மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

சொராபுதீன் கொலை வழக்கும்; ஐ.என்.எக்ஸ் நிதி மோசடி வழக்கும்!

சொராபுதீன் கொலை வழக்கும்; ஐ.என்.எக்ஸ் நிதி மோசடி வழக்கும்!

ஆரா

சிதம்பரம் உள் துறை அமைச்சராக இருந்தபோது அமித் ஷாவைக் கைது செய்தார். இப்போது அமித் ஷா உள் துறை அமைச்சராக இருக்கும்போது சிதம்பரத்தை உள்ளே வைத்துவிட்டார். கணக்கு தீர்க்கப்பட்டது என்று டீக்கடை முதல் ட்விட்டர் வரை பலரும் தங்கள் அரசியல் அரிப்பை பேசித் தீர்த்துக்கொள்கிறார்கள்.

சிதம்பரம் என்ற அரசியல் ஆளுமையையும், அமித் ஷா என்ற அரசியல் ஆளுமையையும் ஒப்பிட முடியாது. அமித் ஷாவுக்குச் சிக்கல் ஏற்படுத்திய சொராபுதீன் வழக்கும், சிதம்பரத்துக்குச் சிக்கல் ஏற்படுத்திய ஐ.என்.எக்ஸ் வழக்கையும் ஒப்பிட முடியாது. ஆனால் இப்போது நாம் அமித் ஷாவையும், சிதம்பரத்தையும் ஒப்பிட வேண்டியதைவிட இந்த இரு வழக்குகளைதான் ஒப்பிட வேண்டும்.

அமித் ஷா மீது கைவைத்த சிதம்பரத்தின் ‘கர்மா’ இப்போது அவரையே தாக்குகிறது என்று பாஜகவினர் பலரும் பதிவிடுகிறார்கள். வரலாறு திரும்புகிறது என்று பத்திரிகையாளர்கள் சிலரும் பதிவிடுகிறார்கள். அந்த கர்மா, அந்த வரலாறு என்ன என்பது பற்றி அறிந்துகொண்டால்தான் இரண்டையும் ஒப்பிடலாமா, ஆகாதா என்றும் முடிவுக்கு வர முடியும்.

2010 ஜூலை... குஜராத் உள் துறை இணை அமைச்சரும், குஜராத் முதல்வர் மோடிக்கு நெருக்கமானவரான அமித் ஷா 2005ஆம் ஆண்டு நடந்த சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டு அவர் உள்ளிட்டோர் மீது ஜூலை 23ஆம் தேதி குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டது. 30,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை அது.

சொராபுதீன் ஷேக் என்பவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தோடு தொடர்புடையவர் என்றும் அவரால் குஜராத் முதல்வர் மோடி உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சொல்லி 2005ஆம் ஆண்டு மோடி ஆட்சியில், குஜராத் - ராஜஸ்தான் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். சில நாட்களில் அவரது மனைவி கவுசர் பீ மர்மமான முறையில் மரணம் அடைந்து எரிக்கப்படுகிறார். சொராபுதீனின் சகாவான பிரஜாபதி என்பவரும் என்கவுன்ட்டரில் கொல்லப்படுகிறார். சொராபுதீன் கொல்லப்பட்டதற்கு சாட்சியாக இருந்ததாலே மீதி இருவரும் கொல்லப்பட்டனர் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள். இந்த மூன்று கொலை வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் ஒன்றாக இணைத்து இந்த வழக்கை சிபிஐ தன் கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன் பேரில்தான் அன்றைய குஜராத் உள் துறை இணை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள்மீது சிபிஐ வழக்கு தொடுத்தது. அமித் ஷா மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டது.

அது, 2010 ஜூலை 25 - ஞாயிற்றுக்கிழமை. குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில் அமித் ஷாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. அதற்கு ஒரு நாள் முன்னதாக 24ஆம் தேதி தான் தன்னுடைய உள்துறை இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து மோடிக்கு கடிதம் அனுப்புகிறார் அமித் ஷா. அந்தக் கடிதம் அனுப்புவதற்கு முன் ஓரிரு நாட்களாக அமித் ஷா இருக்கும் இடம் எது என்று தெரியவில்லை. தொடர்ந்து அமித் ஷாவுக்கு சிபிஐ அனுப்பிய சம்மன்களுக்குப் பதில் சொல்வதற்காக, காந்தி நகரில் பாஜக அலுவலகத்துக்குச் சென்று, பத்திரிகையாளர்களைச் சந்தித்துவிட்டு, அடுத்து நேரடியாக சிபிஐ அலுவலகத்துக்குச் செல்கிறார். அவரைக் கைது செய்த சிபிஐ போலீஸார், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிபிஐ நீதிபதி ஏ.ஒய்.தவே வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே அவருக்கு 13 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்படுகிறது. அமித் ஷாவுக்கு ஜாமீன் கிடைத்தபோதும் அவர் குஜராத்தில் இருந்தால் இவ்வழக்கின் ஆதாரங்கள் சிதைக்கப்படுமென்று சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் கூறுகிறது. அதன்படி நீதிமன்ற உத்தரவுப்படி 2010 முதல் 2012 வரையிலான இரு வருடங்கள் அமித் ஷா குஜராத் பக்கமே வரவில்லை.

சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கு என்பது அமித் ஷா உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்டிருந்தாலும், மோடியின் உயிருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளனர் என்பதை நிலைநாட்டி. அவரை தேசிய அரசியலுக்கு நகர்த்துவதற்காக இந்த என்கவுன்ட்டர் செய்யப்பட்டது என்று அப்போதே பல விமர்சனங்கள் எழுந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லோயா என்ன ஆனார் போன்ற சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி அமித் ஷா உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கிலிருந்து மும்பை சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

சொராபுதீன் வழக்கில் 30,000 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டது. யார் யாரோடு பேசினார்கள், யார் யாருக்கு என்ன உத்தரவு போட்டார்கள், முக்கிய போலீஸ் அதிகாரிகளின் பங்கு என்ன, அரசியல்வாதிகளின் பங்கு என்ன என்பது பற்றியெல்லாம் விரிவாக அலசியது சொராபுதீன் வழக்கு. தீர்ப்பு வழங்கப்பட்டாலும், இன்னும் பல மர்மங்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது சொராபுதீன் வழக்கு.

சொராபுதீன் வழக்கு என்பது மூன்று கொலைகளைப் பற்றிய வழக்கு. ஆனால், ஐ.என்.எக்ஸ் வழக்கு ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் முதலீடுகளைச் செய்வது தொடர்பாக சில சலுகைகளைப் பெற்றிருக்கிறது. அந்தச் சலுகைகளுக்காக அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வழியாகப் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. வெளிநாட்டு முதலீடுகளுக்கான விதிகளை தளர்த்தி ப.சிதம்பரத்தின் மகன் லாபம் பார்த்துள்ளார் என்பது பற்றிய வழக்கு.

இந்த இரு வழக்குகளும் அடிப்படையிலேயே வேறு வேறானவை சொராபுதீன் வழக்கு முழுக்க முழுக்க குற்றவியல் சார்ந்தது. ஆனால், ஐ,என்.எக்ஸ் வழக்கு பொருளாதாரக் குற்றம் சம்பந்தப்பட்டது. சொராபுதீன் வழக்கில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஐ.என்.எக்ஸ் வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்படவே இல்லை.

இந்திய அரசியல் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தும் வழக்கு என்று இரண்டையுமே சொல்ல முடியும். சொராபுதீன் வழக்குக்குப் பிறகுதான் அமித் ஷா இந்திய அளவில் தெரிய ஆரம்பித்தார். மோடியோடு அவரது நெருக்கம் இன்றளவும் இழையளவும் குறையாததற்குக் காரணம் இந்த வழக்கில் அமித் ஷாவுக்கு ஏற்பட்ட நெருக்கடியும் ஒன்று எனலாம். அதேபோல சிதம்பரம் காங்கிரஸ் கட்சியில் வகிக்கும் இப்போதைய உயரத்தை விட இன்னும் ஒரு படியேனும் மேலே செல்வதற்கு அவருக்கு ஐ.என்.எக்ஸ் வழக்கும் சிறைவாசமும் உதவக் கூடும்.

இப்படி என்னதான் ஒப்பிட்டாலும் இவ்விரு வழக்குகளுக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு. சொராபுதீன் வழக்கு என்பது மனித உயிர் சம்பந்தப்பட்டது. ஐ.என்.எக்ஸ் வழக்கு என்பது பணம் சம்பந்தப்பட்டது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


ஞாயிறு, 25 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon