மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 செப் 2020

ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!

ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 26) தள்ளுபடி செய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இன்று (ஆகஸ்ட் 26) வரை சிதம்பரத்தைக் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் ப.சிதம்பரம் தரப்பில், முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும், சிபிஐ காவலுக்கு எதிராகவும், அமலாக்கத் துறை கைது செய்வதற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடி வருகின்றனர்.

இன்றுடன் சிதம்பரத்தின் காவல் நிறைவடையவுள்ள நிலையில், அவர் தாக்கல் செய்த மனுக்கள் இன்று (ஆகஸ்ட் 26) நீதிபதிகள் பானுமதி, போபண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் கபில் சிபல், சிபிஐ காவலுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்று தெரிவித்தார். இதனை விசாரித்த நீதிபதி பானுமதி தலைமை நீதிபதி உத்தரவுப் படியே வழக்குகள் பட்டியலிடப்படுகிறது. சிதம்பரத்தின் சிபிஐ காவலுக்கு எதிரான மனுவை இன்று பட்டியலிடுவது தொடர்பாக மீண்டும் பரிசீலனை செய்ய நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே முன் ஜாமீன் கோரிய மனுவும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது கபில் சிபல், சிதம்பரம் முன் ஜாமீன் தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் முன் ஜாமீன் கோரும் மனுவை ஜாமீன் மனுவாக ஏற்றுக்கொண்டு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி முன்ஜாமீன் ரத்துக்கு எதிரான மனுவை ஜாமீன் வழங்க கோரும் மனுவாகக் கருத முடியாது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தும், உரிய நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி பானுமதி தெரிவித்துள்ளார். தற்போது அமலாக்கத் துறை தொடர்பான வழக்கில் சிதம்பரத்துக்கு எதிராக சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

நீதிபதி பானுமதி தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் சிதம்பரத்துக்குச் சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அவரது தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சிதம்பரம் தரப்பினர் வருத்தத்தில் உள்ளனர். இதற்கிடையே சிபிஐ காவல் நிறைவடையவுள்ள நிலையில், இன்று மாலையில் சிதம்பரத்தை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேலும், காவலில் எடுக்க அவகாசம் கோர சிபிஐ திட்டமிட்டுள்ளது.


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


இங்கு அரசியல் பேசாதீர்: கூகுள் அனுப்பிய மெமோ!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon