மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

இந்திய அரசியலில் கிங் பின்!

இந்திய அரசியலில் கிங் பின்!

ஐஎன் எக்ஸ் மீடியா நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில், சலுகை காட்டி மோசடியில் ஈடுபட்டதாக அப்போதைய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அவரது கைது நடவடிக்கைக்கு முக்கியக் காரணம், சுமார் ஒரு வருடமாக ப.சி.யின் முன் ஜாமீன் மனுவை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த டெல்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு,

“இதுபோன்ற கடுமையான பொருளாதாரக் குற்ற வழக்குகளுக்கு முன் ஜாமீன் வழங்குதல் என்ற முறையையே சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற இதுதான் சரியான நேரம். இந்த வழக்கில் ப.சிதம்பரம் கிங்பின் (King pin) ஆக செயல்பட்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டு முன் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்தது. அதாவது இந்த சதிக் கும்பலின் தலைவர் என்று பொருள்பட சொல்லியிருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம்.

அனைத்து ஆங்கில ஊடகங்களிலும் சிதம்பரம் கிங் பின் என்ற வார்த்தை திரும்பத் திரும்பக் காட்டப்பட்டது.

2010 ஆம் ஆண்டு அமித் ஷா,சொராபுதீன் போலி என் கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அமித் ஷாவை சிபிஐ, ‘கிங் பின் என்று வர்ணித்திருந்தது. ஆனால் இப்போது சிதம்பரத்தை கிங்பின் என்று நீதிமன்றமே சொல்லியிருக்கிறது.

கிங் பின் என்றால் என்ன?

கிங்பின் என்றால் ஒரு கதாபாத்திரம். அதாவது வில்லன் கதாபாத்திரம். ஒரு கூட்டத்தின் தலைவர் என்பதுதான் கிங்பின் என்ற வார்த்தையின் அர்த்தம். ஆனால் அதை வில்லன்களுக்கெல்லாம் தலைவர் என்று மாற்றிவிட்டது கிங்பின் காமிக்ஸ் பாத்திரம். அமெரிக்காவில் 1950, 60 களில் காமிக் புத்தகங்கள் மிகப் பிரசித்தம்,. காமிக்ஸ் கதைகளுக்கான மிகப்பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. அந்த வகையில் மார்வெல் காமிக்ஸ் புத்தக நிறுவனத்தின் வெளியீடாக, அமேசிங் ஸ்பைடர் மேன் என்று 1967 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்த காமிக்ஸ் புத்தகத்தில் ஸ்டான் லீ, ஜான் ரோமிதா ஆகியோரால் உருவாக்கப்பட்ட கற்பனை வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் தான் கிங் பின்.

இந்த காமிக்ஸ் மட்டுமல்ல அடுத்தடுத்த காமிக்ஸ்களில் வில்லன் கூட்டத்தின் தலைவனாக கொடூர குற்றங்களைச் செய்பவராக கிங்பின் உருவகப்படுத்தப்பட்டார். .1980 களில் காமிக்ஸ்களில் கலக்கத் தொடங்கியது கிங்பின் பாத்திரம். மிக பருமனான உடல், முரட்டுக் கைகள், சிறிய தலை என்று இங்கிலாந்து நாட்டின் பழைய நடிகர் சிட்னி க்ரீன்ஷீட் தோற்றத்தைத் தழுவி முதலில் கிங் பின் பாத்திரம் காமிக்ஸில் உருவாக்கப்பட்டது. பிறகு இந்த உருவம்தான் வில்லன்களுக்கே உரித்தானதாக மாறிவிட்டது.

ஸ்பைடர்மேனுக்கு வில்லன், டேர்டேவில்ஸுக்கு வில்லன், பனிஷர் என்ற ஹீரோ பாத்திரத்துக்கு வில்லன் என்று முக்கியமான ஹீரோ பாத்திரங்கள் மாறினாலும் வில்லனுக்கு கிங் பின் என்ற கேரக்டரே என்று இப்போதும் காமிக்ஸ், வெப் சீரிஸ் உலகத்தில் பதிந்துவிட்டது. அவ்வளவு அழுத்தமான கொடூரமான வில்லனைதான் கிங்பின் என்று ஆங்கிலேயர்கள் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக தங்கள் மனதில் பொருத்தி வைத்திருக்கிறார்கள். இதுவே 80 களின் பிற்பாடு உலகம் முழுதும் வில்லன்களை கிங்பின் என்று சொல்லும் நிலையை உண்டாக்கிவிட்டது.

இந்த வார்த்தையைதான் ப,சிதம்பரத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறார் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர்.

-ஆரா


மேலும் படிக்க


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon