மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

மாரிதாஸ் மீது திமுக புகார்!

மாரிதாஸ் மீது திமுக புகார்!

திமுக மீது அவதூறு பரப்பும் வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக மாரிதாஸ் மீது திமுக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் மாரிதாஸ் என்பவர் பதிவுகள் , வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த அதே வேளையில், ஆதரவாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டன. இந்த நிலையில் அண்மையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவில், திமுகவுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பிருப்பதாக தெரிவித்திருந்தார். அதற்கான புள்ளிவிவரங்கள் என்ற பெயரில் சில தகவல்களையும் சொல்லியிருந்தார். இதற்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததோடு, திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் பதிலும் தெரிவித்துவந்தனர்.

இந்த சூழலில் மாரிதாஸ் மீது 505(2) உள்ளிட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக தரப்பிலிருந்து அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில், “மாரிதாஸ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் தன்னை சமூக வர்ணனையாளர் மற்றும் எழுத்தாளர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் சமூக வலைதளங்களை பயன்படுத்தி பொய்யான தகவல்களை வெளியிடுவதிலும், பொதுமக்களை தவறாக வழிநடத்துவதிலும் அவர் மிகவும் திறமையானவர் என்று தெரிகிறது.

அவர் இயக்கிவரும் பேஸ்புக், யுடீயூப், இணையதளப் பக்கங்கள் ஆகியவற்றை அவதூறு பரப்பும் குப்பைத் தொட்டியாகவும், போலிச் செய்திகள் மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டக் கூடிய வாகனமாகவும் பயன்படுத்திவருகிறார். மேலும், கடந்த 18ஆம் தேதி திமுக தடை செய்யப்பட வேண்டுமா என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் தவறானதோடு அடிப்படை ஆதாரமற்றவையாகும். சமூக அமைதியை குலைக்கும் நோக்கத்தோடு அதனை வெளியிட்டுள்ளார்.

ஒரு பெரிய திரை முன்பு தோன்றி உலகளாவிய புவி அரசியலை பேசும் அறிஞரை போன்ற தோற்றத்தை உருவாக்கும் மாரிதாஸ், முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதோரிடையே வெறுப்பைத் தூண்ட விரும்புகிறார் என்பது அவருடைய வீடியோவை பார்த்தாலே தெரியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “திமுக பற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. மாரிதாஸ் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தவறான தகவல்களை பரப்புகிறார்” என்று கூறப்பட்டுள்ள அந்தப் புகாரில், அவர் மீது உரிய விசாரணை நடத்தி, தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் நீதியைக் காக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

இதற்கு தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ள மாரிதாஸ், “அடுத்த அடுத்த மிரட்டல்கள்???? எப்படியாவது முடக்கப்பட வேண்டும் மாரிதாஸ். இதோ பாருங்க - என்று நான் கிறிஸ்தவ மதம் மாற்றும் இயக்கத்தை எதிர்த்தேனோ அன்றே தெரியும் திமுக எதாவது வழி தேடும் என்னை முடக்குவதற்கு என்று. மீண்டும் கூறுகிறேன் எந்த பெரும் பிரச்சனையும் சந்திக்கத் தயார் நாட்டிற்காக , ராணுவ வீரனின் அதே நாட்டுப்பற்றோடு - நாட்டை துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற அனைத்தையும் செய்வேன். அதற்காகச் சிறை சென்றாலும் தயக்கம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!


அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon