மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்!

ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்!

பெண்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சானிட்டரி நாப்கின்களை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டு மத்திய அரசு நடைமுறைப் படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை மத்திய அமைச்சர் சதானந்த கவுடா இன்று (ஆகஸ்ட் 27) தொடங்கி வைத்தார்.

மாதவிடாய் காலங்களில், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 78 சதவிகித பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர் என 2016ல் தேசிய சுகாதார கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதிலும் கிராமப்புற அமைப்புகளைப் பொறுத்தவரை 48 சதவிகித பெண்கள் மட்டுமே சுகாதாரமான சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாகப் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் பெண்கள் விலையுயர்ந்த சானிட்டரி நாப்கின் பாக்கெட்டுகளை வாங்க முடியாததாகும்.

இந்த சூழலில் மத்திய அரசு ஒரு சானிட்டரி நாப்கினை ஒரு ரூபாய்க்கு விற்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் நாப்கின்கள் மத்திய அரசின் ஜன் அவ்சதி கேந்திரா மருந்துக் கடைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கும் தன்மை கொண்ட இந்த நாப்கின்கள் ஜன் அவ்சதி சுவிதா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக 4 நாப்கின் கொண்ட பாக்கெட்டுகள் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அவை குறைக்கப்பட்டு தற்போது ஒரு பாக்கெட் ரூ.4க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 5500 ஜன் அவ்சதி கேந்திரா மருந்துக் கடைகளில் இந்த நாப்கின்கள் கிடைக்கும் என்று மத்திய ரசாயன மற்றும் உரங்களுக்கான அமைச்சர் மன்சுக் மந்தாவியா நேற்று தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் பாஜக அரசு கடந்த மக்களவைத் தேர்தலில் சானிட்டரி நாப்கின்களின் விலை 60சதவிகிதம் குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மருந்தக கடைகளில் நாப்கின்களின் விற்பனை கடந்த ஆண்டில் மட்டும் 2.2 கோடியை எட்டியுள்ளது. அதன்படி, இந்த லாபத்தையும் தேவையையும் கருத்தில் கொண்டு தரம் செயல்முறைகளில் சமரசம் இன்றி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று மன்சுக் மந்தாவியா கூறியிருந்தார்.

இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 27) டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் "ஜன் அவ்சதி சுவிதா" திட்டத்தை மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தொடங்கிவைத்தார்.

தற்போது தனியார் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படும் 6 முதல் 8 வரை இருக்கும் நாப்கின் பாக்கெட்டுகள் குறைந்தபட்சம் ரூ.32 முதல் 40 வரை விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon