைகளைக் காப்பாற்றவும், தொழில்துறையை மேம்படுத்தவும் வேகமாக செயல்பட்டு நிதி ஒதுக்கிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தேன்.

அதைத் தொடர்ந்து மதுரையில் 19 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தபோதும், ’இதேபோல தொழில் துறையில் ஏற்கனவே நடந்தபோது முன்னால இருந்த அரசாங்கம், ஜவுளித் துறையை தொழில் நுட்ப மாற்றங்களில் இருந்து பாதுகாக்க ஒரு நிதியத்தை உருவாக்கினாங்க. இதேபோல இப்ப ஆட்டோ மொபைல் துறைக்கும் ஒரு ஃபண்ட் உருவாக்கணும். இல்லேன்னா பெரிய அளவுல வேலைவாய்ப்பு இழப்பு மிக குறுகிய காலத்துல வர்றதுக்கு வாய்ப்பிருக்கு’ என்றும் பேட்டியளித்திருந்தேன்” என்று தெரிவித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்து பேசினார்.

“இந்த நிலையில்தான், 22 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ஆட்டோமொபைல் உற்பத்தித் துறையில் இந்தியாவின் 27% உற்பத்தி தமிழகத்தில் மட்டுமே நடக்கிற நிலையில், இத்தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை போக்க பிரதமர் இதில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், ஆட்டோமொபைல் துறைக்கு சில்லறைக் கடன்கள் வழங்குவதை முடுக்கிவிடுமாறு வங்கிகளுக்கும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் பிரதமர் அறிவுரை வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் பிரதமரை வலியுறுத்தியிருந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை மற்றும் அழுத்தத்தின் பேரில்தான் அடுத்த நாளான 23 ஆம் தேதியே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார மந்த நிலையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளையும் பல்வேறு நிதியுதவி அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

ஆக தமிழக முதல்வரின் அழுத்தமான கோரிக்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இப்படி இருக்க, மத்திய அரசு ஏதோ மாநில அரசின் மீது அழுத்தம் கொடுக்கிறது என்ற ரீதியில் மின்னம்பலத்தில் செய்தி வெளியாகியிருக்கிறது” என்று தன் விளக்கத்தை தெரிவித்துள்ளார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!


அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon