மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

இங்கு அரசியல் பேசாதீர்: கூகுள் அனுப்பிய மெமோ!

இங்கு அரசியல் பேசாதீர்: கூகுள் அனுப்பிய மெமோ!

பொதுவாக டீக்கடைகள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் ஆகிய மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் ‘இங்கு அரசியல் பேசாதீர்’ என்ற அறிவிப்பு பலகை மாட்டப்பட்டிருக்கும். ஆனால், சமீபத்தில் உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் தனது பணியாளர்களுக்கு இதே கட்டுப்பாட்டை விதித்து அதிர்ச்சியளித்துள்ளது.

உலகின் முன்னணி நிறுவனமாக அறியப்படும் கூகுள், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தில் பணிபுரிவதென்பது ஐ.டி. நிறுவனர்களின் உச்சபட்ச கனவாகும். வேலைக்கேற்ற வேலையும், சலுகைக்கு ஏற்ற சலுகையும் அளித்து பணியாளர்களை சந்தோஷப்படுத்துவதில் கூகுள் எப்போதும் நெ.1.

ஆனால், சமீப வருடங்களில் கூகுள் பல்வேறு சர்சைகளிலும் சிக்கல்களிலும் சிக்கித் தவிக்கிறது. குறிப்பாக ஒரு கார்பரேட் நிறுவனம் எங்கெல்லாம் கசப்புகளை சந்திக்க கூடாதோ அங்கெல்லாம் சந்தித்து வருகிறது கூகுள். அதில் முதன்மையானது, அமெரிக்க அதிபர் டிரம்பை பகைத்தது.

கூகுள் நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட கெவின் கெர்னெகீ என்ற என்ஜினீயர் சமீபத்தில், “2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பியதாலேயே நான் பணி நீக்கம் செய்யப்பட்டேன். அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலிலும் டிரம்பின் பிரசாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டமிட்டு இருக்கிறது” என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறினார்.

கெவின் கெர்னெகீயின் இந்த பேட்டி ஜனாதிபதி டிரம்பின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் அந்த பேட்டியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அனைத்தும் மிகவும் சட்டவிரோதமானது. நாங்கள் கூகுளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் தரவுகளை வழங்குதலில் டிரம்புக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக முன்னாள் ஊழியர் கூறியது, பாதுகாப்புத்துறை திட்டங்களை செயல்படுத்துதலில் ஊழியர்களின் வெளிப்படையான போராட்டம், உயர் மட்ட அதிகாரிகள் மீதான பாலியல் புகார்களை கையாண்ட விதத்தில் ஊழியர்களின் அதிருப்தி, சீனாவிற்காக தயாரிக்கப்படும் தணிக்கை செய்யப்பட்ட தேடல்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் பணியாளர்களுக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகள் என ஊழியர்களை மையப்படுத்தி பல சர்ச்சைகளில் சிக்கியது கூகுள் நிறுவனம்.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று ஒரு லட்சம் பணியாளர்களுக்கு மெமோ ஒன்றை அனுப்பியது கூகுள்:

“தகவல்கள் மற்றும் யோசனைகளை சக பணியாளர்களுடன் பகிர்ந்துகொள்வது ஒற்றுமையை வளர்க்கும், புதிய செய்தி குறித்து விவாதிப்பதோ, அரசியல் குறித்து பேசுவதோ அந்த நாளை மோசமாக்குமே அன்றி ஒற்றுமையை வளர்க்காது. நமது முக்கியமான கடமை நாம் ஒவ்வொருவரும் எதற்காக இந்நிறுவனத்தில் எடுக்கப்பட்டிருக்கிறோமோ அதை செய்வதற்கே; வேலை சம்பந்தமில்லாதவற்றைப் பற்றி விவாதிப்பதற்கல்ல” என்று அந்த மெமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“யாரையும் கேலி செய்யாதீர்கள், யாரைப் பற்றியும் பேசி தனிமனித தாக்குதல்களில் ஈடுபடாதீர்கள்; உங்கள் சக பணியாளர்களிடம் மரியாதையாக பேசுங்கள் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் கூகுளில் பணியாற்றுவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. நமது தயாரிப்புகள், சேவைகளின் தனித்தன்மை மற்றும் நம்பிக்கை விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகள் எல்லாம் அதிகாரப்பூர்வமான கொள்கைகள்; அவைகள் எல்லாம் கூகிள் அலுவலகத்தில் பணியாற்றும் சமயங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.”

சமீபத்தில் கூகுள் சந்தித்து வரும் அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கருத்துகள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


நிதி நெருக்கடியில் லைகா!


இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


லண்டனில் அமைப்பு திரட்டும் திருமாவளவன்


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon