மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : தடுக்க சிறப்பு ஏற்பாடு !

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : தடுக்க சிறப்பு ஏற்பாடு !

குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அம்மா பேட்ரோல் எனப்படும் ரோந்து வாகன சேவையை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைத்திருமணங்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், வன்புணர்வு, வரதட்சணைக் கொடுமை மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள், கணவன் மற்றும் உறவினர்களால் இழைக்கப்படும் தொல்லைகள் என்று குழந்தைகளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தடுக்கும் விதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் கூடுதல் டிஜிபி ரவி தலைமையிலான தனிப்பிரிவு ஒன்றும் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தனிப்பிரிவிற்காக மாவட்டந்தோறும் தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பிரிவானது மகளிர் காவல்நிலையங்களுடன் இணைக்கப்பட்டு பணியாற்றி வருகின்றது.

தற்போது இந்தப் பிரிவின் கீழ் வரும் காவல் நிலையங்களுக்குப் பிங்க் நிறத்தில் சிறப்பு ரோந்து வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ‘அம்மா பேட்ரோல்’ என்று பெயரிடப்பட்ட இந்த சிறப்பு வாகனங்களின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 26 ஆம் தேதி) கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

ஏழு கோடியே ஐம்பது இலட்ச ரூபாய் மதிப்பில் 40 வாகனங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப் பட்டு இயக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் 35 காவல் நிலையங்களுக்கு இந்த ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற ஐந்து வாகனங்கள் அவசர தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களில் குழந்தைகளுக்கான உதவி எண் மற்றும் பெண்களுக்கான உதவி எண் என்று தனியாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான அவசரகால உதவி எண் 1098 என்றும் பெண்களுக்கான அவசரகால உதவி எண் 1091 எனவும் வாகனத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்துறை செயலாளர், சென்னை பெரு நகர காவல் ஆணையர் விஸ்வநாதன், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி திரிபாதி, தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon