மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!

டிஜிட்டல் திண்ணை:  மந்திரி மாஃபாவை  நீக்க எடப்பாடிக்கு  நெருக்கடி!

அலுவலக வைஃபை ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் தலைமைச் செயலகம் காட்டியது.

“தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் கொடுக்கும் பேட்டிகளும், சொல்லும் கருத்துகளும் ஊடகங்களுக்கும், சமூக தளங்களுக்கும் சுவையான தீனியாகிக் கொண்டிருக்கின்றன. அதேநேரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது இதன் விளைவுகள் எவ்வாறு எதிரொலிக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணமாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விவகாரத்தைச் சொல்கிறார்கள் தலைமைச் செயலகத்தில்.

கடந்த ஆகஸ்டு 17 ஆம் தேதி இரவு தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். எகனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான, ‘இந்தியாவில் வரும் காலாண்டில் 5 லட்சம் பேர் ஆட்டோ மொபைல் துறையில் வேலை இழப்பார்கள்’ என்ற செய்தியை கிரன் மன்ரல் என்பவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

அதை மேற்கோள் காட்டி பதிவிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ’இது எச்சரிக்கை சமிக்ஞை. குறிப்பாக இந்தியாவிலேயே ஆட்டோ மொபைல் துறையில் அதிக கவனம் செலுத்திடும் தமிழகத்துக்கும் இது எச்சரிக்கை. மத்திய அரசு ஆட்டோமொபைல் துறையின் வேலைகளைக் காப்பாற்றவும், தொழில்துறையை மேம்படுத்தவும் வேகமாக செயல்பட்டு நிதி ஒதுக்கிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவுக்குப் பின்னால் பலரும் பலவித கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்கள்.

அமைச்சர் மாஃபாவின் இந்தக் கருத்து ஊடகங்களிலும் எதிரொலித்தது. ’பாஜகவுக்கு எதிராக அதிமுகவும் விமர்சிக்கிறதா?’ என்று முன்னணித் தொலைக்காட்சிகள் விவாத அரங்குகளை மாஃபா பேச்சின் அடிப்படையில் நடத்தின.

இதுபோதாதென்று ஆகஸ்டு 19 ஆம் தேதி மதுரை சென்ற மாஃபா அங்கே செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த ட்விட் பற்றி கேட்க, ’இதேபோல தொழில் துறையில் ஏற்கனவே நடந்தபோது முன்னால இருந்த அரசாங்கம், ஜவுளித் துறையை தொழில் நுட்ப மாற்றங்களில் இருந்து பாதுகாக்க ஒரு நிதியத்தை உருவாக்கினாங்க. இதேபோல இப்ப ஆட்டோ மொபைல் துறைக்கும் ஒரு ஃபண்ட் உருவாக்கணும். இல்லேன்னா பெரிய அளவுல வேலைவாய்ப்பு இழப்பு மிக குறுகிய காலத்துல வர்றதுக்கு வாய்ப்பிருக்கு’ என்று பேட்டி கொடுத்தார் மாஃபா பாண்டியராஜன்.

அப்போது எடப்பாடி சேலத்தில் இருந்தார். சேலம் மாவட்டம் முழுதும் சுற்றுப் பயணம், மனு வாங்குதல் என இரண்டு -மூன்று நாட்கள் சேலத்தில் இருந்துவிட்டு சென்னைக்கு வந்தார். இன்று (ஆகஸ்டு 24) காலை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எடப்பாடியே போன் போட்டிருக்கிறார். மாஃபா ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் இருந்து வந்தவர். அந்த அணியில் ஓபிஎஸ்சை தவிர அமைச்சர் பதவி வகிக்கும் ஒரே நபர் மாஃபாதான்.

அவருக்கு போன் போட்ட முதல்வர் எடப்பாடி, ‘நீங்க எந்தத் துறைக்கு அமைச்சர்? அதை விட்டுட்டு ஆட்டோமொபைல், ஜவுளித்துறை, தொழில் துறை, பொருளாதாரச் சரிவு, வேலை இழப்புனு எதுக்கு பேசுறீங்க?’ என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டிருக்கிறார்.

இதை எதிர்பார்க்காத மாஃபா பாண்டியராஜன், ‘நான் தொழில்துறை அமைச்சரா இல்லைதான். ஆனா நான் தொழிற்துறையை சேர்ந்தவன் தாங்க. மேன்பவர் கம்பெனி வச்சிருந்தேன். அதுமூலமா பல கம்பெனி சிஇஒ க்கள் எனக்குத் தெரிஞ்சவங்க இருக்காங்க. அவங்க என்கிட்ட இதைப் பத்தி வருத்தப்பட்டு பேசினாங்க. அதனாலதான் அந்த ட்விட்டர் போட்டேன். மதுரைக்கு போனப்ப பிரஸ்ல கேட்டதால நான் பதில் சொன்னேன்’ என்று எடப்பாடிக்கு பதில் கூறியிருக்கிறார் மாஃபா.

அதன் பின் மீண்டும் பேசிய எடப்பாடி,‘அதெல்லாம் சரிதான். ஆனா நீங்க கொடுத்த பேட்டி டெல்லி வரைக்கும் போகும்னு உங்களுக்குத் தெரியுமா? நீங்க பேசினத வச்சி மீடியா ஃபுல்லா பேசியிருக்காங்க. இதை வச்சிக்கிட்டு டெல்லியிலேர்ந்து என்கிட்ட, ‘இது தமிழ்நாடு அரசோட கருத்தா, அதிமுகவோட கருத்தா? மத்திய அரசை எதிர்க்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?’னு கேக்குறாங்க. இங்க அமைச்சர்கள் பேசற ஒவ்வொரு விஷயத்தையும் இந்தியில மொழிபெயர்த்து அங்க சொல்றதுக்கு ஆள் வச்சிருக்காங்க.

நான் ஒவ்வொரு நாளும் எத்தனை பிரச்சினைகளை சமாளிக்கிறேனு எனக்குதான் தெரியும். இனி உங்க கருத்துன்னா உங்க நண்பர்களோட வச்சிக்கங்க. இல்லியா, என்கிட்ட நேரா சொல்லுங்க. இப்ப பாருங்க, மத்திய அரசு பொருளாதாரத்துல வீக்கா இருக்குனு தமிழக அமைச்சர் சொன்னதுக்கு பதில் சொல்லுங்கனு என்கிட்ட கேக்குறாங்க. எதிர்க்கட்சிகளை சமாளிக்கறது கூட எனக்கு பெரிய விஷயமில்ல. ஆனா, அமைச்சர்கள் பேசுறதுக்கெல்லாம் பொறுப்பெடுத்து சமாளிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு’ என்று கடகடவென பொரிந்து தள்ளியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

முதலமைச்சரின் டென்ஷனுக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. மத்திய அரசை வெளிப்படையாக விமர்சித்த மாஃபா பாண்டியராஜனை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் டெல்லி கொடுக்கும் நெருக்கடி. இந்த வாரத்தில் வெளிநாடு போக தயாராகும் எடப்பாடி, தான் திரும்பி வருவதற்குள் ஓ.பன்னீர் செல்வம் ஏதாவது ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி செய்வாரோ என்று டென்ஷனாக இருக்கிறார். இந்த நிலையில், ஓ.பன்னீரின் ஆளான மாஃபா பாண்டியராஜனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கச் சொல்லி பிரஷர் வந்திருப்பதால் இன்னும் கூடுதல் டென்ஷன்.

’நான் அவர்கிட்ட பேசுறேன். இதுமாதிரி நடக்காம பாத்துக்குறேன்’ என்று டெல்லியில் இருந்து தன்னிடம் பேசியவர்களை இப்போதைக்கு சமாளித்திருக்கிறார் எடப்பாடி. ஆனால் தமிழக அமைச்சர்களின் கருத்துச் சுதந்திரம் இவ்வளவுதான்” என்ற தகவலுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.


மேலும் படிக்க


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


சனி, 24 ஆக 2019

அடுத்ததுchevronRight icon