மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

அம்பேத்கர் சிலை போராட்டம்: சிறுத்தைகள் மீது வழக்கு!

அம்பேத்கர் சிலை போராட்டம்: சிறுத்தைகள் மீது வழக்கு!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு சிதைக்கப்பட்ட நிலையில் மறுநாளே அந்த இடத்தில் புதிய அம்பேத்கர் சிலையை நிறுவியுள்ளது தமிழக அரசு. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுகளைப் பெற்ற நிலையில் அம்பேத்கர் சிலைத் தகர்ப்பை ஒட்டி தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களை தமிழக அரசு கையாண்டுள்ள விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் லண்டனில் இருக்கும் நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை இடித்துத் தகர்க்கப்பட்ட இடத்தில் இரவோடு இரவாக புதிய சிலை ஒன்றைத் தமிழக அரசு நிறுவியிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கைக்கு ஏற்ப சிலையை நிறுவிய தமிழக அரசுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூகப் பதற்றத்தைத் தணிக்கும் விதமாக தமிழக அரசு விரைந்து எடுத்துள்ள இந்த நடவடிக்கையைப் பாராட்டுகிறோம், நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோலவே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட சாதி பயங்கரவாதிகளை ஒடுக்குவதிலும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இதுவே ஒரு மோசமான முன்னுதாரணமாக ஆகிவிடும். எனவே, இதில் எவ்வித சமரசமும் கூடாது எனத் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், அவரது உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 26ஆம் தேதி அம்பேத்கர் சிலையைத் தீர்ப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் சிறுத்தைகள் கட்சியினர் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 20 இடங்கள் முதல் அதிகபட்சம் 40 இடங்கள் வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். அக்கட்சியின் வலிமைக்கேற்ப 30 பேர் முதல் 100-க்கும் மேற்பட்டோர் வரை சாலை மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

மறியல் செய்தவர்கள் மீது வழக்கமான நடவடிக்கை எடுத்து முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவர் மீதும் முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு காவல் துறை மேலிடம் நேற்று மாலை உத்தரவிட்டது.

பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், கூட்டமாகக் கூடி சதித் திட்டம் தீட்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அத்தனை பேர் மீதும் சில நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை பதிவு செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையின் இந்த நடைமுறை வித்தியாசமானதாகவும் விபரீதமானதாகவும் விடுதலைச் சிறுத்தைகளால் பார்க்கப்படுகிறது.

“தகர்க்கப்பட்ட சிலைக்குப் பதில் புதிய அம்பேத்கர் சிலையை தமிழக அரசு நிறுவியது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் கடுமையான எதிர்ப்பை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதை சமாளிக்க விடுதலைச் சிறுத்தைகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபட்ட சிறுத்தைத் தொண்டர்கள் ஒவ்வொருவர் மீதும் குற்றப்பத்திரிகை பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி அலைக்கழிப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. ஜனநாயக ரீதியான போராட்டங்களை இப்படி அணுக ஆரம்பித்தால் அது அபாயத்தில்தான் போய் முடியும். இதுபற்றி, திருமாவளவனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்கிறார்கள் சிறுத்தைகள் நிர்வாகிகள்.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


டிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா? குழப்பத்தில் தினகரன்


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


செவ்வாய், 27 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon