மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!

இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!

வேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 25) மாலை 5 மணியளவில் இரு சமூகத்தினர் இடையே முன்விரோதம் காரணமாகத் திடீரென மோதல் வெடித்துள்ளது. பாண்டியன் என்பவர் தனது காரில் வேதாரண்யம் காவல் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தார். அப்போது காரை வழிமறித்த 10 பேர் கொண்ட கும்பல் காருக்குத் தீ வைத்துள்ளனர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறை எரிந்துகொண்டிருந்த காரின் தீயை அணைக்க முயற்சி செய்தனர். அவர்களையும் அந்தக் குழு தடுத்து நிறுத்தியது. இதனால் காரில் மளமளவென தீப்பற்றி முற்றிலும் எரிந்து நாசமானது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக எதிர் தரப்பைச் சேர்ந்த ஒரு கும்பல் அப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை அரிவாளைக்கொண்டு தலையை வெட்டி வீசினர். கீழே நின்று கொண்டிருந்த சிலர் சிதைத்தனர். ஒருகட்டத்தில் அம்பேத்கர் சிலை முழுவதையும் சிதைத்தனர். சிலை உடைக்கப்படும் காட்சியை ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து பரவவிட, அது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தச் சம்பவத்தின்போது காவல் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

வேளாங்கண்ணி கோயில் திருவிழாவின் பாதுகாப்புப் பணிக்காக காவல் துறையினர் அங்கு சென்றுவிட்டதால், வேதாரண்யம் காவல் நிலையத்தில் இரண்டு காவலர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இதனால் அவர்களால் வன்முறையாளர்களைத் தடுக்க முடியவில்லை. இதையடுத்து மற்ற பகுதிகளிலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு வேதாரண்யத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

மேலும் கலவரம் ஏற்படாமல் தடுக்கவும், அம்பேத்கர் சிலைக்கு பாதுகாப்பளிக்கவும் காவல் துறை தலைமையிடமிருந்து உத்தரவு வந்திருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து அம்பேத்கர் சிலைகளுக்கும் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அம்பேத்கர் சிலை தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அண்ணல் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. அம்பேத்கர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவர். அவரது உருவச்சிலை சேதப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் யாரையும் சிறுமைபடுத்திவிட முடியாது. இப்போக்கு தடுக்கப்பட வேண்டும். அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


லண்டனில் அமைப்பு திரட்டும் திருமாவளவன்


வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon