மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

திருச்சி வங்கியில் கொள்ளையடித்தவர் கைது!

திருச்சி வங்கியில் கொள்ளையடித்தவர் கைது!

திருச்சி சிட்டி யூனியன் வங்கியில் கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிட்டி யூனியன் வங்கி உள்ளது, இந்த வங்கி மூலம் அப்பகுதியில் இருக்கு ஏ.டி.எம் களுக்கு லோகி கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தின் சார்பில் பணம் நிரப்பப்படுகிறது. கடந்த 20ஆம் தேதி அம்பிகாபுரத்தை சேர்ந்த அருண்(32), முசிறியைச் சேர்ந்த சரவணன் (38) ஆகியோர் வங்கி கேஷியரிடம் இருந்து வழக்கம் போல் பணத்தை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது ஒரு பையில் ரூ.16 லட்சமும், மற்றொரு பையில் ரூ.18 லட்சம் என இரண்டு பைகளில் பணத்தை நிரப்பியுள்ளனர். இந்த சூழலில் யாரும் எதிர்பாராத விதமாகக் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த ரூ.16 லட்சம் நிரப்பப்பட்ட ஒரு பையை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து திருச்சி கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். ஆனால் கொள்ளை சம்பவம் நடைபெற்று நான்கு நாட்கள் ஆகியும் பணத்தை திருடிச் சென்றவரைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று பெரம்பலூர் மதன கோபாலபுரத்தைச் சேர்ந்த முருகையா என்பவரது ஆட்டோவில் ஒருவர் சவாரி செய்துள்ளார். தங்குவதற்கு வசதியாக நல்ல லாட்ஜ் வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் மது போதையிலிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு எந்த லாட்ஜிலும் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த ஆட்டோவிலேயே அவர் தூங்கியிருக்கிறார். அப்போது ஓட்டுநர் முருகையா அவரிடம் இருந்த பெட்டியைத் திறந்து பார்த்ததில் கட்டுகட்டாக பணம் இருந்தது தெரியவந்துள்ளது.

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையால் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் முருகையா இதுகுறித்து தெரிவித்துள்ளார். பின்னர் அந்த நபரிடம் விசாரித்ததில், அவரது பெயர் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த ஸ்டீபன் என்பதும், அந்த பணம் திருச்சி வங்கியில் கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஸ்டீபனிடம் இருந்த 15.7 லட்ச ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரூ.16 லட்சத்தில் மீத பணத்தை அவர் செலவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் அளித்த பேட்டியில், ”ஸ்டீபன் மது போதையில் இருந்ததால் அவருக்கு யாரும் ரூம் கொடுக்கவில்லை. ஐடி ப்ரூஃப் கேட்டதற்கும் அவர் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அவரது பையை செக் செய்ததில் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையில் புகார் தெரிவித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

திருச்சி: வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை!


மேலும் படிக்க


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon