மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

ஒரே ஒரு ஆதாரம்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் குடும்பம் சவால்!

ஒரே ஒரு ஆதாரம்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் குடும்பம் சவால்!

முன்னாள் நிதி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்டு 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டதில் இருந்து, ஆங்கில ஊடகங்கள் ப.சிதம்பரம் குடும்பத்துக்கு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதாக பல்வேறு செய்திகளையும் அது தொடர்பான ஆவணங்கள் என்று சில பேப்பர்களையும் வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று (ஆகஸ்டு 27) ப.சிதம்பரத்தின் குடும்பம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தி சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “கடந்த சில நாட்களாக ஊடகங்களில் ப.சிதம்பரத்துக்கு எதிராக முரட்டுத் தனமான, ஆதாரங்களற்ற, எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாத செய்திகள் பரப்பப்பட்டு வருவதை மிகுந்த மன அழுத்தத்தோடு குறிப்பிடுகிறோம்.

மத்திய அரசு ப.சிதம்பரத்தை அச்சுறுத்தும் வகையிலும் அவமானப்படுத்தும் வகையிலும் உள்நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிற அதேநேரம், அரசின் இந்த பழிவாங்கலுக்கு எதிராக நின்று ஊடகங்கள் தங்களது சுதந்திரத்தை நிலைநிறுத்த முடியாததை எண்ணி துன்பம் அடைகிறோம். குற்றஞ்சாட்டப்பட்ட யாரும் சட்டத்தின் முன் குற்றவாளி என்று நிரூபிக்கப்படுகிறவரை நிரபராதிதான். உண்மை ஒருநாள் வெல்லும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும்,

“ப.சிதம்பரம் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அப்பழுக்கற்ற நேர்மையான பொதுவாழ்க்கையைக் கொண்டவர். இப்போது நடப்பது போன்ற இழிவுபடுத்தும் பிரச்சாரங்களால் அவர் இந்த தேசத்துக்கு ஆற்றிய அரும்பணிகளை மறைத்துவிட முடியாது.

நாங்கள் ஒரு சிறு குடும்பம், எங்களுக்கு போதுமான செல்வங்களைப் பெற்றிருக்கிறோம். நாங்கள் அனைவருமே வருமான வரி கட்டிக் கொண்டிருக்கிறோம். ப.சிதம்பரத்தின் குடும்பத்தில் யாரும் பணத்துக்காக யாரிடமும் போய் கெஞ்ச வேண்டிய நிலையில் இல்லை. சட்டத்துக்குப் புறம்பான பணம் ஈட்டும் தேவையோ அவசியமோ எங்களுக்கு இல்லை.

அதனால்தான் எங்களுக்கு பல நாடுகளில் சொத்து இருக்கிறது, பல வங்கிகளில் கணக்குகள் இருக்கின்றன, எண்ணற்ற நிழல் நிறுவனங்கள் இருக்கின்றன என்ற செய்திகளையெல்லாம் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம். இவ்வாறு வெளியாகும் செய்திகள் எல்லாமே கட்டுக்கதைகள். இந்தக் கட்டுக் கதைகளின் பொய் தன்மை விரைவில் அம்பலமாகும்” என்று தெரிவித்திருக்கும் சிதம்பரம் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு ஒரு சவால் விட்டிருக்கிறார்கள்.

“எங்கள் குடும்பத்தின் சார்பில் கணக்கில் காட்டப்படாத ஒரே ஒரு வங்கிக் கணக்கோ, கணக்கில் காட்டப்படாத ஒரே ஒரு சொத்து, கணக்கில் காட்டப்படாத ஒரே ஒரு போலி நிறுவனம் இந்த உலகத்தில் எங்கேனும் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டத் தயாரா? மத்திய அரசுக்கு நாங்கள் சவால் விடுகிறோம்.

ஊடகங்களுக்கு எங்கள் வேண்டுகோள் எல்லாம் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடித்து ஊடக சுதந்திரத்தை நிலை நிறுத்துங்கள். ஊடகங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சட்டம்தான் எப்போதும் பாதுகாப்பு அளிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!


அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon