ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மேலும் 4 நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தற்போது சிபிஐ காவலில் உள்ளார். இவரது முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அதன்படி சிதம்பரத்தை ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று தெரிவித்து இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது. முன் ஜாமீன் காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் நீதிபதிகள் பானுமதி, போபண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட அறிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் எப்படி எங்களால் வாதிடமுடியும். அமலாக்கத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் ஊடகங்களில் கசிந்துள்ளது என்றார். இதற்கு அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, எதிர்ப்புத் தெரிவித்தார். சிதம்பரம் தரப்பிடம் பிரமாண பத்திரம் கொடுத்த பிறகே ஊடகங்களில் வெளியானது என்று தெரிவித்தார்.
சிதம்பரத்தின் மின்னஞ்சல்கள், சொத்துக்கள் குறித்து அமலாக்கத் துறையினர் கண்டறிந்ததாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். ஆனால் இது குறித்து ஒரு முறை கூட கடந்த 3 விசாரணைகளின் போது அமலாக்கத் துறையினர் அறிவிக்கவில்லை என்றும் எப்போது ஆவணங்களைக் கைப்பற்றினார்கள் என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.
மேலும், உங்களிடம் ட்விட்டர் கணக்கு இருக்கிறதா என்று விசாரணை அமைப்பான சிபிஐ கேள்வி எழுப்புகிறது. இதுதான் சிபிஐ விசாரணையின் தரம் என்று விமர்சித்த கபில் சிபல், சிதம்பரம் வழக்கிலிருந்து தப்பித்து வருவதாக துஷார் மேத்த கூறுகிறார். அப்படியானால் சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளையும், அவர் தப்பிக்கிறாரா என்பதைக் கண்டறிய சிதம்பரம் கூறிய பதில்களையும் ஆராய வேண்டும் என்று கபில் சிபல் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார். இதற்கு துஷார் மேத்தா சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ளக் கூடாது என்று வாதிட்டார். பின்னர் அமலாக்கத் துறையின் பிரமாண பத்திரம் குறித்து நாளை பதில் அளிப்பதாக கபில் சிபல் தெரிவித்தார். பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சிதம்பரத்துக்குச் சொத்துகள் வங்கிக்கணக்குகள் இருப்பதாக அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கைப் பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர். மதிய உணவுக்கு பிறகு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கபில் சிபல் தன் வாதத்தைத் தொடர்ந்தார். ”இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சி.ஏ.பாஸ்கர் ராமன், கார்த்தி சிதம்பரம், இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் தந்தை என்பதால், சிதம்பரம் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரது பெயரை குறிப்பிட்டுக் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அவர் குற்றத்தில் ஈடுபட்டார் என்று எந்த முகாந்திரமும் இல்லை என்று கபில் சிபல் தெரிவித்தார். மேலும் ப.சிதம்பரத்திற்கு வெளிநாட்டில் இருப்பதாக அமலாக்க துறையால் சொல்லப்படும் ஒரு சொத்தையாவது குறிப்பிட்டால் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கபில் சிபல் சவால் விடுத்தார். இதற்கு தூஷார் மேத்தா, அனைத்து ஆவணங்களையும் காண்பிப்பதாக எதிர்சவால் விடுத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நாளை மதியம் வரை சிதம்பரத்தைக் கைது செய்யக் கூடாது என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை நாளை மதியத்துக்கு ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே மதியம் 3.30 மணியளவில் சிதம்பரத்தை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது சிதம்பரத்திடம் மேலும் 5 நாட்கள் விசாரணை நடத்த சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் கவுர், சிதம்பரத்தின் சிபிஐ காவலை, மேலும் 4 நாட்கள் அதாவது ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். அவரை மீண்டும் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
மேலும் படிக்க
ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!
ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!
இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!