மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

கலவரம்-தீவைப்பு: புதிய அம்பேத்கர் சிலை!

கலவரம்-தீவைப்பு: புதிய அம்பேத்கர் சிலை!

வேதாரண்யத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்குப் பதிலாக, அதே இடத்தில் புதிய அம்பேத்கர் சிலையைத் தமிழக அரசு நிறுவியுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் மற்றும் போராட்டங்களைத் தவிர்க்கும் நோக்கில் உடனடியாக செயல்பட்டு புதிய சிலையை நிறுவ அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

வேதாரண்யம் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது ராஜாளிக்காட்டு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கார் மோதியுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 25) மாலை வேதாரண்யம் காவல் நிலையம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. விபத்து ஏற்பட்டதும் கார் ஓட்டுநர் அருகிலிருந்த காவல் நிலையத்துக்குள் புகுந்துள்ளார். இதன் பின் அங்கு வந்த ராமச்சந்திரன் தரப்பினர் பாண்டியன் கார் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்துள்ளனர். காவல் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அப்போது காவல் நிலையத்தில் 3 காவலர்கள் மட்டுமே இருந்ததால் தாக்குதலைத் தடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் அங்கிருந்த அம்பேத்கர் சிலை மீது தாக்குதல் நடத்தி, அரிவாளால் அம்பேத்கர் சிலையின் தலையை உடைத்துச் சிதைத்துள்ளனர். இதுமட்டுமின்றி அருகிலிருந்த கடைகளும் சூறையாடப்பட்டிருக்கின்றன. தற்போது இதுகுறித்த புகைப்படங்களும் , வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த வீடியோ ஆதாரங்களை வைத்து இதுவரை 51 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலைக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் உடனடியாக அவ்விடத்திலேயே அம்பேத்கர் சிலையை நிறுவத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி சேலம் மாவட்டம், ஆத்தூரில் தயார் நிலையிலிருந்த 6 அடி சிலையை இரவோடு இரவாக வேதாரண்யம் கொண்டு வரப்பட்டு இன்று காலை 6.30 மணியளவில் சிலை நிறுவப்பட்டது. புதிய சிலைக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அப்பகுதி முழுவதிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலை உடைப்பைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை வேதாரண்யம் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். சென்னை பெரியமேடு பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினருக்கும், விசிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். வேதாரண்யத்தில் சிலை உடைப்புக்குக் கண்டனம் தெரிவித்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் எம்.ஜி.ஆர் புகைப்படம் எரிக்கப்பட்டிருக்கிறது. இவ்விவகாரத்தை விசிக அரசியல் ரீதியாக எடுத்துச் செல்வதாகவும், இதுபோன்ற செயல்களை அதிமுக அரசு தான் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறி அக்கட்சியின் தலைவரான எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை விசிகவினர் எரித்திருக்கின்றனர். இதற்கிடையில் கோவை புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இரு அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் பின்புற கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது.


மேலும் படிக்க


ஸ்டாலின் பாதுகாப்பு வாபஸ்?


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


ஜாமீன் மறுப்பு : சிதம்பரத்துக்கு பின்னடைவு!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon