மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

அருண் ஜேட்லி மறைவு : தலைவர்கள் இரங்கல்!

அருண் ஜேட்லி மறைவு : தலைவர்கள் இரங்கல்!

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, உட்பட அமைச்சர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1952ல் பிறந்த அருண் ஜேட்லி 1973ல் சட்டம் பயின்றார். கல்லூரி பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அங்கமான அகில இந்திய பாரதிய வித்யா பரிஷத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்தார். ஊழலுக்கு எதிராக போராடியதாக அவசரநிலை பிரகடனத்தின் போது 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வெளியே வந்த அவர் பாஜகவில் இணைந்தார். வழக்கறிஞர், சட்டத்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், ஒளிப்பரப்புத் துறை என பல துறைகளில் பணியாற்றியிருக்கிறார்.

பணமதிப்பழிப்பின் போது மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் அருண் ஜேட்லி. 2019 தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்ற பின் தன் உடல்நிலையை காரணம் காட்டி தான் மீண்டும் அமைச்சராக விரும்பவில்லை என தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12.07மணியளவில் உயிரிழந்தார், அவரது மறைவுக்கு பாஜகவினர், எதிர்க்கட்சிகள் என பலரும் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள ஜேட்லி இல்லத்துக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ”நாட்டுக்கும், கட்சிக்கும் பெரிய இழப்பு. தனிப்பட்ட முறையில் எனக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

அபுதாபிக்கு சுற்றுபயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, ”பாஜகவும், அருண் ஜேட்லியும் பிரிக்க முடியாத இணைப்பில் இருந்தனர். எமெர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை காக்க முன்னின்றவர். பாஜகவின் பிரபல முகமாக செயல்பட்டவர். அவரது மறைவால் சிறந்த நண்பனை இழந்துவிட்டேன். அருண் ஜேட்லியின் மறைவு வேதனையை அளிக்கிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அருண் ஜேட்லியின் குடும்பத்தினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். தற்போது வெளிநாட்டு சுற்று பயணத்தில் இருக்கும் அவர் அருண் ஜேட்லியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வரமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைதராபத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாற்காக சென்றிருந்த உள் துறை அமைச்சர் உடனடியாக டெல்லி திரும்பினார். அருண் ஜேட்லி வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

”அருண் ஜேட்லியின் பொது சேவை எப்போதும் நினைவுக்கூரப்படும்” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதுபோன்று ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அருண் ஜேட்லியின் உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மதியம் 2 மணி வரை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து நிகம்போத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது. அருண் ஜேட்லியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் நாளை டெல்லி செல்கின்றனர்.

“ஜனநாயக தீபத்தை போற்றிப் பாதுகாக்கும் “ஜெ.பி” என்று இன்றளவும் அழைக்கப்படும் 'மக்கள் தலைவர்' ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் போராட்டத்தில் முன்னணியில் நின்று கைதாகி - நெருக்கடி நிலைமை காலத்தில் ஏறக்குறைய 19 மாதங்கள் மிசா சிறைவாசத்தை அனுபவித்த அருண் ஜேட்லி அவர்கள் ஒரு ஜனநாயகவாதி மட்டுமல்ல - நாட்டிற்கு கிடைத்த மிகச்சிறந்த பாராளுமன்றவாதிகளில் ஒருவர்” என்று தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon