மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“தேசிய அளவில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், திமுகவில் உட்கட்சி ரீதியில் அதிரடி மாற்றங்களை செய்ய ஒரு ஆயத்தம் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கான ஆலோசனைகள், விவாதங்கள் வழக்கம்போல ‘இளைஞரணி’ வட்டாரத்தில் கன ஜோராக நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆலோசனையால் மாவட்டச் செயலாளர்கள் வட்டாரம் மறுபடியும் சூடாகியிருக்கிறது.

அதாவது உதயநிதி வட்டாரத்தில் முக்கிய நபராக கருதப்படும் அன்பில் மகேஷ் இது தொடர்பாக உதயநிதியிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அந்த ஆலோசனையில் இளைஞரணி நிர்வாகிகள் சிலரும் கூட இருந்திருகின்றனர். பேசப்பட்டது என்னவென்றால், ‘சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கிட்டே இருக்கு. வேட்பாளர் யார் என்னன்னு நாம இப்ப தனியா ஒரு செலக்‌ஷன் நடத்திக்கிட்டிருந்தாலும் மாவட்டச் செயலாளர்களும், இப்பவே பட்டியல் தயாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதாவது அவங்கவங்க மாவட்டத்துல அவங்களுக்கு யார் தோதா இருப்பாங்கனு கேட்டு ஒரு பட்டியல் ரெடி பண்ணிக்கிட்டிருக்காங்க. இதுல முக்கியமான விஷயம், மாவட்டச் செயலாளர்கள் ரெடி பண்ற பட்டியல்ல இளைஞரணி அமைப்பாளர்களோ, நிர்வாகிகளோ இல்லை. ஏன்னா இப்ப மாவட்டச் செயலாளர்லாம் இளைஞரணி ஏதோ அவங்களுக்கு போட்டி அமைப்பு போல நினைச்சிக்கிட்டிருக்காங்க.

மாவட்டச் செயலாளர்களுக்கு நம்ம கட்சியில கூடுதல் அதிகாரம் இருக்கு. அவங்க ஒத்துழைப்பு இல்லாம வேட்பாளரை நிறுத்த முடியாது. மீறி நிறுத்தினாலும் உள்ளடி வேலை பண்ணவும் தயாரா இருப்பாங்க. அதனால வேட்பாளர் தேர்வுக்கு முன்னாடி, நமக்கு இடைஞ்சலா இருக்கிற சீனியர் மாவட்டச் செயலாளர்களை கௌரவமா ஏதாச்சும் பதவி கொடுத்து ஒதுக்கிட்டு, இளைஞர்களை மாவட்டச் செயலாளர் ஆக்குவோம். இருபது வருசமா மாவட்டச் செயலாளரா இருக்கிறவங்க மேல கட்சிக்குள்ளயே ஒரு பொறாமை இருக்கு. அதை வச்சி அவங்களை மாத்திட்டு நம்ம ஆளுங்களை மாவட்டச் செயலாளர்களா கொண்டுவந்துட்டோம்னா, நாளைக்கு சட்டமன்ற வேட்பாளர் தேர்வு நமக்கு இன்னும் ஈசியா இருக்கும்’ என்பதுதான் மகேஷ் உள்ளிட்டவர்கள் உதயநிதியிடம் வைத்த கோரிக்கை. அன்பில் மகேஷுக்கு தானும் மாவட்டச் செயலாளர் ஆக ஆசை. ‘சரி அப்பாகிட்ட பேசுறேன்’ என்று இதற்கு பதிலும் சொல்லியிருக்கிறார் உதயநிதி.

மாவட்டச் செயலாளர்கள் மட்டுமல்ல... திமுகவின் தலைமைப் பதவிகள் வரை மாற்றம் செய்யவும் உதயநிதியின் உள் வட்டாரங்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றார்கள். இதன் முதல் மற்றும் முக்கிய படியாக திமுக பொதுச் செயலாளர் பதவியில் இருக்கும் பேராசிரியர் அன்பழகனின் மூப்பு கருதி அவரை அப்பொறுப்பில் இருந்து விடுவித்துவிட்டு, துரைமுருகனை பொதுச் செயலாளர் ஆக்கி உயரத்தில் உட்கார்த்தி வைத்துவிடுவது என்பது ஒரு திட்டம். திமுகவின் வழக்கப்படி இந்த சட்டதிட்ட மாற்றத்தை எதிர்வரும் பொதுக்குழுவில் வைத்து நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பது அவர்களின் யோசனை.

துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆகிவிட்டால், அவர் இப்போது வகித்து வரும் பொருளாளர் பதவியை, இப்போது அறிவிக்கப்படாத பொருளாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் எ.வ.வேலுவிடம் முறையாகக் கொடுத்துவிடுவார்கள். வேலுவுக்கு பொருளாளர் பதவியை வழங்குவதற்காகத்தான் துரைமுருகனை பொதுச் செயலாளர் என்ற அலங்காரப் பதவியில் அமர்த்துவது என்பதே இளைஞர் வட்டாரத்தின் திட்டம். பேராசிரியர் அன்பழகன் முழு ஓய்வெடுத்து வரும் நிலையில் சில நேரம் தனது உதவியாளர்களிடம் நன்றாகப் பேசுகிறார். இந்நிலையில் சில நாட்களில் பேராசிரியரை அறிவாலயத்துக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினால் இயல்பாகவே அவருக்கு ஒரு தெம்பு வரும் என்று கருதி அதற்கான ஏற்பாடுகளில் இருக்கும் நிலையில்தான் அந்தப் பக்கம் இப்படி ஒரு திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

இதுமட்டுமல்ல உதயநிதியை ப்ரமோட் செய்வதில் கனிமொழிக்கும் இப்போது சில வருத்தங்கள் இருக்கிறது. இது உதயநிதிக்கே தெரியும். இந்த நிலையில் அதிமுகவில் இருப்பது போன்ற இளம்பெண்கள் பாசறை போல அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதற்கு கனிமொழியை செயலாளராக அறிவிக்கலாம் என்று ஒரு திட்டமும் ஸ்டாலின் வீட்டு வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதை சபரீசன் தான் சொல்லியிருக்கிறார். உதயநிதியும் அவரது டீமும் நடத்தும் ஆலோசனைகள் எல்லாம் ஒவ்வொரு நாளும் ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தப்படுகின்றன. இதில் சில விஷயங்கள் மாவட்டச் செயலாளர்களுக்கும் சீனியர்களுக்கும் லீக் ஆகின்றன.

நடப்பதையெல்லாம் கேள்விப்பட்ட சீனியர்கள், ‘கலைஞர் எவ்வளவு பெரிய அரசியல் ஞானி. அவர் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது கட்சியில பெரிய மாற்றங்களை எல்லாம் பண்ண மாட்டாரு. ஆளுங்கட்சியா இருக்கும்போதுதான் கட்சிப் பதவிகள்லயோ, அமைப்புகள்லயோ மாற்றம் பண்ணுவாரு. ஏன்னா தலைமையோட முடிவுகள்ல அதிருப்தி இருந்தா கூட ஆளுங்கட்சியா இருக்கும்போது நிர்வாகிகள் பெரிசா எதிர்ப்பு காட்ட மாட்டாங்க. அப்படி காட்டினாலும் அரசு என்ற பலத்தை வச்சு சமாளிச்சிடலாம். அதனால பெரிய மாற்றங்களை எல்லாம் ஆட்சியில இருக்கும்போதுதான் கலைஞர் பண்ணுவார். அதேபோல ஸ்டாலினும் நடந்தாதான் நல்லா இருக்கும். முதல்ல கட்சியை ஆட்சியில அமர்த்தணும். அப்பதான் மற்ற மாற்றங்களை எளிதில் பண்ணலாம்’ என்று ஸ்டாலினுக்கும் தங்கள் கருத்துகளைக் கொண்டு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் சீனியர்கள்” என்ற தகவலுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


வெள்ளி, 23 ஆக 2019

அடுத்ததுchevronRight icon