மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம்: மூன்று பேர் கைது!

காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம்: மூன்று பேர் கைது!

காவலர் எழுத்துத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த புகாரில் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,226 இரண்டாம்நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் 228 மையங்களில் நேற்று (ஆகஸ்ட் 25) நடந்தது. 40,000 பெண்கள், 20 திருநங்கைகள் உட்பட 3.22 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அரியலூர் மாவட்டம் தத்தனூரிலுள்ள மீனாட்சி ராமசாமி கல்லூரியில் மூன்று மையங்களில் 3,690 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான காவல் துறையினர் தீவிர சோதனைக்குப் பின்னரே தேர்வர்களைத் தேர்வெழுதும் மையத்துக்குள் அனுமதித்தனர். தேர்வு எழுதி முடியும் தருவாயில் ஹால் டிக்கெட்டுகளைச் சோதனை செய்தபோது தேவபிரகாஷ் என்பவரின் ஹால் டிக்கெட் மட்டும் சந்தேகப்படும்படியாக இருந்துள்ளது. அந்த நபரை அழைத்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.

இதையடுத்து அவர் தேர்வு எழுதுவதற்காகப் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் பரிசோதித்ததில் ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில், தான் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகுபதி என்றும், கன்னியாகுமரியைச் சேர்ந்த தேவபிரகாஷுக்காக தேர்வெழுத வந்திருப்பதாகவும் ஒப்புக்கொண்டார்.

தேர்வு எழுதுவதற்காக ரகுபதிக்கு 1.50 லட்சம் பேரம் பேசி 1 லட்சம் ரூபாய் முன்பணமாக தேவபிரகாஷ் கொடுத்திருந்ததாகவும், மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தைக் கொடுக்க அருகிலுள்ள கடையில் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தேர்வெழுதிய ரகுபதி, எழுதக் கூறிய தேவபிரகாஷ் அவரது சகோதரர் சந்தோஷ் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், மூவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றங்களைக் கண்டறிந்து அதைத் தடுப்பதற்காகத்தான் காவல் துறை இருக்கிறது. ஆனால், அந்தக் காவல் துறை தேர்விலேயே முறைகேடு செய்ய முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


லண்டனில் அமைப்பு திரட்டும் திருமாவளவன்


வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon