மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

தரமில்லாத தார் சாலைகள்: தவறு யார் மீது?

தரமில்லாத தார் சாலைகள்: தவறு யார் மீது?

தார் சாலையை பிளந்து பள்ளம் தோண்டிய பிறகு அதனை வெறும் மண்ணைப் போட்டு மூடிவிட்டு அப்படியே விட்டுவிட்ட சம்பவமும், ஒரே இரவில் தரமற்ற தார் சாலை போடப்பட்ட சம்பவமும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நடந்துள்ளது.

சம்பவம்: 1

கடலூர் மாவட்டம் கோண்டூர் கெடிலம் ஆற்றங்கரை பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் 400 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை போடப்பட்டது. அடுத்த சில மாதங்களில் ஊராட்சியில் குடிநீர் குழாய் கொண்டு செல்வதற்காக அந்த சாலையின் நடுவே பள்ளத்தை தோண்டினர். அதன் பிறகு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015-2016 நிதியில் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திற்கு 36.33 லட்சம் செலவில் 2018இல் சாலையமைத்தனர். அதுவும் தரமற்றதாகவே இருந்தது. ஒருவருடத்திற்குள் தற்போது இ.பி கேபிளை பூமிக்குள் புதைக்க எல்&டி நிறுவனம் சாலையின் நடுவே வழிநெடுக பள்ளம் தோண்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அரசு அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோது, “கேபிள் புதைக்கப் பள்ளம் எடுப்பவர்கள்தான் அதனை மூடி சாலையும் போட்டுத் தருவார்கள். அதுதான் டெண்டரில் உள்ளது. கேபிளுக்கு பள்ளம் தோன்றுவதற்கு முன்னர் எப்படி இருந்ததோ அப்படியே சரிசெய்துவிடுவார்கள்” என்றார்.

ஆனால் எல்&டி ஊழியர்களோ, “டெண்டர் எடுக்கும்போதே அதற்குரிய தொகையில் 25% சதவிகிதத்தை கமிஷனாக செலவு செய்திருக்கிறோம். நாங்கள் கேபிள் புதைக்க பள்ளம் தோண்டுவதா அல்லது சாலை போட்டுக் கொண்டிருப்பதா? புதிய சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கும். அதில் போட்டுக்கொடுப்பார்கள்” என்கிறார்.

சாலையில் பள்ளம் தோண்டி வாட்டர் லைன், இ.பி கேபிள், டெலிபோன் கேபிள் கொண்டு செல்வது தவறானது என்று சொல்லும் சில பொறியாளர்கள், “புதைக்கப்பட்ட பைப் லைன்களிலோ அல்லது கேபிளிலோ பழுது ஏற்பட்டால் எதிர்காலத்தில் எவ்வாறு சரிசெய்வது. அதற்கு சாலையை தோண்டிதான் ஆக வேண்டும். வேறு எந்த திட்டமும் இல்லை” என்று வேதனைப்படுகிறார்கள்.

மேலும், ஒரு திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கியதும் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனைகள் செய்த பிறகு அந்த திட்டத்தை நிறைவேற்றினால் அரசு நிதிகள் வீணாகாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சம்பவம்-2

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் நொனையவாடி ஊராட்சியில் உள்ள குமாரமங்கலம் டூ நொனையவாடி வரை 1170 மீட்டர் தூரம் வரையில் கடந்த 2ஆம் தேதி இரவோடு இரவாக அவசரமாக சாலையை அமைத்து முடித்திருக்கிறார்கள். மறுநாள் காலை அவ்வழியாக சென்ற இளைஞர்கள் புதிதாக சாலை முளைத்திருப்பதைப் கண்டுள்ளனர். ஒரே இரவிற்குள் சாலை எவ்வாறு போட முடியும் என்று அதனை பைக் சாவியால் கிளறும்போது தாரோடு ஒட்டியிருந்த ஜல்லிகள் அனைத்தும் இடம்பெயர்ந்து வெறும் பழையபடி மண் மட்டுமே அங்கு இருந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் உலாவவிட்டனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, சாலையமைக்கும் டெண்டரானது உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ.வும், அதிமுக மாவட்டச் செயலாளருமான குமரகுருவின் தம்பி சாய்ராம் மனைவியின் பெயரில் ரூ.45 லட்சத்திற்கு எடுக்கப்பட்டு, எலவானசூர்கோட்டையை சேர்ந்த மதியழகனுக்கு சப் கான்டராக்ட் விடப்பட்டது தெரியவந்தது. சாலையின் தரம் ரூ. 25 லட்சத்திற்குக் கூட தேறாது என்கிறார்கள் அரசு அதிகாரிகள்.

தார்ச் சாலை எப்படிப் போட்டிருக்க வேண்டும் என்று ஒப்பந்ததாராரிடம் கேட்டோம்....

“தார்ச் சாலை போடப்போகும் பாதையை ஜேசிபி எந்திரம் மூலம் முதலில் கொத்திப் புரட்டிப்போடவேண்டும். அதன் பிறகு ஒன்றரை ஜல்லி 15 சென்டி மீட்டர் உயரத்திற்கு கலைக்கவேண்டும். அதை ரோலர் எந்திரத்தால் சமன் செய்த பிறகு முக்கால் ஜல்லி மிக்சிங்கோடு 15 சென்டிமீட்டர் கனத்திற்குக் கலைக்க வேண்டும். அதன் மீது ரோலர் எந்திரத்தை ஓடவைத்து அழுத்த வேண்டும். பின்னர் அதன் மீது பச்சை தார் ஊற்றவேண்டும். பிறகு அரை, கால் ஜல்லியோடு மிக்சிங் கலந்து 2 சென்டிமீட்டர் கனத்துக்குப் போட்டு ரோலர் கொண்டு விட வேண்டும்.

சாலையில் தண்ணீர் நிற்காமல் இருப்பதற்கு சீல் கோடு போடவேண்டும். அதாவது சிப்ஸையும் தாரையும் மிக்சிங்செய்து இழுக்கவேண்டும். அப்போது சாலையின் உயரம் சுமார் 32 சென்டிமீட்டர் கூடியிருக்கும். அதனால் சாலையின் இரு பக்கமும் ஒரு மீட்டர் தூரம் செம்மண் கிராவல் கொட்டி சமன்படுத்த வேண்டும். இதுபோன்ற சாலையை போட்டாலே அரசியல்வாதிகளுக்கு 10 % கமிஷன் கொடுக்க வேண்டி வரும். ஆனால், இப்போது 40 சதவீதம் கமிஷன் கொடுக்கவேண்டியதாக இருக்கிறது. அதனால் அதிகாரிகளும் சாலை தரத்தைப்பற்றிக் கேட்பதில்லை. உளுந்தூர்பேட்டையில் போடப்பட்ட அந்த ரோடு மிக மிகக் கேவலமாக இருந்தது” என்றார்.

சாலை போடுவதை கண்காணிக்க ஊரக வளர்ச்சித்துறையில், தரம் பரிசோதிக்கும் அதிகாரிகள் பலர் இருந்தும், எப்படி இவ்வாறான தரம் இல்லாத சாலைகள் போடப்பட்டன என்பது கேள்வியாக இருக்கும் நிலையில், அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுப்பதுபோல் கமிஷனையும் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்குப் பகிர்ந்துகொடுப்பதாகச் சொல்கிறார்கள் ஒப்பந்ததாரார்கள்.

இனிமேலாவது கமிஷன் வாங்கிக் கொண்டு தரத்தை குறைக்காமல், மக்கள் பயணிக்கும் சாலை என்ற அக்கரையோடு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எம்.பி.காசி


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon