மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

நாங்குநேரி, விக்கிரவாண்டிக்கு இடைத் தேர்தல் எப்போது?

நாங்குநேரி, விக்கிரவாண்டிக்கு இடைத் தேர்தல் எப்போது?

நான்கு மாநிலங்களில் காலியாக இருந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் அறிவித்துள்ளது.

கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கே.எம்.மணி கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். சத்தீஸ்கர் மாநிலம் தண்டவோடா எம்.எல்.ஏ.வாக இருந்த பீமா மண்டவி, மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அதேபோல திரிபுராவின் பாகர்கட் எம்.எல்.ஏவாக இருந்த திலீப் சர்க்காரும் உடல்நலக் குறைவால் காலமானார். உத்தர பிரதேசத்தின் ஹமீர்பூர் எம்.எல்.ஏ.வாக இருந்த அசோக் சிங் சண்டல் கொலை வழக்கில் சிக்கி தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்த 4 சட்டமன்ற தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாலா, தண்டவோடா, பாகர்கட், ஹமீர்பூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் 23ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று (ஆகஸ்ட் 25) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அங்கு, வேட்புமனு தாக்கல் வரும் 28ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 4ஆம் தேதி முடிகிறது. வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவைத் திரும்பப் பெற 7ஆம் தேதி கடைசி நாளாகும். 27 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் நடைபெறும் என்று கேள்வி எழுந்துள்ளது. நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஹெச்.வசந்தகுமார் எம்.பி.யாகிவிட்டதால் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை கடந்த மே இறுதியில் ராஜினாமா செய்தார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் ராதாமணி உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் 14ஆம் தேதி காலமானார். இதனையடுத்து இரு தொகுதிகளும் காலியாக இருப்பதாக சட்டப் பேரவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மற்ற மாநிலங்களுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த 2 மாதங்களாக காலியாக இருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும் அதனுடன் சேர்த்தே தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருக்கலாமே என்று கேள்வி எழுப்புகிறார்கள் அத்தொகுதி பொதுமக்கள். ஆர்.கே.நகர், திருவாரூர் போல அல்லாமல் இந்த இரு தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது.


மேலும் படிக்க


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


ஞாயிறு, 25 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon