மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

வேலூரில் தனி மயானம் : நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி!

வேலூரில் தனி மயானம் : நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி!

ஆதிதிராவிடர்களுக்கு தனி மயானம் அமைத்துக் கொடுத்திருப்பது, சாதிப் பிரிவினையை அரசே ஊக்குவிப்பது போல் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 26) அதிருப்தி தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டம் நாராயணபுரம் பகுதி ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த குப்பன் கடந்த வாரம் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலை விளைநிலங்கள் வழியே எடுத்துச் செல்ல, அந்த நில உரிமையாளர் அனுமதிக்கவில்லை. இதனால் அங்கிருந்த பாலத்திலிருந்து, கயிறு கட்டி குப்பனின் உடல் கீழே இறக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.

இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. குப்பன் உடலைக் கயிறு கட்டி இறக்கியது தொடர்பாக விரிவான அறிக்கையை ஆகஸ்ட் 26ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்துக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு உத்தரவிட்டது, இதற்கிடையில் ஆதிதிராவிட சமூக மக்களுக்கு அப்பகுதியில், 50 செண்ட் நிலம் இடுகாட்டுக்காக ஒதுக்கியிருப்பதாக ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சம்பவம் நடந்த நாராயணபுரம் கிராமத்தில் இருக்கும் ஆதிதிராவிடர்களுக்குத் தனி மயானம் அமைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்குத் தனிக் காவல் நிலையங்களோ, மருத்துவமனைகளோ, அலுவலகங்களோ இல்லாத நிலையில் தனி மயானம் எதற்கு?. தனி மயானத்தை அமைத்துக் கொடுத்திருப்பது அரசே சாதியை ஊக்குவிப்பது போல் இருக்கிறது என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும், தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளின் பெயர்களில் இருக்கும் ’ஆதிதிராவிடர்கள் நலப்பள்ளி’ என்ற பெயரை நீக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

இறுதியாகக் குப்பன் உடலைக் கயிறு கட்டி இறக்கிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon