மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஆக 2019

பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!

பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!

பாஜக மீது எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை ஏவி விட்டிருக்கின்றன. அதனால்தான் பாஜக தலைவர்கள் தொடர்ந்து மரணம் அடைகிறார்கள் என்று பாஜகவின் சர்ச்சை மற்றும் அதிரடி ஆன்மிக முகமான சாத்வி பிரக்யா பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, ஜோதிட வட்டாரத்திலும் விவாதங்களை உண்டாக்கிவிட்டிருக்கிறது.

இந்தியாவில் பொதுவாகவே பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள் பற்றிய நம்பிக்கை அதிகம். தனி நபர்கள் மீது மந்திரவாதிகள் மூலமாக இதுபோன்ற மாந்த்ரீக சமாச்சாரங்கள் ஏவப்படுவதாகவும் பல கதைகள் உண்டு. ஆனால் ஒரு அரசியல் கட்சி மீது இதுபோல எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து தீய சக்தியை ஏவி விட்டிருப்பதாக சொல்வது ஏற்கத் தக்கதா? இதற்கு ஜோதிட ரீதியான நியாயங்கள் இருக்கின்றதா? இந்த கேள்விகளோடு தமிழகத்தின் மூன்று ஜோதிடர்களிடம் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகை சார்பில் கருத்துகளைக் கேட்டோம்.

விகாரி வரை விடாது துரத்தும்- ஜோதிடர் ஷெல்வி

ஜோதிடர் ஷெல்வியிடம் இதுகுறித்து கேட்டபோது,

“மாந்த்ரீகம் என்பது உலக அளவில் இருக்கும் விஷயம்தான். நல்ல சக்திகளுக்கு எதிரான தீய சக்திகள் இருக்கிறது என்பது சந்நியாசிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு இருக்கும் கருத்து. என்னுடைய கருத்து என்னவென்றால், வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வரைக்கும் அதாவது இந்த விகாரி வருடம் வரைக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நீடிக்கும்.

நான் விகாரி வருட பலன்களிலேயே சொல்லியிருக்கிறேன். பெரும் பெரும் தலைவர்களின், இளம் தலைவர்களின் தேக ஆரோக்கியம் மிக முக்கியம், எதிரிகள் பலம் அதிகம், தீவிரவாதம் அதிகம், நாட்டில் எல்லா வகையிலும் துக்க கரமாக இருக்கக் கூடிய வருடம் தான் இந்த விகாரி வருடம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதனால் ஏப்ரல் 13 வரைக்கும் இந்தியா என்று இல்லை உலக அளவில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

பாஜக மட்டுமல்ல மற்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் மரணம் சட்டனெ வர வாய்ப்பிருக்கக் கூடிய ஆண்டுதான் விகாரி. வரும் அக்டோபர் தேதி குருப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது. அதன் பின் இன்னும் பல சம்பவங்கள் நடக்கலாம். அதேபோல இயற்கை சீற்றங்களால் சேதங்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள்,யுத்தங்கள், தீ, பூமி குலுங்குதல் போன்றவை ஏற்படுவது இந்த விகாரி வருடத்தில் அதிகம் என்பது ஜோதிடத்தில் சொல்லக் கூடிய விஷயம்” என்கிறார் ஜோதிடர் ஷெல்வி.

பாஜக ஆரம்பித்த நேரத்தைப் பொறுத்தது- பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்

பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் வேறு வகையான விளக்கத்தைக் கொடுக்கிறார்.

“சாத்வி பிரக்யாவின் குற்றச்சாட்டை கண்டிப்பாக நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சில சந்தர்ப்பங்களில் எல்லா கட்சிகளிலுமே தொடர்ந்து பின்னடைவாக நேரிடும். அது கட்சி ஆரம்பித்த நேரத்தைப் பொறுத்ததாக இருக்கும். உதாரணமாக ஜனசங்கம் என்ற கட்சியை ஆரம்பித்தது வாஜ்பாயும், அத்வானியும்தான். அவர்கள் நல்ல நேரம் பார்த்துதான் ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த நேரத்தைப் பொறுத்து கட்சிக்கென்று ஒரு கட்டம் இருக்கிறது.

ஒரு ரயில் போகிறது... அதில் ஒரு பெட்டி மட்டும் கழன்று தடம் புரண்டு சுமார் 60 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிடுகிறார்கள். அதற்காக அந்த 60 பேருக்குமா மரண திசை வந்துவிட்டது என்று நாம் யோசிக்கலாம். அப்போது அந்த ரயில் புறப்படத் தொடங்கிய நேரத்தை நாம் ஜாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது நல்ல நேரமாக இருந்திருக்க வேண்டும், அந்த நேரத்தின்படி ரயில் 8ஆம் இடத்தைப் பார்க்க வேண்டும். அதேபோல கட்சி தொடங்கும்போது அமைந்த நேரத்தை நாம் பார்க்க வேண்டும். அந்த நேரத்தின்படிதான் பாரதிய ஜனதா கட்சியின் ஜாதகம் இருக்கும்.

சிலருக்கு ஜாதகத்தில் உச்சபட்ச நல்ல நேரமாக இருக்கும். ஆனால் கிரக நிலைகளின்படி அவர்களது மாமனுக்கோ, மச்சானுக்கோ ஆகாத சூழல் இருக்கும். அதுபோல கட்சியின், ஆட்சியின் தலைவர்களுக்கு நல்ல நேரமாக இருந்தாலும், பாஜகவின் பக்க கிளைகளுக்கு இப்போது நேரம் சரியில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி தீய சக்தியை ஏவுவது என்றால் உலகத்தில் யாரும் இருக்க முடியாது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று சொல்லக் கூடாது” என்று கூறுகிறார் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

இந்தியாவுக்கு நேரம் சரியில்லை-ஞான ரதம்

ஜோதிடப் படிப்பில் பட்டம் பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த ஜோதிடர் ஞானரதம் என்ன சொல்கிறார்? அவரிடம் மின்னம்பலம் சார்பாக பேசினோம்.

“ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள ஆயுள் பாவத்தைப் பொறுத்துதான் அவர்களுடைய மரணம் நிர்ணயிக்கப்படுகிறது. மாறாக அவர் சார்ந்திருக்கும் கட்சியோ, இயக்கமோ, கொள்கை அமைப்போ அதை நிர்ணயிக்காது. அதன்படி பார்த்தால் இறந்தவர்கள் அனைவருமே வயதானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. யாரும் அகால மரணம் அடையவில்லை. அவரவர் காலம் வந்தவுடன்தான் சென்றிருக்கிறார்கள். எனவே இதற்கும் பாஜக என்ற கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதேநேரம் பாஜக என்பது ஆன்மிக சம்பந்தப்பட்ட கட்சி என்பதால் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் அவர்களிடம் அதிகமாக இருக்கிறது.

கிரக நிலைகளின்படி இந்தியாவுக்கு ஆன்மீக விவகாரங்களால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. அது இரு இனங்களுக்குடையே வரக் கூடும். நிலைமைகளை சரியாக கையாளாவிட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான போராகவும் இது மாற வாய்ப்பிருக்கிறது. ஆறு மாதங்களில் இருந்து ஒன்றரை வருடத்துக்குள் இதுபோல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஒன்றரை வருடத்துக்குள் நிகழாவிட்டால் பின் அவை நிகழ வாய்ப்பில்லை” என்கிறார் ஜோதிடர் ஞான ரதம்.

-ஆரா


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி: ரிசர்வ் வங்கி


ஆந்திராவுக்கு நான்கு தலைநகரங்கள்?


சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

செவ்வாய் 27 ஆக 2019