மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

வரலாறு படைத்த அந்த 38 நிமிடங்கள்!

வரலாறு படைத்த அந்த 38 நிமிடங்கள்!

தங்கம் வென்ற சிந்துவின் வெற்றியை நிர்ணயித்த அந்த முக்கியமான 38 நிமிடங்கள் எப்படி கழிந்திருக்கும்?

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (ஆகஸ்ட் 25) தங்கம் வென்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பி.வி. சிந்து ஜப்பானைச் சேர்ந்த நஸோமி ஒகுஹாராவிடம் மோதினார். போட்டி தொடங்கிய முதல் 38 நிமிடங்களிலேயே, நஸோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் சிந்து. இச்சாதனை மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையை பெறுகிறார் பி.வி.சிந்து.

விளையாட்டில் ஒரு வெற்றி என்பது வெறும் உடல் வலிமையால் மட்டும் கிடைப்பதல்ல. மனம், அறிவு, வேகம் என அனைத்தும் ஒருமித்த பயிற்சிக்கு கீழ்படிந்து செயல்பட வேண்டும். ஒழுக்கமான கட்டுப்பாட்டுக்குள் இருந்து இயங்கும் ஒரு சக்தி தான் ஆட்டத்தை தன் கட்டுக்குள் அடக்கும் ஆற்றலையும் கொடுக்க முடியும். பி.வி. சிந்துவை இவையனைத்தும் வெற்றிக்கு அழைத்து சென்றிருக்கிறது.

சிந்துவின் வெற்றிக்கு முக்கியமான காரணம் யார் எனக் கூற வேண்டுமெனில், எதிரில் விளையாடும் நஸோமி ஒகுஹாரா என கூறலாம். ஒகுஹாரா சிந்துவை பல நாட்கள் தூங்காமல் செய்தவர். சிந்துவின் திறமையை கடந்த இரண்டு வருடங்களாக சீண்டிப் பார்த்தவர், சிந்துவை ஓய்வின்றி பயிற்சியில் ஈடுபட வைத்து இந்த பைனலுக்காக தயார்படுத்தியவர் எனக் கூறிக் கொண்டே செல்லலாம்.

இரண்டு வருடங்களுக்கு முன் கிளாஸ்கோவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் போட்டியில், ஒகுஹாரா - சிந்து களத்தில் விளையாடினர். காவியமாக கொண்டாடப்படும் அந்த விளையாட்டு, 110 நிமிடங்கள் வரை சென்றிருக்கிறது. கொஞ்சம் கூட இருவரும் விட்டுக் கொடுக்காமல் தங்கள் கடைசி சக்தி வரை பயன்படுத்திய அந்த விளையாட்டு பேட்மிண்டன் வரலாற்றில் மிகப்பெரிய போர்களில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது. இறுதியில் தங்கத்தை வென்ற ஒகுஹாரா, சிந்துவிற்கு சிம்மசொப்பனமாக விளங்கத் தொடங்கினார்.

தற்போது கிடைத்த வெற்றியைக் குறிப்பிடும் சிந்து, “சென்றாண்டு இறுதிப் போட்டியில் நான் தோற்றேன், அதற்கு முன்பும் நான் பைனலிலும் தோற்றேன், எனவே இது எனக்கு மிக முக்கியமான வெற்றியாகும்”.

சிந்து இந்த வெற்றியின் மூலம், இறுதியாக அதே எதிரியை எதிர்த்து முற்றிலும் ஆதிக்கம் செலுத்தியதன் மூலம் அவரது இதயத்தைத் துளைக்கும் பேயை விரட்டினார் என்றே கூறலாம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆட்டத்தின் ஆரம்ப நிமிடங்களை பார்ப்போம்..

ஒகுஹாராவை விட 8-7 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்ற பி.வி. சிந்து, தாக்குதல் ஆட்டத்தை தொடக்கத்திலிருந்தே தொடங்கியுள்ளார். சிந்து களத்தின் மூலைகளை குறிவைத்து, தாக்குதல் ஆட்டத்தை செயல்படுத்த அது ஸ்கோர் போர்டில் புள்ளிகளை அதிகரிக்கத் துவங்கியது.

ஒரு துல்லியமான நெட் ஷாட், ஒகுஹாராவுக்கு நேராக எட்டு புள்ளிகளைப் பெற உதவியது. ஆனால் ஒகுஹாரா பேட்மிண்டன் களத்தை சற்று அகலமாக பயன்படுத்தத் தொடங்கியபோது, சிந்துவிற்கு சற்று இடைவெளி கிடைத்தது. அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, விரைவாக ஆட்டத்தின் கட்டுப்பாட்டை தன் கைகளுக்குள் கொண்டு வந்தார் சிந்து. பின்னர் இரண்டு அழகிய ஸ்மாஷ்களை சிந்து ‘ஹிட்’ செய்ய, 11-2 என்ற முன்னிலை பெறத் துவங்கினார்.

ஒகுஹாரா வேகத்தை அதிகரிக்க முயன்ற போது, எச்சரிக்கை உணர்வு அதிகம் கொண்ட சிந்து, அதனை தன் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். இவ்வாறு ஒகுஹாராவின் ஒவ்வொரு அசைவுக்கும் முன்பே கணித்து விளையாடிய சிந்து, வெற்றிக்கான இடத்தை மெல்ல அடையத் தொடங்கினார்.

ஒகுஹாரா எதிர் தாக்குதலைத் தொடங்க நினைக்கும் போது, சிந்து தனது உயரத்தைப் பயன்படுத்தி ஒகுஹாராவை நிலைகுலைய செய்து ஆதிக்கம் செலுத்தினார்.

இரண்டாவது ஆட்டத்தில், சிந்து தனது வெறித்தனமான வடிவத்தைத் வெளிப்படுத்தினார். ஒகுஹாரா ஒரு புள்ளியைப் பெறுவதற்கு முன்பு இரண்டு விரைவான புள்ளிகளைப் பிடித்தார் சிந்து. சிந்துவின் ‘ரேஸர் ஷார்ப்’ ஹிட்களுக்கு ஒகுஹாராவால் பதிலடி கொடுக்கவே முடியவில்லை. ஒகுஹாரா நெட்டுக்கு அருகில் வரும் பொழுதெல்லாம், சிந்து அவரை களத்தின் மூலைகளை நோக்கி செலுத்தினார், களத்தின் மூலையை ஒகுஹாரா தனது கட்டுக்குள் கொண்டு வர முயலும் போது நெட்டுக்கு அருகில் பதில் ஹிட் அடிக்கும் படி ஆட்டத்தை மாற்றியுள்ளார் சிந்து.

இடைவெளியில் சிந்து 11-4 என்ற முன்னிலை பெற இந்த யுக்தி பயன்பட்டது. 16-4 என்ற செட் கணக்கில், சிந்து நீண்ட நேரம் விளையாடிய போது இரண்டு அரிய பிழைகளைச் செய்தார். ஆனால் அது ஒகுஹாராவின் பலவீனமான ஆட்டத்தால் அது ஒரு பொருட்டல்ல என்றாகியது. இடைவிடாமல் ஒகுஹாராவுக்கு அழுத்தம் கொடுக்க, சிந்து மேட்ச் பாயிண்டைப் பிடித்தார்.


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


இங்கு அரசியல் பேசாதீர்: கூகுள் அனுப்பிய மெமோ!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon