மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

சசிகுமார்-விக்ராந்த்-நிக்கி சுந்தரம்: முந்தியது யார்?

சசிகுமார்-விக்ராந்த்-நிக்கி சுந்தரம்: முந்தியது யார்?

இந்த வாரம் திரைக்கு வந்த கென்னடி கிளப், பக்ரீத், மெய் ஆகிய மூன்று படங்களில் ரசிகர்கள் மனதை வென்றது யார்? அவற்றின் வசூல் நிலவரங்கள் என்ன போன்ற விரிவான தகவல்களுடன் ஓர் அலசல்.

இந்த வாரம் (ஆகஸ்ட் 23) சசிகுமார் நாயகனாக நடித்துள்ள கென்னடி கிளப், விக்ராந்த் நாயகனாக நடித்துள்ள பக்ரீத், ஐஸ்வர்யா ராஜேஷ், நிக்கி சுந்தரம் நடித்துள்ள மெய் ஆகிய மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. வெளியான மூன்று படங்களுமே அந்த படங்களில் நடித்துள்ள கதாநாயகர்களுக்கு முக்கியமான படங்கள்.

கென்னடி கிளப்

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா முதன் முறையாக இணைந்துள்ள படம் கென்னடி கிளப். மூன்று முக்கியமான இயக்குநர்கள் ஒரே படத்தில் இணைந்தது; வெண்ணிலா கபடிக் குழுவிற்குப் பின் கபடியை மையப்படுத்திய சுசீந்திரனின் படம்; பெண்களை முன்னிலைப்படுத்திய படம் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

ஜீவா, பாயும் புலி படத்திற்குப் பின் சுசீந்திரனின் படங்கள் தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், கட்டாய வெற்றியை நோக்கி மீண்டும் தனது கபடி களத்தை கையிலெடுத்துள்ளார். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இயக்குநரும் நடிகருமான சசிகுமாருக்கும் வெற்றிகரமான படம் ஒன்று தேவைப்படும் நேரமிது.

ஒரு ரசிகனின் பார்வையில் கென்னடி கிளப் எப்படி? படம் பேசுகின்ற விஷயம், பெண்களின் கபடி ஆட்டம், கிராமத்து பின்னணியில் தொடங்கும் கதை ஆகியவை ரசிகர்களை ஈர்த்தாலும், படமாக வழக்கமான பாணியையே இயக்குநர் கையாண்டதால் ரசிகர்கள் கென்னடி கிளப் படத்திற்கு ‘ஆவரேஜ்’ மார்க்கே அளித்திருக்கிறார்கள்.

அதே சமயம், வியாபார ரீதியாக கென்னடி கிளப் வலுவான இடத்திற்கு சென்றுள்ளது இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் பிரதான விளையாட்டு கபடி. பெரிதும் கவனிக்கப்படாத பெண்கள் கபடி குழுவை மையப்படுத்தியது, சசிகுமார்-பாரதிராஜா காம்பினேஷன், வலுவான போட்டியின்றி வெளியாகியது, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை ஆகியவை வெற்றிக் காற்றை கென்னடி கிளப் பக்கம் வீச வைத்துள்ளது.

கென்னடி கிளப் படத்தின் வெற்றி, சசிகுமார் நடித்துக்கொண்டிருக்கும் அடுத்தடுத்த படங்களின் வியாபார தலைவிதியை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என திரை வட்டாரங்கள் கணிக்கின்றன.

சசிகுமார் படங்களுக்கு என்று தமிழகத்தில் குறைந்தபட்ச பார்வையாளர்கள் எப்போதும் உண்டு. ஆனால் கென்னடி கிளப் படத்திற்கு முதல் நாளே நல்ல ஓப்பனிங் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்ரீத்

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒட்டகத்திற்கும் - மனிதனுக்குமான நட்பை, அன்பை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம் பக்ரீத். நடிகர் விக்ராந்த் நடித்து வெளியான படங்கள் தொடர்ச்சியாக வியாபார ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அவருக்கேற்ற பாத்திரமாகவும், கதைக்களமாகவும் பக்ரீத் அமைந்தது பாசிடிவ் பலன் அளித்துள்ளது.

ஏழை கிராமத்து விவசாயியான விக்ராந்துக்கும் ஒட்டகத்திற்குமான உறவு என்ற எளிய கதை முடிச்சு, ரசிகர்களின் மனதை எளிமையாக கட்டிப்போடவைத்தது. ‘ஓவர் மெலோடிராமாவை’ கொஞ்சம் குறைத்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதே படம் பார்த்த ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக அமைந்தது.

இப்படத்தின் முக்கியத்துவம் கருதி முன்னணி நிறுவனமான உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் படத்தை வெளியிட்டனர். ஆனால், படம் வெளியான முதல் நாளே வசூல் மிக மோசமாக இருந்ததால் வேறு படத்தை திரையிட வேண்டிய சூழல் திரையரங்குகளுக்கு ஏற்பட்டது. படத்தை வெளியிட்டு இருப்பது ரெட் ஜெயன்ட் என்பதால் பக்ரீத் படம் இன்னும் சில நாட்கள் தியேட்டரில் இருக்கும் என கூறப்பட்டாலும், பக்ரீத் மெல்லத் தான் ‘பிக்-அப்’ ஆகும் என்கிறார்கள் திரையுலகினர்.

மெய்

டிவிஎஸ் சுந்தரம் ஐயங்கார் நிறுவனம் தயாரித்திருக்கும் முதல் படம் மெய். படத்தின் ஹீரோ நிக்கி சுந்தரம், சுந்தரம் ஐயங்கார் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மெடிக்கல் கிரைம் ஜானரில் ஏழைகளை குறிவைத்து உடல் உறுப்பு திருட்டில் ஈடுபடும் மாஃபியா கும்பல் பற்றிய படமே மெய். கிரைம் திரில்லர் ஜானரில் விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும், மெய் படத்திற்கான விளம்பரம் ரசிகர்களிடம் போதுமானளவு சென்றடையவில்லை என்பதால் தியேட்டர்களில் படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இந்த வாரம் வந்த மூன்று படங்களில் முதல் நாள் மொத்த வசூல் 50 லட்சத்தை கடந்த படம் கென்னடி கிளப் மட்டுமே. மற்ற இரு படங்களும் வசூலில் மந்தமான நிலையை சந்தித்து வருகிறது.

மொத்தத்தில் இந்த வாரம் வெளியான மூன்று படங்களில் கென்னடி கிளப் முதல் நான்கு நாட்களில் சுமார் இரண்டு கோடியே 65 லட்ச ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. நல்ல படங்களாக கருத்தப்படும் பக்ரீத், மெய் ஆகிய படங்கள் வியாபார ரீதியில் தடுமாறியே வருகின்றன.


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


இங்கு அரசியல் பேசாதீர்: கூகுள் அனுப்பிய மெமோ!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon