மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

ஹாங்காங் போராட்டம்: வன்முறையில் இறங்கிய போலீசார்!

ஹாங்காங் போராட்டம்: வன்முறையில் இறங்கிய போலீசார்!

12ஆவது வாரமாக நேற்று (ஆகஸ்ட் 24) தொடங்கிய போராட்டத்தில் போலீசார் போராட்டக்காரர்களை அடித்து விரட்டத் தொடங்கியுள்ளனர்.

ஹாங்காங்கில் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து 10 வாரங்களாக ஜனநாயக ஆதரவுக்குழுவினர் போராட்டம் நடத்திவருகின்றனர். தொடர்ந்து 12ஆவது வாரமாக, பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டம் நேற்று (ஆகஸ்ட் 24) போலீசாரின் வன்முறை அடக்குமுறையால் திசை மாறத் தொடங்கியது.

அந்நகரின் குவாங் டோங் பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் தங்கள் முகங்களை முகமூடிகளால் மறைத்துக்கொண்டு அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரால் அனுமதிக்கப்பட்ட அமைதியான அணிவகுப்பு, பின்மதிய நேரத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஒரு பதற்றமான மோதலாக மாறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு காவல் நிலையத்துக்கு வெளியே மூங்கில் தண்டுகள் மற்றும் பிளாஸ்டிக் போக்குவரத்து தடைகளுடன் தடுப்புகளைக் கட்டினர்.

உள்ளூர் நேரப்படி மாலை 4.40 மணியளவில், ஆயிரக்கணக்கான மக்கள் மீது தடியடி நடத்திய கலகப் பிரிவு போலீசார், அவர்கள் தப்பியோடியபோது அடிக்கத் தொடங்கினர். போராட்டக்காரர்கள் மூங்கில் தண்டுகள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களை போலீசார் மீது வீசினர்.

ஹாங்காங் போலீசார் மக்கள்மீது கண்ணீர் புகை குண்டு, ரப்பர் தோட்டாக்கள், பெப்பர் ஸ்பிரேவை பயன்படுத்தத் தொடங்கினர். மேலும் மக்களைக் கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கினர். "போராட்டக்காரர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாது. காவல் துறையினர் தங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்” என்று அக்காட்சியை நேரில் பார்த்த ஒரு நபர் கார்டியன் பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார்.

அங்கிருந்த கலைந்துசென்ற மக்கள் பல இடங்களில் மீண்டும் கூடி போலீசாரின் வன்முறைச் செயலுக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த 10ஆவது வாரப் போராட்டத்தில், இதே போல போலீசால் வீசப்பட்ட கண்ணீர் புகைக்குண்டைக் கண்டித்தும், போராட்டக்காரர்கள் மீது ஏவப்பட்ட வன்முறைக்குப் பதிலளிக்கும் விதமாக ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்டு, உள்ளிருப்பு போராட்டத்தின் மூலம் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தனர் போராட்டக்காரர்கள்.

நேற்று நடந்த போராட்டத்தால் ஹாங்காங் நகரமே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த போராட்டத்தை ஒடுக்க சீன ராணுவம் தற்போதுவரை ஈடுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 25 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon