மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

விமர்சனம்: கென்னடி கிளப்!

விமர்சனம்: கென்னடி கிளப்!

வியூகம் இல்லாத விளையாட்டு!

வெண்ணிலா கபடிக் குழுவின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுசீந்திரன், தன் திரையுலக பயணத்தில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கியிருக்கும் சமயத்தில் கென்னடி கிளப் வெளியாகியிருக்கிறது.

பாரதிராஜா, சசிகுமார், சூரி, பெண்கள் கபடி அணி என பலர் நடித்துள்ள படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் டி.என். தாய் சரவணன் தயாரித்துள்ளார். இசை: டி.இமான், ஒளிப்பதிவு: ஆர்.பி. குருதேவ், படத்தொகுப்பு: ஆண்டனி.

ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் வாழும் வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள பெண்களைக் கொண்ட கபடி குழு ‘கென்னடி கிளப்’. இப்பெண்களுக்கு, முன்னாள் ராணுவ வீரரான சவுரிமுத்து(பாரதிராஜா) பயற்சியளித்து வருகிறார். இப்பெண்களின் திறமையை உலகிற்கு கொண்டு வரவும், அவர்களது பொருளாதார சூழலை முன்னேற்றவும் கனவு காண்கிறார் பாரதிராஜா. மாநில அளவிலான போட்டிகளுக்கு கென்னடி கிளப் தயாராகி வரும் நிலையில், பாரதிராஜாவின் உடல் நிலை மோசமாகிறது. அதனால், ரயில்வே கபடி குழுவில் இருக்கும் தனது முன்னாள் மாணவர் முருகானந்தத்தை(சசிகுமார்) பயிற்சியளிக்க அழைக்கிறார்.

சசிகுமாரின் பயிற்சியால் அப்போட்டிகளில் வெல்கிறது கென்னடி கிளப். அதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் பங்கெடுக்க கென்னடி கிளப்பிலிருந்து ஒரு பெண் தேர்வு செய்யப்படுகிறாள். ஆனால், தேசிய அணியில் தேர்வாக தேர்வுக் குழுவைச் சேர்ந்த முகேஷ் ஷர்மா பெருந்தொகையை லஞ்சமாக கேட்கிறார். அதனால் விரக்தி அடையும் அப்பெண் தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள். இதனால் மற்ற பெண்களின் பெற்றோர் மீண்டும் கபடி விளையாட தங்கள் பெண்களை அனுப்ப மறுக்கிறார்கள்.

அதன் பின் கென்னடி கிளப் என்னானது? பாரதிராஜாவின் கனவு நனவானதா? என்பதே மீதிக் கதை.

கபடி விளையாட்டின் வரலாற்றையும் ஆட்ட விதிகளையும் கூறி படத்தின் ஆரம்பக் காட்சிகளை தொடங்குவது நன்றாக அமைந்திருக்கிறது. கபடிக் குழுவிலிருக்கும் ஒவ்வொரு பெண்ணின் வீட்டுச் சூழலையும் காட்டி அவர்களது கதாபாத்திர பின்புலத்தை நம்மிடம் பதிய வைத்து கென்னடி கிளப்பை தொடங்குகிறார் இயக்குநர் சுசீந்திரன். ஆனால், அனைத்து பெண்கள் கதையும் ஒரே விதமான தன்மையுடன் இருப்பதும், அவ்வளவு சோகமாகவே அனைவரையும் காட்ட வேண்டுமா என்ற கேள்வியுமே எழுகிறது.

கதாபாத்திரங்களாக கபடிக் குழுவிலிருக்கும் பெண்கள் நம் மனதிற்குள் நுழையாவிட்டாலும், கபடி வீராங்கனைகளாக மிளிர்கிறார்கள். கபடிக்காக அவர்கள் அளித்த அர்பணிப்பு ஒவ்வொரு ஆட்டத்திலும் வெளிப்படுகிறது. அது படத்திற்கு இயல்பான பலமாகவும் அமைந்து விடுகிறது.

பாரதிராஜா கதாபாத்திரத்தோடு பொருந்தி, ஆரம்பக் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதே சமயம், உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் அவரது ‘ஓவர்-ஆக்டிங்’ சொதப்புகிறது. சசிகுமார் எல்லாபடத்திலும் சசிகுமார் ஆகவே இருப்பதால் அவரது பங்களிப்பு சரியாகவே அமைந்து விடுகிறது.

கபடி உலகளாவிய போட்டியாக மாறிய பிறகு, திறமை மிகுந்த தகுதியான போட்டியாளர்கள் இந்திய அணியில் இடம்பெறாமல் புறக்கணிப்படுவது குறித்தான அரசியல் தான் கென்னடி கிளப் படத்தின் மையமாக இருக்கின்றது. திரைக்கதையும் அதற்குள்ளேயே பயணித்தாலும்; அணி வெற்றி பெற்றுவிடுமென்ற அதீத நம்பிக்கையில் களத்தில் கவனமற்று ஏனோ தானோ என ஒரு வீரர் விளையாண்டால்; அதுவும் அந்த வீரர் கேப்டனாக இருந்தால்; என்ன நேருமோ அது தான் கென்னடி கிளப் படத்திற்கும் நேர்ந்துள்ளது.

பல்வேறு தளங்களுக்குள் பயணிக்கும் இப்படம், எந்த தளத்திற்குள்ளும் முழுமையாக பேசாமல் அரைகுறையாக இருந்து விடுகிறது. ஒரு நிறுத்தத்திலிருந்து அடுத்த நிறுத்தத்திற்கான இடைவெளி விட்டு திரைக்கதை நகரும் போது, அந்த பயணத்திற்கான நோக்கம் முழுமையடையும். பயணத்தின் போக்கில் உணர்வு ரீதியான அனுபவமும் பார்வையாளனுக்கு கிடைக்கும். கென்னடி கிளப் எந்த நிறுத்தத்திலும் நிற்காமல், ஒரே வேகத்தில் ‘கடகட’வென ஓடிக்கொண்டிருக்கிறது.

அவசர கதியில் பார்சல் கட்டி அனுப்பிவிட்டால் போதும் என்பதைப் போலவே மேம்போக்கான படமாக கென்னடி கிளப் இருக்கின்றது. விளையாட்டு வீரர்களுக்குள் ஒற்றுமை வேண்டும், வேண்டும் எனக் கூறிவிட்டு பாரதிராஜா ஒரு புறமும், சசிகுமார் ஒரு புறமும் அணியை அழைத்துச் செல்ல கபடிக் குழு இவர்களுக்கிடையில் மாட்டித் தவிக்கிறது. அதற்கான காரணம், திரைக்கதை முடிச்சென்று இயக்குநர் நம்பினால், ஆமேன்.

இமான் இசையில் பாடல்களை விட பின்னணி இசை, குறிப்பாக கபடி ஆட்டங்களில் ஒலிக்கும் ’கபடி கபடி’ தீம் துடிப்பாக இருக்கின்றது. ஆனால், முக்கியமான கட்டங்களில் மட்டுமே குறைவாக பயன்படுத்தி இருந்தால் உணர்வு ரீதியாக வேலை பார்த்திருக்கும். ஆரம்பம் முதல், அனைத்து ‘மேட்ச்’களிலும் கபடி தீம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு நன்றாக அமைந்திருக்கிறது. ஆரம்பக்கட்ட காட்சிகளில் கிராமத்தின் நிலப்பரப்பும், கபடி களத்திற்குள் வேகமும் ஈர்க்கிறது. படத்தின் பலமாக இருப்பது தொழில்நுட்பக் குழுவே. கலை : சேகர்.பி; சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்.

வெற்றி பெறக்கூடிய ஒரு விளையாட்டு எந்த வியூகமும், புதுமையுமின்றி வழக்கமான ஒன்றாக சரிந்து விழுகிறது.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon