மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: காடுகளை விழுங்கிய காங்கிரீட் காடு – பசுமை சென்னை

சிறப்புக் கட்டுரை: காடுகளை விழுங்கிய காங்கிரீட் காடு – பசுமை சென்னை

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

வரிப்புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் நில அளவை செய்வது சிரமமாக உள்ளது என்று அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி ஓர் ஆவணம் சத்தியமங்கலம் காட்டில் பதிவானதல்ல, சென்னையின் ஒரு பகுதியாக மாறிவிட்ட, வண்டலூர் நிலத்தீர்வை ஆவணத்தில் 1910ஆம் ஆண்டு குறிப்பிட்டுள்ளதாகச் சூழலியல் ஆய்வாளர் சு.தியோடர் பாஸ்கரன் தனது கையிலிருக்கும் பூமி நூலில் குறிப்பிடுகிறார்.

கி.பி மூன்றாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் வாழ்ந்த மயிலாப்பூர் பகுதியில் நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்டதாக தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன. சென்னை தீவுத்திடல் பகுதியை நரிமேடு என்றுதான் அழைத்துள்ளார்கள். கி.பி 808 நந்திவர்மர் ஆட்சிக் காலத்தில் திருவல்லிக்கேணி குலங்கிழார்கள் வேளாண் நிலங்களை அடகு வைத்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

உப்பு, மீன், விறகு, வைக்கோல், ஜவுளி, பால், அரிசி, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை, சாந்தோம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, எழும்பூர் பகுதிகளுக்கு படகுப் போக்குவரத்து மூலமே கொண்டு சென்றுள்ளார்கள். சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள கருவாட்டு மண்டிக்கு ஆந்திராவில் இருந்து படகுகள் மூலமாகவே கருவாடு வந்து இறங்கியுள்ளது. மயிலாப்பூர் பகுதியிலுள்ள தண்ணித்துறை என்ற இடத்திற்கு காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கொற்றலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு ஆறு மூன்றையும் இணைத்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வெட்டாறு எனப்படும் பக்கிங்காம் கால்வாய், எழும்பூர் ஆறு என்றழைக்கப்படும் வடக்காறு, கூவம் ஆறு, அடையாறு, கேப்டன் காட்டன் கால்வாய், ஒட்டேரி நல்லா, மாம்பலம் கால்வாய் போன்ற ஆறுகள் சென்னைப் பகுதி கிராமங்களை வளப்படுத்தி, நிலத்தடி நீரை மேம்படுத்தி, நீர்வழிப் போக்குவரத்தின் ஆதாரங்களாக விளங்கியுள்ளன. சிறியதும், பெரியதுமாக ஏரிகளும், குளங்களும், விவசாய நிலங்களும் ஆறுகளைச் சார்ந்து ஆயிரக்கணக்கில் இருந்துள்ளன.

பாவேந்தர் பாரதிதாசன் தனது குறிப்புகளில், முதல் நாள் 4 மணிக்கு தோணியில் ஏறி அடுத்த நாள் காலை 9 மணிக்கு மகாபலிபுரம் சென்றதாக, ஆற்றில் மிதந்து சென்ற வழிப்போக்கின் இனிமையான பயணத்தைக் குறிப்பிடுகிறார்.

வரலாற்று ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி, பொதுவுடைமை இயக்கத்தலைவர் ஜீவானந்தம், குத்தூசி குருசாமி, திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்டோரும் சென்னை ஆறுகளின் படகுப் பயணத்தைப் பதிவு செய்துள்ளனர். கலைஞர் கருணாநிதியும், புரட்சித் தலைவர் எம்ஜிஆரும் கூவம் ஆற்றில் படகுகளில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை புல் பாங்கான பகுதியாகவே இருந்துள்ளது. புற்களும், இலைக்கள்ளியும் அதிகம் வளர்ந்துள்ளன. மரங்களும், முற்செடிகளும் போர்த்தப்பட்ட சிறு சிறு குன்றுகள், தென்னை, பனை, ஈச்ச மரங்கள், சவுக்கு மரங்கள் நிறைந்து இருந்திருக்கிறது. வேம்பு, அரச மரம், ஆல மரம், நிழல்வாடி மரம், புங்கை மரம், புளிய மரம், பூவரசு மரங்கள் அதிகம் இருந்துள்ளன. நெல் விவசாயம் மட்டுமின்றி, வெற்றிலை விவசாயமும் நடந்திருக்கிறது. கூவம் ஆற்றையும், அடையாற்றையும் இணைத்த குதிரையின் லாட வடிவ லாங் டேங்க் ஏரி சென்னையின் இதயம் போல அமைந்திருக்குமாம்.

அடையாறு கடலில் கலக்கும் பகுதியில் சதுப்பு நிலக்காடுகள், பெருமரங்கள் நிறைந்த காடுகளாக இருந்துள்ளன. தற்போதைய மத்திய கைலாஷ் பகுதி முதல், பள்ளிக்கரணை தொட்டு, பூஞ்சேரி கூட் ரோடு வரை சதுப்பு நிலங்களாகத்தான் பரந்து காணப்பட்டிருக்கிறது. மணற்பாங்கான சென்னை கடற்கரையும், முகத்துவாரங்களும் மீனவர்களின் வாழ்விடமாகவும், கடல்வாழ் உயிரினங்களின் புகலிடமாகவும் விளங்கியுள்ளன. கடல் மீன்பிடித்தல் மட்டுமின்றி, ஆறுகளில் உள்நாட்டு மீன்பிடித்தலும் நடைபெற்று இருக்கிறது.

எப்போதும் வெப்பம் அதிகமாக இருக்கும் சென்னையில் மார்கழி, தை, மாசி குளிர்காலமாகவும், பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்கள் கோடைக்காலமாகவும், ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்கள் குறைவான மழை பெய்யும் முன் கார் காலமாகவும், ஐப்பசி, கார்த்திகை பின் கார் காலத்தில் அதிக மழைப்பொழிவுமாக காலநிலை இருந்துள்ளது. சூறாவளி, புயல் அதிகம் தாக்கும் இடமாகவும், கடல் மட்டத்திலிருந்து உயரம் குறைவான பகுதியாகவும் சென்னை இருக்கிறது. 1781, 1876, 1877, 1878 ஆண்டுகளில் சென்னையில் வறட்சி ஏற்பட்டுள்ளது, 1947, 1954, 1968, 1972, 1982, 1983, 2001, 2003, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியுள்ளது. 1943, 1976, 1985, 2002, 2005, 2015 ஆகிய ஆண்டுகளில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ் டவுனுக்கு மேற்குப்பகுதியில் பீப்பிள்ஸ் பார்க் என்ற மக்களின் நந்தவனம் இருந்துள்ளது. அந்த மிருகக்காட்சி சாலையில் சிங்கம், புலி, கரடி, யானை, தீக்கோழி உள்ளிட்ட உயிரினங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. பீப்பிள்ஸ் பார்கில் உள்ள சக்கர வடிவிலான குளத்தில், பொழுது போக்கிற்காக மக்கள் படகு சவாரி செய்துள்ளனர். பெண்களுக்காகத் தனியே மை லேடிஸ் பூங்கா எனப்படும் பேரக்ஸ் நெய்டன் பார்க், சென்னை கோட்டை அருகே கம்பெனி தோட்டம், அரசினர் தோட்டம், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நேப்பியர் பார்க், ராயபுரம் பகுதியில் ராபின்சன் பார்க், கிண்டி லாட்ஜ் என்றழைக்கப்பட்ட ஆளுநரின் தோட்டம் உள்ளிட்டவை, காடுகள் இருந்த பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட இயற்கைப் பகுதிகள்.

காட்டுப்பாதையும், மரங்களின் அடர்த்தியும் இயற்கையாகவே அமைந்து காணப்பட்டதால், எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்கு எதிரே சிவாஜி கார்டன் என்ற ஸ்டூடியோவில் காடுகளில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை உருவாக்கப்பட்ட நகரம் என்றாலும், சோழர், பல்லவர், பாண்டியர் காலத்தில் ஆட்சி செய்யப்பட்ட கிராமங்கள் இந்த இடத்தில் இருந்துள்ளன. கிரேக்கர்கள், ரோமானியர்கள், சீனர்களோடு தமிழர்களின் வாணிப தலமாக சென்னை இருந்துள்ளது.

நீர் நிலைகள், மரங்கள், பூக்கள் இப்படி அப்பகுதியின் சிறப்பே, கிராமங்களின் பெயராகவும் இருந்துள்ளது. அல்லிக்கொடி நிறைந்த பகுதி அல்லி குளம், அதுவே திரு, அல்லி, கேணி அதாவது திருவல்லிக்கேணி, தென்னை மரங்கள் நிறைந்த பேட்டை தேனாம்பேட்டை, வேப்ப மரங்கள் நிறைந்த பகுதி வேப்பேரி, புளியமரங்கள் நிறைந்த பகுதி புளியந்தோப்பு, மல்லிகைப் பூக்கள் அதிகம் மலர்ந்த பகுதி பூவிருந்தவல்லி, புரசை மரங்கள் அதிகமாக இருந்தது புரசைவாக்கம், பனை மரங்கள் நிறைந்த ஊர் பனையூர், அத்தி மரங்கள் அதிகமான பேட்டை அத்திப்பேட்டை, மூங்கில் பிரம்புகள் நிறைந்த பகுதி பெரம்பூர், ஆல மரங்கள் இருந்ததால் ஆலந்தூர், ஆலங்காடுகள் உள்ள பகுதி திருவாலங்காடு, வேலங்காடுகள் உள்ள பகுதி திருவேற்காடு, மா மரங்கள் உள்ள பகுதி மாங்காடு, இரும்புலி மரங்கள் அதிகமாக இருந்த பகுதி இரும்புலியூர், கடலை அடைந்த ஆறு அடையாறு இப்படி சென்னையின் பல இடங்கள், நிலப்பரப்பின் தன்மையைச் சொல்வதாகவும், சூழலியல் வரலாற்றின் அடையாளமாகவும் உள்ளன.

சென்னையில் பெய்யும் மழை நீரை நிலத்தடியில் செறிவூட்டி, கடலுக்குக் கொண்டு செல்ல 16 கால்வாய்கள் இருக்கின்றன.

சென்னையில் கட்டமைக்கப்பட்ட சாலைகள் அனைத்தும் பசுமையாகத்தான் இருந்துள்ளன. அதனால்தான் சென்னை கடற்கரைக்கும், வேளச்சேரிக்கும் இடையிலான சாலைக்கு கிரீன் வேஸ் ரோடு, பசுமை வழிச் சாலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தென்சென்னை பகுதியில் 2018ஆம் ஆண்டில் ஆய்வு நடத்திய தமிழக அரசின் சென்னை நதிகள் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பு சுமார் 121 வகையான 10,000 மரங்கள் இருப்பதாக அறிக்கை வெளியிட்டது.

இப்போதைய, கிண்டி தேசியப் பூங்கா சூழியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஏரிகளும், ஐந்து குளங்களும் உள்ள கிண்டி உயிரியல் பூங்காவில், 350 தாவர வகைகள், 130 பறவை வகைகள், 60 வகை பூச்சிகள், 60 வகை சிலந்திகள், 500க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள், வெளிமான்கள், நரிகள், கீரிகள், பாம்புகள், ஆமைகள் நிறைந்த வளமான பகுதியாக இருக்கின்றன. அதனால்தான் கிண்டி காடுகள் சென்னையின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது.

சென்னை கோட்டூர்புரம் மரப்பூங்கா மாநகரத்தின் நடுவில் 500க்கும் மேற்பட்ட மரங்களுடன் ஒரு சிறிய காடாக இருக்கின்றன. ஐந்து ஏக்கர் பரப்பளவிலுள்ள இப்பூங்காவில் மான்கள் நடனமாடும், பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும். அதுமட்டுமல்ல தூக்கணாங்குருவி கூடுகட்டும் கருவேல மரம், பறவைகளுக்குப் பிடித்த நெய்கொட்டான் மரம் என்று பல்லுயிர்களும் விரும்பும் இடமாகவும் உள்ளது.

நடக்க நடக்க விரியும் பாதை, இருபுறமும் செழித்துத் தழைக்கும் மரங்கள், மரங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள், மரங்களில் எட்டிப்பார்த்து கீச்சிடும் பறவைகள் இப்படி எழில் கொஞ்சும் அழகுடைய கல்லூரியாக சேலையூர் காட்டுப்பகுதியில் அமைந்த கிறிஸ்தவக் கல்லூரி விளங்குகிறது. மாணவர்களின் எண்ணிக்கையைவிட மரங்களின் எண்ணிக்கைதான் இங்கு அதிகம்.

சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்தின் அருகே காடுகளின் நடுவே இருக்கும், பிரம்ம ஞான சபையின் தலைமையகத்தில், இந்தியாவிலேயே மிகப் பழைமையான ஆலமரம் என்ற பெருமையுடன் 450 வயதைக் கடந்த அடையாறு ஆலமரம் உள்ளது.

1562ஆம் ஆண்டு விதைக்கப்பட்ட அடையாறு ஆலமரம் 1500க்கும் மேற்பட்ட விழுதுகளுடன், சுமார் 70,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. அரசு, வேம்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மரங்களும், 150 வகையான மூலிகைச் செடிகளும், 20 வகையான வண்ணத்துப்பூச்சிகளும், 67 வகையான பறவைகளும், 3,000 வவ்வால்களும், ராஜநாகம் உள்பட 12 வகையான பாம்புகளும் இங்குள்ளன.

சென்னை மாநகரின் மையத்தில், அண்ணா சாலை அமெரிக்கத் தூதரகம் எதிரில், பசுமையான செம்மொழி தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறையால் 24.11.2010 அன்று உருவாக்கப்பட்ட இப்பூங்காவில் பசுமை நிறைந்த செடி கொடிகளால் ஆன நுழைவு வாயில், பச்சைப் பசேல் சுவர்கள், மூங்கில் கூரைகள், தோட்ட வீடு, அழகிய நீரூற்று என இயற்கை நம்மை வரவேற்கும். சென்னை சேத்துப்பட்டு ஏரியில் அமைக்கப்பட்ட பூங்கா, பருத்திப்பட்டு ஏரியில் அமைக்கப்பட்ட பூங்கா உள்ளிட்டவை இயற்கை வளங்களைக் காக்கும் ஆர்வத்தை, இயற்கையின் மீதான நேசத்தை அதிகரித்துள்ளன. இதுதவிர சென்னை மாநகராட்சியின் மூலம் 200 பெரிய பூங்காக்களும், 600க்கும் மேற்பட்ட சிறிய பூங்காக்களும் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கழிவுநீர்களைச் சுத்திகரிக்கும் தன்மையோடு, நீர்வாழ் உயிரினங்களின் புகலிடமாக கோரைப்புற்கள் நிறைந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆமைகள், மீன்கள் மட்டுமின்றி கோணமூக்கு உள்ளான், ஊசிவால் வாத்து, சாம்பல் தலை ஆள்காட்டி, மஞ்சள் வாலாட்டி, சோழக்குருவி, நீர் தாழைக்கோழி, நாமக்கோழி, தாமிர இலைக்கோழி, அரிவாள் மூக்கன், செந்நீலக்கொக்கு, கானான் கோழி, பவளக்கொத்தி உள்ளிட்ட வெளிநாட்டு, உள்நாட்டு பறவைகளின் வாழ்விடமாக இருக்கிறது.

வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நூற்றுக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. வளர்க்கப்படுகின்றன. சென்னையின் தெற்கே கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை, முட்டுக்காடு நீர்நிலைப் பகுதி வளமானதாக இருக்கின்றன.

நன்மங்கலம் காடு, திரிசூலம் மலை, புனித தோமையார் மலை, திருநீர்மலை, சிறு குன்றுகள் உள்ள குன்றத்தூர், புதுப்பாக்கம் மலை, கொற்றலை ஆற்றுப் பகுதியான குடியம் மலை, தடா அருவி, பழவேற்காடு ஏரி எனச் சென்னையின் பசுமையைப் பறைசாற்ற, சென்னையிலும், சென்னையைச் சுற்றியும் இன்னமும் பல பகுதிகள் உள்ளன.

வெப்ப மண்டல பகுதியில் அமைந்த கடலோரப் பகுதியின் நன்னீர் ஆறுகளும், காடுகளும், இயற்கை வளங்களும் ஆங்கிலேயர்களை சென்னை என்ற நகரை உருவாக்கும் அளவுக்கு ஈர்த்துள்ளது. இப்போது காடுகளையும், கிராமங்களையும், விளைநிலங்களையும், நீர்பிடிப்பு பகுதிகளையும், நீராதாரங்களை விழுங்கி விட்டு, தொழில் நகரமாக காங்கிரீட் காடுகளாக நிமிர்ந்து நிற்கிறது சென்னை மாநகரம். வந்தாரை வாழவைக்கும் சென்னையின் இயற்கை ஆதாரங்களை, மிச்சமுள்ள வளங்களைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் சென்னைக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.

வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், செடி வளர்ப்பு, மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல், கழிவுநீர் மறுசுழற்சி, ஞெகிழி குறைப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு தவிர்ப்பு இவற்றோடு இயற்கையைக் காக்கும் அரசின் கொள்கைகளும், செயல்பாடுகளும் இணைந்தால் சென்னையின் வளம் நிச்சயம் மேம்படும்.

இயற்கை வளமிக்க பல்லுயிர் சூழல் நிறைந்த நம் சென்னையில், மூன்று நதிகள், நான்கு நீர்நிலைகள், இருநூறுக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், எழுபதுக்கும் மேற்பட்ட கோயில் திருக்குளங்கள், ஐந்து சதுப்பு நிலங்கள், ஆறு காடுகள் முற்றிலும் வறண்டு, அழிவின் விளிம்பில் இருப்பதாக மத்திய அரசின் நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. வளங்களைக் காப்பதும், எதிர்கால வாழ்வைத் தீர்மானிப்பதும் நம் கைகளில்தான் இருக்கிறது.


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


லண்டனில் அமைப்பு திரட்டும் திருமாவளவன்


வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon