மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

விமர்சனம்: பக்ரீத்!

விமர்சனம்: பக்ரீத்!

ஆசியாவிலேயே முதன்முறையாக ஒட்டகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு விக்ராந்த் கதாநாயகனாக நடித்துள்ள பக்ரீத் திரைப்படம் வெளியாகியுள்ளது.

எம் 10 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஜெகதீசன் சுபு எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ள படம் 'பக்ரீத்'. விக்ராந்த் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் விலங்குகளை மையப்படுத்தி எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், மிருகக்காட்சி சாலையிலும் காணக்கிடைக்காத ஒட்டகத்தை மையப்படுத்தி பக்ரீத் திரைப்படத்தை மாறுபட்ட விதத்தில் எடுத்துள்ளனர்.

முதலில் அப்படி ஒரு திரைப்படத்தை எடுக்க முடியுமா என்று யோசித்ததற்கும் அதை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டி பார்வையாளர்களை வியக்கவைத்ததற்கும் படக்குழுவினரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

பல வருட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் தனது நிலத்தை மீட்டெடுக்கிறார், ஏழை கிராமத்து விவசாயியான ரத்தினம் (விக்ராந்த்). மீட்டெடுத்த அந்த நிலத்தை விற்காமல் விவசாயம் செய்ய ஆசைப்படுகிறார். அதற்கான முன் ஏற்பாடுகள் செய்ய கொஞ்சம் பணம் வேண்டி முஸ்லிம் பெரியவர் ஒருவரிடம் கேட்கிறார். அங்கு பக்ரீத் பண்டிகைக்காக ஒட்டகங்கள் எடுத்து வரப்படுகிறது. அங்கு கொண்டுவரப்பட்ட குட்டி ஒட்டகத்தைப் பார்த்து அவர் கோபமாகக் கூச்சலிட அந்த பெரியவரிடம் கேட்டுப் பெற்று அதைத் தன் வீட்டுக்கு ரத்தினம் அழைத்து வருகிறார்.

வீட்டில் விவசாயத் தேவைக்காக வாங்கப்பட்ட மாடுகளுடன் இணைந்து செல்லப்பிராணியாக ஒட்டகம் வளர்கிறது. ஒருகட்டத்தில் அதனுடைய உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. மருத்துவர் ஒட்டகம் வளர வேண்டிய சூழலில்தான் அது வளர வேண்டும் என்று விளக்கம் அளிக்கிறார். ரத்தினமும், சாரா என்று பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்த தனது செல்லப் பிராணியை அழைத்துக்கொண்டு ராஜஸ்தான் கிளம்புகிறார். அவர்கள் ராஜஸ்தான் சென்றடைந்தார்களா, ஒட்டகத்துக்கு என்ன ஆனது என்னும் கேள்விகளுக்குப் பதிலாக பக்ரீத் படத்தின் திரைக்கதை விரிகிறது.

ஏழை விவசாயியின் தோற்றத்தில் விக்ராந்த் கச்சிதமாகப் பொருந்துகிறார். சினிமாவுக்கு வந்து பத்தாண்டுகள் ஆகியும் அவரது திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் இப்போதுதான் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ரத்தினத்தின் மனைவியாக வசுந்தரா யதார்த்தமாக நடித்து கைதட்டல் வாங்குகிறார்.

இவர்களது மகளாக மழலைப் பேச்சுடன் இதயங்களை அள்ளிச்செல்கிறார் பேபி ஸ்ருதிகா. தீரன் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய ரோகித் பத்தாக் இந்தப் படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் மிகவும் ரசிக்க வைக்கிறார். அவர் ரத்தினத்தை வழியனுப்பி விடைபெற்று ஊருக்குத் திரும்பும் காட்சியில் இதயத்தை லகுவாக்கி ரசிக்க வைக்கிறார்.

பாராட்டவைக்கும் பல அம்சங்கள் படத்திலிருந்தாலும், இப்படித்தான் முடியப் போகிறது என்று யூகிக்க முடிந்த க்ளைமாக்ஸும், இரண்டாம் பாதியில் பயணக் காட்சிகளின் மிதமிஞ்சிய நீளமும் பொறுமையைச் சற்று இழக்க வைக்கிறது. ரத்தினத்துக்கும் சாராவுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை இன்னும் ஆழமாகக் காட்டி இருக்கலாம். அப்படி இருந்திருந்தால் ஈரமாய்த் தேங்கி நின்ற பார்வையாளர்களின் கண்களிலிருந்து கண்ணீர் மழையே பொழிந்திருக்கும்.

இமானின் இசையில் படத்தின் இசையைப் பாராட்ட 'ஆலங்குருவிகளா' என்ற ஒரு பாடலே போதுமானது. பசுமை நிறைந்த கிராமத்தின் குளிர்மை நிறைந்த அழகையும், ராஜஸ்தான் பாலைவனத்தின் வெம்மையையும் ஜெகதீசன் சுபுவின் கேமரா ரசித்துப்படம் பிடித்து விருந்தளிக்கிறது. இயக்குநரே ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியதன் பலன் படம் எங்கும் மிளிர்கிறது.

சமூக வலைதளங்களில் நாம் பார்த்து வியந்த செல்லப்பிராணிகளின் பாசப்பிணைப்பைத் தொகுத்து எண்ட் கார்டில் திரையிட்டு கவனம் ஈர்த்துள்ளனர். மனித உணர்வுகளைத் திறம்பட உணர்த்தியதற்கும் பாசத்தின் வலிமையை அழகுற பேசிச் சென்றதற்கும் பக்ரீத் குழுவினருக்குப் பாராட்டுகள்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


ஞாயிறு, 25 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon