மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் - அவல் மோதகம்

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் - அவல் மோதகம்

பிள்ளையார்பட்டியில் கொடியேற்றத்துடன் தொடங்கிவிட்டது விநாயகர் திருவிழா. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் திங்கட்கிழமை (2.9.2019) அன்று கொண்டாடப்பட இருக்கிறது. பிள்ளையார் என்றதும் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான். அதனால்தான் அவருக்கு, 'குழந்தை சாமி' என்ற செல்லப்பெயரும் உண்டு. முதன்மைக் கடவுளாகப் போற்றப்படுகிற விநாயகப் பெருமானுக்காகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியில் முதலிடம் பெறுவது மோதகமும் கொழுக்கட்டையும். இந்த அவல் மோதகம், விநாயகருக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பிடித்தமானது.

என்ன தேவை?

கெட்டி அவல் - ஒரு கப்

பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

வெல்லத்தூள், தேங்காய்த் துருவல் - தலா அரை கப்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

எப்படிச் செய்வது?

அவலைச் சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வெல்லத்தூளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கெட்டியாகும்போது இறக்கி வடிகட்டவும். அவலைத் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்தெடுக்கவும். பாசிப்பருப்பையும் தண்ணீர் இல்லாமல் வடியவிடவும். பாத்திரத்தில் அவலுடன் பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெல்லக் கரைசலைச் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு பிசையவும். பிறகு கையில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு, மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு

விரும்பினால் சிறிதளவு சுக்குத்தூள் சேர்க்கலாம். சரியாக உருட்ட வரவில்லை என்றால் மேலும் சிறிதளவு ஊறவைக்காத அவலைச் சேர்த்துப் பிசையலாம்.

நேற்றைய ரெசிப்பி: கம்பு ராகி வெந்தயக்கீரை சப்பாத்தி


மேலும் படிக்க


ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


லண்டனில் அமைப்பு திரட்டும் திருமாவளவன்


வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி


திங்கள், 26 ஆக 2019

chevronLeft iconமுந்தையது