மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

காஷ்மீர் ஆர்ப்பாட்டம்: திமுக போட்ட தீர்மானம்!

காஷ்மீர் ஆர்ப்பாட்டம்:  திமுக போட்ட தீர்மானம்!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து தீர்மானம் இயற்றியுள்ளன.

காஷ்மீர் இரண்டாகப் பிரிப்பு மற்றும் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35ஏவை நீக்கும் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அதைக் கடந்த 6ஆம் தேதி நிறைவேற்றியது மத்திய அரசு. இதற்காக முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட காஷ்மீரின் முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீர் முழுவதும் தொலைத்தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் காஷ்மீருக்கு எதிரான மத்திய அரசு நடவடிக்கைகளைக் கண்டித்தும், காஷ்மீர் தலைவர்களை விடுவிக்கக் கோரியும், தொலைத்தொடர்பு சேவையைச் சீர் செய்ய வலியுறுத்தியும் திமுக தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 22) டெல்லி ஜந்தர் மந்தரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட 14 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர். அப்போது காஷ்மீரில் நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவாக தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. அதில், “ஜம்மு காஷ்மீர் மக்களையோ, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையோ கலந்தாலோசிக்காமல் அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஐ நீக்கி இருப்பதன் விளைவாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்களாகிய நாங்கள் காஷ்மீர் மக்களுக்குத் துணை நிற்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், சிவில் சொசைட்டி உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கைது செய்து தொடர்ந்து வீட்டுச் சிறையில் வைத்திருப்பது கவலையளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் அத்தீர்மானத்தில்,

“வீட்டுச் சிறையில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், அப்பாவி பொது மக்களை மத்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மக்களின் பேச்சுரிமையைப் பறித்தும், அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தும் மத்திய அரசு எடுத்துள்ள கடும் நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பதால் அந்த நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். ஜம்மு காஷ்மீர் மாநிலம் சகஜநிலைக்குத் திரும்புவதற்கும் அம்மாநில மக்கள் தங்களது உற்றார் உறவினர்களைத் தொடர்புகொள்ள தகவல் தொடர்பு சேவையை மீண்டும் அளிக்க வேண்டும்” என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon