மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

பும்ரா வேகத்தில் இந்தியா முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி!

பும்ரா வேகத்தில் இந்தியா முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி!

நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

வெஸ்ட் இண்டீஸ் தீவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று ‘டி20’ போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி20 தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என வென்றது. இதன் மூலம் டி20, ஒருநாள் போட்டிகளில் தொடரைக் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியது இந்தியா.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கியது. முதலில் இந்தியா பேட் செய்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்கள் எடுத்தது.

அடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் (16 ரன்) நடுவரின் தவறான எல்.பி.டபிள்யூக்கு இரையானார். தொடர்ந்து லோகேஷ் ராகுல் 38 ரன்னிலும், புஜாரா 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதன் பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலியும், துணை கேப்டன் ரஹானேவும் கூட்டணி அமைத்து அணியைச் சரிவிலிருந்து காப்பாற்றினர். நிதானமாக ஆடிய இருவரும் தங்களது அரை சதத்தை கடந்தனர். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 51 ரன்களுடனும், ரஹானே 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் நான்காவது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். வந்த வேகத்திலேயே கேப்டன் விராட் கோலி (51 ரன்) சேஸ் பந்தில் வெளியேறினார். இதையடுத்து ரஹானேவுடன், ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். முதல் இன்னிங்சில் 32 ரன்கள் எடுத்த விஹாரி, இரண்டாவது இன்னிங்சிலும் தனது பொறுப்பான ஆட்டத்தை நிரூபித்தார். இந்த ஜோடி களத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியது. அபாரமாக ஆடிய ரஹானே தனது 10ஆவது சதத்தை எட்டினார். கேப்ரியல் பந்தில் ரஹானே 102 ரன்னில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 7 ரன்னில் முதல் சதத்தை நழுவ விட்ட விஹாரி 93 ரன்களில் வீழ்ந்தார். ரிஷாப் பண்ட் 7 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

இந்திய அணி 2ஆவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்காக 419 ரன்களை நிர்ணயிக்கப்பட்டது இந்தியா.

2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய பிராத் வெயிட் 1 ரன்னும், ஜான் சேப்பல் 7 ரன்னும் எடுத்து பும்ரா பந்து வீச்சில் வந்த வேகத்திலேயே வெளியேறினர். பந்து வீச்சில் பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா முழுமையான ஆதிக்கம் செலுத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி, இவர்களது வேகத்தை சமாளிக்க முடியாமல் ரன் எடுக்கவும், விக்கெட்டுகளை காப்பாற்றவும் தடுமாறியது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அடுத்து களமிறங்கிய புரூக்ஸ் 2 ரன்னும், ஹெட்மயர் 1 ரன்னும், டேரன் பிராவோ 2 ரன்னும், ஷாய் ஹோப் 2 ரன்னும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 8 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 12 ரன்களும், கேப்ரியல் ரன் ஏதும் எடுக்காமலும் எடுத்து அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கேமர் ரோச் மட்டும் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். கேமர் ரோச் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் 19 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 26.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அபாரமாக பந்து வீசிய பும்ரா 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், முகமது சமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இதன்படி இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


லண்டனில் அமைப்பு திரட்டும் திருமாவளவன்


வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon