மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

காங்கிரஸோடு இனி கூட்டணி கிடையாது: குமாரசாமி

காங்கிரஸோடு இனி கூட்டணி கிடையாது: குமாரசாமி

காங்கிரஸ் தன்னை ஒரு கணக்குப்பிள்ளை போலவே நடத்தியதாகவும் கர்நாடகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்றும் முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியின் பத்துக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை அடுத்தடுத்த ராஜினாமா செய்தனர். மும்பையில் முகாமிட்டு அவர்கள் குமாரசாமி அரசை கவிழ்த்தனர்.

இதன் விளைவாக, குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, கடந்த ஜூலை 26ஆம் தேதி கர்நாடகத்தின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த எடியூரப்பா பதவி ஏற்றார்.

இதற்கு முன் சுயேச்சை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 17 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏ தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றால் அதில் காங்கிரஸோடு கூட்டணி இருக்குமா என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி மனம் திறந்துள்ளார். தி இந்து ஆங்கில இதழுக்கு அவர் அளித்த பேட்டியில்...

“ஆட்சியில் இருந்த 14 மாதங்களில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் என்னை முதல்வராகவே பார்க்கவில்லை. அவர்கள் என்னை ஒரு கணக்குப் பிள்ளை போல நடத்தினர். எத்தனை நாளைக்குத்தான் அடிமையாகவே இருப்பது? முன்னாள் முதல்வரான சித்தராமையா 29 மூத்த அதிகாரிகளை அவரது விருப்பப்படியே நியமித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அவர்களது விருப்பப்படியே அவரவர் துறைகளுக்கு அதிகாரிகளை பெற்றுக்கொண்டனர். ஆனபோதும் காங்கிரஸ் எங்களுக்கு இடையூறு கொடுத்துக் கொண்டே இருந்தது.

சித்தராமையா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை பாரதிய ஜனதாவை விட மிகப் பெரிய எதிரியாகவே பார்த்தார், பார்க்கிறார். இதுகுறித்து அவரோடு நான் பொது விவாதத்திற்கும் தயாராகவே இருக்கிறேன். என்னை முதல்வர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு சித்தராமையா மேற்கொண்ட முயற்சிகளை நான் அறிந்தே இருந்தேன். அவர் எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்தார்.

என் தந்தை தேவகவுடா விடம் நான் பலமுறை சென்று இந்த கூட்டணி ஆட்சியை நடத்துவது கடினமாக இருக்கிறது என்று கூறினேன். தவிர கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரசை தோழமையாக எதிர்த்து நிற்போம் என்றும் கூட அவரிடம் தெரிவித்தேன். ஆனால் பாஜகவுக்கு எதிரான பெரிய கூட்டணி அமைய வேண்டும் என்பதால் கர்நாடகத்தில் நாங்கள் இந்த கூட்டணியோடு தேர்தலை சந்தித்தோம்.

இப்போதைய கர்நாடக அரசியல் நிலவரப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏ தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் வரலாம் என்பதை என்பதை விட ஒட்டுமொத்த கர்நாடகத்திற்கும் பொதுத்தேர்தல் வரக்கூடும் என்பதே நிலைமை. அப்படி வந்தால் நாங்கள் காங்கிரசோடு சேர்ந்து தேர்தலை சந்திக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார் குமாரசாமி.


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


இங்கு அரசியல் பேசாதீர்: கூகுள் அனுப்பிய மெமோ!


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon