மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி

உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி

சிதம்பரத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இருக்கும் சில பத்திகள் சிபிஐ வழக்கறிஞர் வழங்கிய அறிக்கையிலிருந்து வெட்டி ஒட்டப்பட்ட வையாக உள்ளன என்று கபில்சிபல் கூறிய குற்றச்சாட்டு நேற்று (ஆகஸ்டு 23) உச்சநீதிமன்றத்தில் பரபரப்பைக் கிளப்பியது.

டெல்லி நீதிமன்றத்தில் சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிராகரிக்கப்பட்ட நிலையில் உடனடியாக மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றம் விரைந்தார் சிதம்பரம். ஆனால் நீதிமன்றம் அம்மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டது.

இதற்கிடையில் சிபிஐ சிதம்பரத்தை ஆகஸ்ட் 21-ஆம் தேதி இரவு கைது செய்தது. இந்த நிலையில் சிதம்பரம் முன்ஜாமீன் கோரிய வழக்கு நேற்று ஆகஸ்ட் 23ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி, ஏ எஸ் போபண்ணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா, “இந்த மனு இப்போது அர்த்தமற்றது. சிதம்பரம் கைது செய்யப்பட்டு விட்டார். இந்நிலையில் இந்த மனுவை விசாரித்து எந்த பயனுமில்லை” என்று குறிப்பிட்டார்.

அப்போது சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என்பது மனுதாரருக்கு அரசியலமைப்புச் சட்டம் 21 வழங்கியிருக்கிற உரிமை. இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், விரும்புகிறோம். ஆனால் சிபிஐ சிதம்பரத்தை இடையிலேயே கைது செய்துவிட்டதால் இந்த மனு பயனற்றது என்று சிபிஐ தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த மனு விசாரிக்கப்பட வேண்டியது மனுதாரரின் அடிப்படை உரிமை” என்று கூறினார்

நீதிபதிகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் திங்கள்கிழமை இதுபற்றி விசாரிக்கலாம் என்று தெரிவித்தனர். சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தனக்கு வழங்கப்பட்ட நான்கு நாள் சிபிஐ காவல் என்ற தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார் சிதம்பரம். அந்த மனுவையும் வரும் திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.

அடுத்து அமலாக்கத்துறை தன்னை ஐஎன்எக்ஸ் வழக்கில் கைது செய்வதற்கு தடை கோரி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார் சிதம்பரம். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சிதம்பரத்தின் வழக்கறிஞரான கபில்சிபல், “டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் வாதங்கள் எல்லாம் முடிவடைந்த பிறகு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து சில பகுதிகள் வெட்டி ஒட்டப்பட்டு இருக்கின்றன” என்று கூறினார்.

சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். தவறான தகவல்களை நீதிமன்றத்திற்கு தெரிவிக்காதீர்கள் என்று துஷார் மேத்தா கடுமையாகக் கூறினார்.

அப்போது சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் அளிக்க மறுத்த நீதிபதி சுனில் கவுர் தன் தீர்ப்பில் தீவிரமான பொருளாதார குற்ற வழக்குகளில் முன்ஜாமீன் என்ற சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று ஒரு யோசனை தெரிவித்துள்ளார். மேலும் அந்த தீர்ப்பில் அவர் ஏர்செல்-மேக்சிஸ் என்ற வழக்கு பற்றியும் குறிப்பிடுகிறார். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மனுதாரர் சிதம்பரம் ஏற்கனவே இடைக்கால பாதுகாப்பு பெற்றிருக்கிறார் என்பதை அந்த நீதிபதி அறிவார். ஆனபோதும் சம்பந்தமில்லாமல் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை அந்த தீர்ப்பில் அவர் குறிப்பிடுவது எதற்காக?. இதிலிருந்தே அந்த நீதிபதியின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது” என்று கூறினார்.

அப்போது சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா, “பணப்பரிமாற்றம் நடந்ததற்கான எலக்ட்ரானிக் வடிவிலான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன போலி நிறுவனங்களின் பெயரில் வெளிநாட்டு நபர்கள் பணப் பரிமாற்றம் நடத்தியதும் அவர்கள் சிதம்பரத்திற்கு நெருக்கமானவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது ”என்று கூறினார்.

மேலும் வாதாடிய துஷார் மேத்தா திங்கள்கிழமை வரை அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்யாது. அதனால் அவருக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற தேவையும் எழவில்லை என்று கூறினார். இதன்பின் நீதிபதிகள் சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்வதற்கு திங்கட்கிழமை வரை தடைவிதித்து மற்ற மனுக்களையும் திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

சிதம்பரம் தரப்பில் நீதிபதிகளைக் குறிவைத்து நீதிமன்றங்களிலேயே விமர்சனங்கள் முன் வைக்கப்படுவது குறிப்பிடத் தக்கது. கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோரால் நேற்று உச்ச நீதிமன்றத்தில் விமர்சனத்துக்கு உள்ளான டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர், நேற்று ஓய்வு பெற்றார் என்பதும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon