மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

மேலூர் மாஜிஸ்திரேட் பணிநீக்கம் செல்லும்!

மேலூர் மாஜிஸ்திரேட் பணிநீக்கம் செல்லும்!

வழக்கறிஞரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட மேலூர் ஜுடீஷியல் மாஜிஸ்திரேட்டை பணிநீக்கம் செய்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் ஜுடீஷியல் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றிய மகேந்திர பூபதி தன்னை செல்போனில் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக வழக்கறிஞர் அமலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புகார் அனுப்பினார். அதேபோல் குற்ற வழக்கில் தொடர்புடைய மேலூர் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் சரவணனை செல்போனில் தொடர்புகொண்டு பேசியதாகவும் கூறப்பட்டது.

இந்தப் புகார்களை விசாரித்த உயர் நீதிமன்றக் கண்காணிப்புப் பதிவாளர், மாஜிஸ்திரேட்டை பணிநீக்கம் செய்ய பரிந்துரைத்தார். அதற்கு உயர் நீதிமன்ற முழு அமர்வு ஒப்புதல் அளித்ததையடுத்து மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதியை பணிநீக்கம் செய்து தமிழக அரசு 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் நியமிக்கக்கோரி மகேந்திர பூபதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்து மனுதாரருக்குப் போதுமான வாய்ப்பு வழங்கி அனைத்து நடைமுறைகளும் பின்பற்றிய பிறகே பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீதிபதிகள் தங்கள் பணியின்போது அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நேர்மை சம்பந்தப்பட்டது என்பதால் அவருக்கு எதிரான பணிநீக்க உத்தரவு அதிகபட்சமானது அல்ல என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon