மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!

ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!

தென்னிந்தியாவே துணை முதல்வர்கள் மயமாகிறது.

அண்மையில் ஆந்திராவில் ஐந்து துணை முதல்வர்களோடு பதவியேற்றார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஏற்கெனவே தமிழகத்தில் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். தமிழகத்தில் மேலும் நான்கு துணை முதல்வர்களை நியமிக்கக் கோரிஅழுத்தங்கள் முதல்வர் எடப்பாடிக்குத் தரப்படுகின்றன. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா மூன்று துணை முதல்வர்களை நேற்று (ஆகஸ்ட் 26) நியமித்திருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து கடந்த ஜூலை 26ஆம் தேதி முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா பதவி ஏற்றுக்கொண்டார். கடுமையான உட்கட்சி நெருக்கடிகளுக்கு இடையில் முதல்வர் பதவியை ஏற்ற எடியூரப்பா அமைச்சரவையில் நேற்று (ஆகஸ்ட் 26) மூன்று துணை முதல்வர்கள் உட்பட 17 அமைச்சர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டன.

கர்நாடக அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பு துணை முதல்வர் பதவி இருந்தபோதும் முதன்முறையாக மூன்று துணை முதல்வர்கள் இப்போதுதான் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கோவிந்த மகதப்பா கரஜோல், அஸ்வத் நாராயணன், லட்சுமண் சங்கப்ப சாவடி ஆகிய மூன்று பேர் துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக ஆட்சியில் முன்பு துணை முதல்வராகப் பணியாற்றிய ஈஸ்வரப்பா, அசோக் போன்றோர் அமைச்சர்களாக மட்டுமே இப்போது நீடிக்கின்றனர். ஈஸ்வரப்பாவின் ஆதரவாளர்கள் ஏற்கனவே அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகிறார்கள். ஈஸ்வரப்பாவுக்கு துணை முதல்வர் பதவி தரப்படாததால் தங்களின் பலத்தை விரைவில் எடியூரப்பாவுக்கு காட்டுவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனாலும் முழுக்க முழுக்க டெல்லி தலைமை ஆலோசனையின் பேரில் இந்த மூன்று துணை முதல்வர்கள் உட்பட 17 அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளார் எடியூரப்பா.

மூன்று துணை முதல்வர்களில் அஸ்வத் நாராயணன் ஒக்கலிக்க சமுதாயத்தைச் சேர்ந்தவர். லட்சுமண் சாவடி லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர். கோவிந்த மகதப்பா கரஜோல் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இந்த மூன்று துணை முதல்வர்களும் மூன்று சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அனைவரையும் அனுசரித்து செல்லும் வகையில் துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வர்களில் ஒருவரான லட்சுமண் சாவடி சட்டமன்ற உறுப்பினரோ, மேல்சபை உறுப்பினரோ இல்லாத நிலையில் அவரை அமைச்சரவையில் எடுத்துக்கொண்டது பல்வேறு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுநாள் வரை குமாரசாமிக்கு வந்த குடைச்சல் தனக்கு வரக் கூடாது என்பதால்தான் மூன்று துணை முதல்வர்களை நியமித்து அவர்களுக்கு முக்கியத் துறைகளையும் கொடுத்திருக்கிறார் முதல்வர் எடியூரப்பா. ஆனாலும், அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்தவர்கள், துணை முதல்வர் பதவியை எதிர்பார்த்தவர்கள் பலரும் ஏமாற்றத்தில் உள்ளதால் எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் டெல்லி செல்கிறார் எடியூரப்பா.

அதிகாரப் பரவல் அனைத்து தரப்பினருக்கும் செல்கிறது என்ற நேர்மறைப் பார்வை துணை முதல்வர்கள் நியமனத்தில் பார்க்கப்படுகிறது. அதேநேரம், அரசியல் என்பது பதவிக்கான வேட்டைக் காடாகவும், சாதீய செல்வாக்கின் பலம்பார்க்கும் மேடையாகவும் மாறிவிட்டதையே தென்னிந்தியாவில் பரவும் இந்த துணை முதல்வர்கள் நியமனங்கள் உணர்த்துகின்றன.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon