மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

கிரிக்கெட் மைதானத்துக்கு அருண்ஜேட்லி பெயர்!

கிரிக்கெட் மைதானத்துக்கு அருண்ஜேட்லி பெயர்!

டெல்லி கிரிக்கெட் மைதானத்துக்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அருண் ஜேட்லி ஆகஸ்ட் 24ஆம் தேதி டெல்லியில் காலமானார். 66 வயதான அருண் ஜேட்லி சில மாதங்களுக்கு முன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். உடல்நலக் கோளாறு ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் தொடர்பான நிபுணர்களால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் ஆகஸ்ட் 24ஆம் தேதி உயிரிழந்தார்.

அருண் ஜேட்லி 1999 முதல் 2013 வரை டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்தார். அவரது காலத்தில் டெல்லி மாநில கிரிக்கெட் வேகமாக வளர்ச்சி அடைந்தது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தை தரமாக சீரமைத்தார்.

டெல்லி மாநில கிரிக்கெட் வீரர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்காத நிலை இருந்த போது, அதை மாற்றி டெல்லி வீரர்கள் இந்திய அணியில் ஆட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவர் தலைவராக இருந்த போது டெல்லியில் இருந்து வீரேந்தர் சேவாக், கௌதம் கம்பீர், நெஹ்ரா உள்ளிட்ட பல வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றனர். இந்நிலையில் அவரது நினைவாக பெரோஸ் ஷா கோட்லா மைதானத்துக்கு அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அருண் ஜேட்லியின் மறைவைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அவர் மறைந்த செய்தி வெளியான போது பிரதமர் மோடி அபுதாபிக்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருந்தார். “பாஜகவும், அருண் ஜேட்லியும் பிரிக்க முடியாத இணைப்பில் இருந்தனர். எமெர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை காக்க முன்னின்றவர். பாஜகவின் பிரபல முகமாக செயல்பட்டவர். அவரது மறைவால் சிறந்த நண்பனை இழந்துவிட்டேன். அருண் ஜேட்லியின் மறைவு வேதனையை அளிக்கிறது” என்று மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அருண் ஜேட்லியின் குடும்பத்தினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்.

தற்போது ஜி7 மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பியுள்ள மோடி இன்று காலை அருண் ஜேட்லியின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!


அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon