தன்னிடம் கணக்கில் வராத சொத்துக்கள் என்று எதுவும் இல்லையென சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 21ஆம் தேதி இரவு சிபிஐயால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ரோஸ் அவேன்யூ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்தை, வரும் 26ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனையடுத்து, சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையே கார்த்தி சிதம்பரத்திற்கும் கணக்கில் வராத சொத்துக்கள் உள்ளதாக சில ஆங்கிலத் தொலைக்காட்சிகள் செய்திகள் வெளியிட்டு வந்தன.
இதனை மறுக்கும் வகையில் இன்று இன்று (ஆகஸ்ட் 23) கார்த்தி சிதம்பரம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த சில நாட்களாக பல்வேறு தொலைக்காட்சிகளில் என்னுடைய சொத்துக்கள் குறித்து விவாத நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். இவற்றை விசாரணை அமைப்புகளிலிருந்து வாங்கினார்களா அல்லது அவற்றுக்கான ஆதாரங்கள் எங்குள்ளது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“என்னுடைய சொத்துக்கள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு, முறையாக கணக்கு வழக்குகளை தாக்கல் செய்து பராமரித்து வருகிறேன்.நான் இரண்டு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு அதில் ஒருமுறை வெற்றியும் பெற்றுள்ளேன். வேட்புமனு தாக்கலின்போது சொத்துக்கள் குறித்து சரியான தகவல்களை தந்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளவர்,
நீங்கள் சொல்லும் வருமான வரித் துறை போன்ற அமைப்புகள், வருமானத்தில் காட்டப்படாத சொத்துக்களை நான் வைத்திருப்பதற்கு ஆதாரம் வைத்திருந்தால், அவர்களே எனக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மேலும், சொத்துக்கள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்திருந்தால், என்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்திருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தன்னுடைய சொத்துக்கள் குறித்த உண்மை நிலையை அறிந்து ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, நியூஸ் 18, டைம்ஸ் நவ் ஊடகங்களின் பெயரையும், சில பத்திரிகையாளர்கள் பெயரையும் டேக் செய்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.
மேலும் படிக்க
துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!
யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!
பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?
ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!
டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!