மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

ஆந்திராவுக்கு நான்கு தலைநகரங்கள்?

ஆந்திராவுக்கு நான்கு தலைநகரங்கள்?

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமராவதி தலைநகர் உருவாக்கத் திட்டத்தைக் கைவிட்டு அதற்குப் பதிலாக மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் நான்கு நகரங்களைத் தலைநகரங்களாக அறிவிக்கவுள்ளதாக ஆந்திர மாநில பாஜக எம்.பி டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பின்னர் தலைநகர் ஹைதராபாத், தெலங்கானாவுக்கு என அறிவிக்கப்பட்டது. எனவே ஆந்திராவுக்குத் தலைநகராக அமராவதியை அறிவித்தார் அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

இதற்காக 28,000 விவசாயிகளிடமிருந்து, 33,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அமராவதி நகரை உருவாக்கி வந்தார். சந்திரபாபு நாயுடு இந்தத் தலைநகர் உருவாக்கத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை செலவாகும் என அறிவித்தார். தெலுங்கு தேச அரசு 38,000 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளதாகக் கூறினார். தலைமைச் செயலகம் மட்டும் 800 கோடி ரூபாயில் தயாராவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கெனவே ஜெகன்மோகன் ரெட்டி சாதி வாரியாக ஐந்து துணை முதல்வர்களை நியமித்துள்ள நிலையில் தற்போது அமராவதி திட்டத்தைக் கைவிட்டு வெவ்வேறு பகுதிகளில் நான்கு தலைநகர்களை உருவாக்கவுள்ளதாக பாஜக எம்.பி டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார். இவர் கடந்த ஜூன் மாதம் தெலுங்கு தேச கட்சியிலிருந்து பாஜகவுக்கு மாறினார்.

டி.ஜி.வெங்கடேஷ், “முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒவ்வொரு பிராந்தியத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக ராயலசீமா, ஓங்கோல் - குண்டூர் - நெல்லூர், கிருஷ்ணா - கோதாவரி மற்றும் ஸ்ரீகாகுளம் - விசாக் - விஜயநகரம் போன்ற நகரங்களை மேற்பார்வையிட ஐந்து துணை முதல்வர்களை நியமித்துள்ள நிலையில் தற்போது மாநிலத் தலைநகர்களை உருவாக்குவதாகத் தெரிகிறது” என்று கூறினார். மேலும், இதுகுறித்து அவர் பாஜக தலைவர்களிடம் ஜெகன் பேசி வருவதாகவும், இது பாஜக நிர்வாகி ஒருவர் மூலமாகத் தனக்குத் தெரிந்தது எனவும் அவர் கூறினார்.

அமராவதி திட்டத்தைக் கைவிட்டால், அது நிலம் கொடுத்த விவசாயிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும் என்றும், அதே நேரத்தில் தலைநகர் என்று ஒரே இடத்தில் சுருக்காமல் அதைப் பரவலாக்குவது ராயலசீமா ஆகிய பகுதிகளில் வரவேற்பு பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தத் திட்டத்தை கைவிடுவது குறித்து மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதும் முக்கியம் எனக் கூறப்படுகிறது.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon