மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

வெப் சீரிஸில் சமந்தா

வெப் சீரிஸில் சமந்தா

முன்னணி நடிகையான சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகின்றார்.

சமந்தா நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான தெலுங்குப் படமான ஓ பேபி திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றது. கொரியன் ரீமேக்கான இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து சமந்தா, ‘96’ தெலுங்கு ரீமேக்கில் கவனம் செலுத்தி வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அதன் வெளியீட்டிற்காக சமந்தா காத்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் சமந்தா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் வேம்புவாக நடித்த சமந்தா, அடுத்து நடிக்கும் நேரடித் தமிழ் படம் இதுவாகும்.

இந்நிலையில், சமந்தா வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் சென்னையில் ஒரே கட்டமாக நடைபெற்று வருகின்றது.

சமந்தா எந்த அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற எந்த பிளாட்ஃபார்பில் நடிக்கின்றார், வெப் சீரிஸ் இயக்குநர் யார் உள்ளிட்ட விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். விரைவில் இது குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் ரசிகர்களிடையே வெப்சீரிஸ்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் போதும் முன்னணி நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் இதன் தயாரிப்பில் தொடக்கத்தில் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தற்போது இந்த நிலை மாறிவருகின்றது. வெப்சீரிஸ்களை நோக்கி பிரபல நாயகிகள் வரத்தொடங்கியுள்ளனர்.

காஜல் அகர்வால், வைபவ் இணைந்து நடிக்கும் வெப்சீரிஸை வெங்கட் பிரபு இயக்குகிறார். குரு சோமசுந்தரம் நடிக்கும் டாப்லெஸ் வெப்சீரிஸை அறிமுக இயக்குநர் தினேஷ் மோகன் இயக்க சினிஷ் தயாரிக்கிறார். இயக்குநர் விஷ்ணுவர்தன் தயாரிக்கும் வெப் சீரிஸ் ‘ஃபிங்கர்டிப்’. அறிமுக இயக்குநர் ஷிவகர் இயக்க, காயத்ரி, சுனைனா, அக்‌ஷரா ஹாசன், அஸ்வின் கக்குமானு, மதுசுதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

தற்போது இந்த வெப் சீரிஸ் வரிசையில் சமந்தாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 25 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon