மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

காஷ்மீர்: மோடி குறித்து டிரம்ப்

காஷ்மீர்: மோடி குறித்து டிரம்ப்

காஷ்மீர் விவகாரத்திற்குப் பின், பிரான்சில் இன்று நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்தித்தனர்.

பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கடைசி பயணமாக பிரான்ஸ் நாட்டில் பியரிட்ஸ் நகரில் நடைபெறும் ஜி7 வல்லரசு நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக சென்றுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து அதிபர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கியமான உலகத் தலைவர்களை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி. முதலில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்து பேசிய மோடி காஷ்மீர் விவகாரம், பாதுகாப்பு கல்வி இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விவாதித்தனர். அதன்பிறகு ஐ.நா சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குதர்ரெஸ்ஸுடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை சந்தித்துப் பேசினார். மாலை நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் மோடி உரையாடினார்.

அதன் பின்னர், மாலை 4 மணி அளவில் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்தித்தனர். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் பேசுவதை மத்திய அரசு விரும்பாத நிலையிலும் ஜி7 மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் குறித்து மோடியிடம் பேசுவேன் என்று டிரம்ப் முன்னரே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இச்சந்திப்பை குறித்து மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார், “ஒவ்வொரு துறையிலும் அமெரிக்கா-இந்தியா தொடர்ந்து இணைந்து செயல்படும். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், நாங்கள் (மோடி மற்றும் டிரம்ப்) சந்தித்தோம். 700 மில்லியன் வாக்காளர்கள் தங்கள் தீர்ப்பை வழங்கினர். அவர் என்னை வாழ்த்த தொலைபேசியில் பேசினார். அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படும் ஜனநாயக நாடுகள்” என்றார்.

காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பல இருதரப்பு பிரச்சினைகள் உள்ளன எனக் குறிப்பிட்டார். "பாகிஸ்தானில் தேர்தலுக்குப் பிறகு, நான் பிரதமர் இம்ரான் கானை அழைத்தேன். இரு நாடுகளும் வறுமை, சுகாதார பிரச்சினைகள், கல்வி ஆகியவற்றிற்கு எதிராக போராட வேண்டும் என்றும்; இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து இந்த பிரச்சினைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் பேசினேன்" என்று மோடி கூறினார்.

மேலும், காஷ்மீர் ஒரு இருதரப்பு பிரச்சினை என்றும், காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் வேறு எந்த நாட்டையும் தொந்தரவு செய்ய இந்தியா விரும்பவில்லை என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மோடியிடம் பேசியதைப் பற்றி டொனால்ட் டிரம்ப் கூறுகையில், "நாங்கள் நேற்று இரவு காஷ்மீர் பற்றி பேசினோம், பிரதமர் காஷ்மீர் விவகாரம் கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர்கிறார். அவர்கள் பாகிஸ்தானுடன் பேசுவார்கள், அவர்களால் மிகச் சிறப்பாக ஏதாவது செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்துக்குப் பின் மோடி-டிரம்ப் ஆகிய இரு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon