மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

அம்பேத்கர் சிலை உடைப்பு: நீதிமன்றம் கருத்து!

அம்பேத்கர் சிலை உடைப்பு: நீதிமன்றம் கருத்து!

சிலை உடைப்பு சம்பவத்துக்கு தனிச்சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், காவல் நிலையத்துக்கு எதிரே இருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இவ்வழக்கில் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். சிலை உடைக்கப்பட்ட இடத்திலேயே 6 அடி உயரம் கொண்ட அம்பேத்கரின் புதிய சிலையைத் தமிழக அரசு நிறுவியது. சிலை உடைப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திருச்சி, கோவை, வேதாரண்யம், சென்னை என பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலையை உடைத்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்து வருகின்றனர்.

அம்பேத்கர் சிலை உடைப்பு செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “ஜனநாயக அரசியல் என்கிற முகமூடி அணிந்துள்ள பாசிச சக்திகள் விதைக்கும் விஷ விதைகள் முளைக்கின்ற காரணத்தால் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் சிலைகளைச் சிதைப்பதும் தலையைத் துண்டித்து ஆனந்தப்படுவதுமான ஆபத்து தொடர் நிகழ்வாகி வருகிறது. இத்தகைய வன்முறையாளர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களின் கோரவெறியைக் கட்டிப்போட்டுக் கட்டுப்படுத்தும் கடமை உணர்வை மாநில உளவுத்துறை இழந்துவிட்டதோ என்ற சந்தேகத்தைப் பலமாக ஏற்படுத்தும் வகையில் சம்பவங்கள் நிகழ்கின்றன. சட்டம் - ஒழுங்கிற்குச் சவால் விடும் இத்தகைய போக்குகளை அரசும் காவல்துறையும் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக அடக்கி ஒடுக்கி அப்புறப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, விசிக வழக்கறிஞர் பார்வேந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலை உடைப்பு தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். அதில் சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும். அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்த போது சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தனிச்சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon