மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

காட்டுவாசிகளிடம் கற்றவை 1 - பா.நரேஷ்

காட்டுவாசிகளிடம் கற்றவை 1 - பா.நரேஷ்

உங்கள் ஆர்ப்பரிக்கும் வாழ்க்கையை அணைத்துவிட்டு கொஞ்சம் செவி சாயுங்கள். ஓசையற்ற உலகத்தில் ஆசையற்ற மனிதர்களை அறிமுகப்படுத்துகிறேன். அவ்வுலகில் சிறிதேனும் சத்தம் வந்தாலும், அது இன்னிசை. அவர்களுக்குச் சிறிதேனும் ஆசை வந்தாலும், அது இம்சை.

வாசி - எனும் சொல் இருப்பிடத்தைக் குறிப்பிடும் பொருள் கொள்ளப்படுகிறது. நகரத்தில் வாழ்பவர்கள் நகரவாசிகள். கிராமத்தில் வாழ்பவர்கள் கிராமவாசிகள். காடுகளில் வாழ்பவர்கள் காட்டுவாசிகள். ஆனால், காட்டுவாசி எனும் சொல் மட்டும் குணத்துடன் தொடர்புபடுத்திப் பயன்படுத்தப்படுகிறது. காட்டுவாசிகள் என்றால் நாகரிகமற்ற, மிருக குணமுடையவர்கள் என்று பொதுமன அகராதியில் பொருள்படுத்தப்பட்டிருக்கிறது.

அப்படியென்ன நாகரிகமற்ற விலங்கு குணம் அவர்களிடம் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டபோது அதிர்ச்சியாக இருந்தது.

சீமார் செய்வதற்காக புல் அறுத்துக்கொண்டிருந்த ஒரு காட்டுவாசியிடம் கேட்டேன், “ஏன் பாதி புல்லை மட்டும் வெட்டுகிறீர்கள். வேருடன் அறுத்தால் அதிகமாக வருமல்லவா?”

“முழு புல்லும் எடுத்தா இந்த வெளியே காணாம போயிடும் ராசா. இது எனக்குக் கஞ்சி ஊத்துற சாமி. நாளப்பின்ன திரும்ப இங்கதான் வந்து நிக்கணும். இப்பவே முழுசா அழிச்சா பின்னாளைக்கு என்ன பண்ணுறது” என்றார்.

ஓர் ஆண்டுக்கு 18 மில்லியன் ஏக்கர் காடுகளை அழிக்கும் நாம் நாகரிகவாசிகள். ஒரு புல்லைக்கூட முழுமையாக பிடுங்கிப்பயன்படுத்தாத அவர்கள் காட்டுவாசிகள்.

அந்த காட்டுவாசிக் குடியிருப்புகளில் இருக்கும் இல்லங்களின் முற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மரங்கள் யாவும் உயிர்பிடித்து வளரக்கூடியவை. எந்த மரம் குச்சியாக நட்டால் வளருமோ, அந்த மரத்தின் கிளையை வெட்டிவந்து நட்டு வைக்கிறார்கள். அது பந்தக்காலாகவும் இருக்கிறது, மரமாகவும் வளர்கிறது.

வாஸ்துவுக்காக மரத்தை வெட்டும் நாம் நகர நாகரிகவாசிகள். வாழ்வதற்காகக்கூட மரத்தை வெட்டாத அவ்வெள்ளந்தியர்கள் காட்டுவாசிகள்.

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டாமல், 140க்கும் மேற்பட்ட உருப்படிகளை மேய்த்துக்கொண்டிருந்த இரண்டு ஆயர் இன காட்டுவாசிகளிடம் கேட்டேன்... “கன்றுகளுக்கு பால் அதிகமாக கொடுக்காமல் கறந்தால், நல்ல காசு வருமே.”

“கூறுகெட்ட பேச்சா இருக்கேப்பா... ஒங்கம்மா பாலை ஒனக்கு கொடுக்காம தனியா வித்தாளா என்ன? வீட்டுக்கு வேணுங்காட்டி அதுக குடிக்கும்போதே மறுகாம்புல கொஞ்சம் கறந்துக்குவோம். அது போதும்” என்றார் சிரித்துக்கொண்டே.

மாடுகளை பால் உற்பத்திக் கூடமாக மட்டுமே பார்த்து, காளைக்கன்று பிறந்த மறுநாள் அதை வெட்டுக்கு அனுப்பி அதன் தோலுக்குள் வைக்கோல் புதைத்து தாய்முன் வைத்து பாலை சுண்ட இழுக்கும் நாம் வணிக மேதாவிகள். தேவைக்குக்கூட எச்சிக்காம்பில் பால் கறக்கும் அவர்கள் காட்டுவாசிகள்.

பளியர் இனத்தைச் சேர்ந்த காட்டுவாசி ஒருவர் தேனெடுக்கச் சென்றபோது கேட்டேன்...

“ஏன் ஒரு பகுதி தேனடையை அப்படியே வைத்துவிட்டு வருகிறீர்கள்? அதையும் சேர்த்து எடுத்தால் அதிகம் தேன் கிடைக்குமே.”

“அதுல பொடித்தேனிக் குஞ்சுக இருக்கும் சாமி. மொத்தமா எடுத்தா அடுத்த வாட்டி எடுக்க தேனீயே இருக்காது. நம்ம சோத்துல நாமளே மண்ணள்ளி போட்டுக்கவா..!?” என்றார் கேலியாக.

நாம் நாகரிகவாசிகள். அவர்கள் காட்டுவாசிகள். இப்படியாகவே இருக்கட்டும். அந்த காட்டுவாசிகளையும் காடுகளின் வாசத்தைவிட்டு துரத்திக்கொண்டிருக்கிறது நம் நவீனம். வனச் சட்டத் திருத்தத்தின் மூலமாகவும், வனப்பாதுகாப்பு என்னும் பெயரிலும் வனவாசிகளை அப்புறப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது அரசு. அவர்களை அப்புறப்படுத்திவிட்டு வனத் துறையினால் வனம் பாதுகாக்கப்படும் என்று நம்புவது நினைப்பதற்கே கேளிக்கையானது. அவர்கள் வெளியேற்றப்படுவதால் பாதிக்கப்படப்போவது நவீன சமூகம்தான்.

மனித ஆதி அறிவின் சொற்ப மிச்சமாகவும், மனிதத்தின் கடைசி சாட்சியாகவும், இயற்கை மருத்துவ வாழ்வியலின் கடைசிக் குடியாகவும் இருக்கும் அவர்களால் மட்டும்தான் நம்மை நவீனத்திலிருந்து காப்பாற்ற முடியும். அவர்களின் ஆதி அறிவு கதைகளாகிப்போவதற்குள், அவற்றைப் பதிவு செய்துவிட வேண்டும். வரலாற்றில் அறியப்பட்ட முதல் பேரழிவின்போது மோசஸிடம் இருந்த கையேட்டினைப் போன்றது இந்தப் பழங்குடிகளின் வாழ்க்கை முறை.

அதை 12 அத்தியாயங்களாகப் பார்க்க இருக்கிறோம். காட்டுவாசிகளிடமிருந்து கற்க இருக்கிறோம்.

- பயணிப்போம்.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon