மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 28 மே 2020

சென்னைக்கு வந்த அமெரிக்க காவல் கப்பல் ‘ஸ்ட்ராட்டன்’!

சென்னைக்கு வந்த அமெரிக்க காவல் கப்பல் ‘ஸ்ட்ராட்டன்’!

இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படைகள் இணைந்து கூட்டுப்பயிற்சி எடுத்துக் கொள்ள, அமெரிக்காவின் கடலோர காவல்படை ரோந்து கப்பல் ஸ்ட்ராட்டன் , சென்னை துறைமுகம் வந்தடைந்தது. அமெரிக்க கப்பற்படை வீரர்களுக்கு, இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தளபதியான பரமேஸ்வரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் இரு நாட்டு கொடிகளை அசைத்து அமெரிக்க கடலோரக் காவல் படையினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்க மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் தங்களுக்கு இடையேயான பல்வேறு திறன்களை பரிமாறிக் கொள்ளவும் இரு நாடுகளின் நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டும் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்திய கடலோரக் காவல்படை ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகள் நடத்தியிருந்தது. இந்தநிலையில் தற்போது முதன் முறையாக அமெரிக்க கடலோர காவல் படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அமெரிக்க கடலோரக் காவல் படை ரோந்து கப்பலான ‘ஸ்ட்ராட்டன்’ சென்னை துறைமுகம் வந்தடைந்தது. சென்னை அருகே நடுக்கடலில் நடைபெறும் பயிற்சியில் இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பலான சவுரியா மற்றும் 2 சிறிய கப்பல்கள் பங்கேற்கவுள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான இந்த கூட்டுபயிற்சியின் போது, இரு நாட்டினரின் தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய உத்திகள், தகவல் பரிமாற்றம், கலந்துரையாடல், உள்ளிட்டவை இடம்பெறவுள்ளது.

மேலும் கடற்கொள்ளையர்களால் கப்பல் ஏதேனும் கடத்தப்பட்டால் அதனை மீட்பது, கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை காப்பாற்றுவது, தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் தீயை அணைத்து மாலுமிகளை காப்பாற்றுவது, கப்பல்களுக்கு இடையே பொருட்களை பரிமாற்றம் செய்துகொள்வது எனப் பல்வேறு விதமான பாதுகாப்பு முறை குறித்த பயிற்சி எடுத்துக் கொள்வதோடு, பல்வேறு சாகசங்களிலும் இருநாட்டு வீரர்களும் இணைந்து ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

சென்னை வந்துள்ள அமெரிக்க கடற்படை ரோந்து கப்பல் வரும் ஆகஸ்டு 27-ஆம் தேதி மீண்டும் திரும்ப புறப்பட்டு செல்கிறது.

வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon